பசுமைப் போர்வை அதிகரிக்க இந்தியா முழுதும் 40 காடுகளை உருவாக்கிய குஜராத் தொழில்முனைவர்!
ராதாகிருஷ்ணன் நாயர் மரங்களை நடுவதுடன் வறுமைக்கோட்டிற்குக் கீழ் வாழும் 10,000 தனிநபர்களின் வாழ்க்கை மேம்பட மஹாராஷ்டிரா மற்றும் குஜராத்தில் உள்ள பயிற்சி மையங்களில் பயிற்சியளித்துள்ளார்.
புவி வெப்பநிலையைக் கட்டுப்படுத்த நமக்கு இன்னும் பன்னிரண்டு ஆண்டுகள் மட்டுமே கால அவகாசம் இருப்பதாக 2018-ம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்றத்திற்கான சர்வதேச அரசாங்க குழு (ஐபிசிசி) அறிக்கை தெரிவிக்கிறது. அதை நாம் செய்யத் தவறினால் அதிகரிக்கும் வெப்பநிலையானது வெப்பத்தை தீவிரமாக்கி, கடல்மட்டத்தை அதிகரிக்கச் செய்து, பஞ்சமும் வெள்ளமும் ஏற்பட்டு பேரழிவை சந்திக்க நேரிடும்.
புவியைப் பாதுகாக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் க்ளீன் ஆற்றலுக்கு மாறி கார்பன் வெளியேற்றத்தைக் குறைக்கவும் பசுமைப் போர்வையை அதிகரிக்கவும் இலக்குகள் நிர்ணயித்துள்ளது.
தற்சமயம் இந்தியாவில் 24.4 சதவீதம் பசுமை போர்வை உள்ளது. இதை 33 சதவீதமாக உயர்த்த இந்தியா திட்டமிட்டுள்ளது. அரசாங்கம் மட்டுமல்லாது பல்வேறு அரசு சாரா நிறுவனங்களும் தனிநபர்களும் இந்த நோக்கத்தில் பங்களிக்க முன்வருகிறது. இவர்களுள் ஒருவர்தான் 48 வயதான ராதாகிருஷ்ணன் நாயர். இவர் இதுவரை ஆறு லட்சத்திற்கும் அதிகமான மரங்களை நட்டுள்ளார்.
ராதாகிருஷ்ணன் குஜராத்தில் உள்ள ’உமர்காம் அப்பாரல் வெல்ஃபேர் அசோசியேஷன்’ தலைவர் ஆவார். 2017-ம் ஆண்டு மஹாராஷ்டிர அரசாங்கத்தால் ’வசுந்தரா விருது’ உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் பாராட்டுகளையும் பெற்றுள்ளார். இவர் ராஜஸ்தான், குஜராத், வங்காளம், சத்தீஸ்கர் உள்ளிட்ட ஏழு மாநிலங்கள் முழுவதும் 40 காடுகளை உருவாக்கியுள்ளார்.
ராதாகிருஷ்ணன்; சுற்றுசூழல் ஆர்வலராக செயல்படுவதற்கு முன்பு குஜராத்தில் ஒரு தொழில்முனைவராகவே செயல்பட்டு வந்தார். இவரது நிறுவனமான ’ஸ்ரீ பௌர்னிகா எக்ஸ்போர்ட்ஸ்’ நிறுவனத்தில் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவர்களை பணியிலமர்த்தி அவர்கள் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தியுள்ளார்.
ராதாகிருஷ்ணன் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு குஜராத்தில் சாலை திட்டம் ஒன்றை செயல்படுத்தும் பொருட்டு சுமார் 175 மரங்கள் வெட்டப்பட்டதைக் கண்டார். அப்போதுதான் மரங்கள் நடவேண்டும் என்கிற எண்ணம் ஏற்பட்டது. இவர் ’தி நியூஸ் மினிட்’ உடன் பகிர்ந்துகொள்கையில்,
“ஒரு பார்ட்னருடன் இணைந்து ஒரு சிறு நிலத்தை வாங்கினேன். நாங்கள் அங்கு 1,500 மரங்களை நடுவதற்காக ஜப்பானியர்களின் ’அகிரா மியாவாக்கி’ முறையைப் பயன்படுத்தத் தீர்மானித்தோம். ஜப்பானிய தாவிரவியலாளரான அகிரா மியாவாக்கி காடுகளை மீட்டெடுக்கும் முறைக்கு பெயர்போனவர்,” என்றார்.
அந்த முறையைக் கற்றுக்கொடுக்கும் ஜப்பானிய குழு இந்தியா வந்திருந்தது. அதைக் கற்றுக்கொள்ள ராதாகிருஷ்ணனும் அவரது பார்ட்னரும் அவர்களை தொட்ர்பு கொண்டனர்.
ராதாகிருஷ்ணன் குஜராத்தின் உம்பர்கான் பகுதியில் ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் முதல் காட்டை உருவாக்கினார். இந்தக் காடு விரைவாக செழிப்படைந்து மஹாராஷ்டிராவைச் சேர்ந்த சில அதிகாரிகளின் கவனத்தை ஈர்த்தது. ரசாயனக் கழிவுகள் அப்புறப்படுத்தப்படும் பகுதியிலும் இதேபோன்று அமைக்குமாறு அவர்கள் ராதாகிருஷ்ணனிடம் கேட்டுக்கொண்டனர்.
2016-ம் ஆண்டு 38 வகையான 32,000 மரக்கன்றுகளை நட்டார். ராதாகிருஷ்ணன் ’மஹாத்மா காந்தி ஆக்சிசோன்’ என்கிற பெயரில் சத்தீஸ்கரின் பண்ட்ரிபனி, ஜுரிதா கிராமங்களில் உள்ள ஏழு ஏக்கர் நிலப்பரப்பில் ஒரு லட்சத்திற்கும் மேலான மரங்களை நட்டுள்ளதாக ’மாத்ருபூமி’ குறிப்பிடுகிறது. அதுமட்டுமின்றி காட்டின் நடுவே இரண்டரை ஏக்கர் நிலப்பரப்பில் செயற்கை ஏரி ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது.
புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் பெயரில் ஒரு காட்டை உருவாக்க திட்டமிட்டுள்ளார். இந்த காட்டிற்கு ’புல்வாமா ஷாஹித் வன்’ என பெயரிடப்பட்டு 40 வகையான 40,000 மரங்கள் நடப்பட உள்ளது.
ராதாகிருஷ்ணன் இத்தகைய பசுமையான காடுகளை உருவாக்குவதில் ஆர்வம் காட்டுவதுடன் குஜராத் மற்றும் மஹாராஷ்டிராவில் மூன்று பயிற்சி மையங்களையும் நடத்தி வருகிறார். இங்கு வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் 10,000 தனிநபர்களின் வாழ்க்கை மேம்பட பயிற்சியளித்துள்ளார்.
கட்டுரை : THINK CHANGE INDIA