லாக்டவுனிலும் கிராமங்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை டெலிவரி செய்யும் சென்னை நிறுவனம்!
16 மாநிலங்களில் 20 லட்சம் வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ள ‘Boonbox' மருந்து, நுகர்வோர் பொருட்கள், மளிகைப் பொருட்களை சிறு கிராமங்கள் வரை கொண்டு சேர்க்கிறது.
'பூன்பாக்ஸ்' 'Boonbox' தளம் 2011-ம் ஆண்டு ராமச்சந்திரன் ராமநாதன், கார்த்திக் நடராஜன், நாராயணன் ஆகியோரால் நிறுவப்பட்டது. நிறுவனர்களான ராமச்சந்திரன், கார்த்திக் இருவரும் டிவிஎஸ் நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றியபோது டாக்டர் சி.கே பிரகலாத் வணிக உத்திகளை பின்பற்றி வந்தனர்.
இதில் கிராமப்புறச் சந்தைகளில் கவனம் செலுத்துவதற்கான வாய்ப்புகள் தெரியவந்தது. இதுவே கிராமப்புறங்களில் சேவையளிப்பதற்கான துவக்கப்புள்ளியாக அமைந்தது. அதன் விளைவாக உருவானதே பூன்பாக்ஸ்.
Boonbox இந்தியாவின் கிராமப்புறங்களுக்குப் பொருட்களையும் சேவைகளையும் கொண்டு சேர்க்க உதவும் பிரத்யேகத் தளமாகும். 20,000-க்கும் குறைவான மக்கள்தொகை கொண்டுள்ள கிராமங்கள் மற்றும் சிறு நகரங்களுக்கு மட்டுமே இவர்கள் சேவை அளிக்கின்றனர்.
“ஆரம்பக்கட்டமாக நிறுவனர்கள் நாங்களே முதலீடு செய்தோம். 2014ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்தியன் ஏஞ்சல் நெட்வொர்க்கிடம் இருந்து 2.6 கோடி நிதி உயர்த்தினோம்,” என்றார் ராமச்சந்திரன்.
இந்நிறுவனம் இந்தியன் ஏஞ்சல் நெட்வொர்க், கீரெட்சு ஃபோரம் சென்னை போன்ற ஏஞ்சல் நெட்வொர்க்குகள், சீரிஸ் ஏ முதலீட்டாளர்களான வென்சர் ஈஸ்ட், ஓரியோஸ் மற்றும் ஐஏஎன் ஃபண்ட் ஆகிய நிறுவனங்கள் மூலம் இதுவரை 7 மில்லியன் டாலர் நிதி உயர்த்தியுள்ளது.
ஸ்மார்ட்ஃபோன், வீட்டு உபயோகப் பொருட்கள் போன்றவற்றை சிறு கிராமங்களுக்கு விநியோகிக்கும் ‘பூன்பாக்ஸ்’ 16 மாநிலங்கள் முழுவதும் 2 மில்லியன் வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது.
இந்த பிராண்டின் செயல்பாடுகள் மீது வாடிக்கையாளர்கள் அதிக நம்பிக்கைக் கொண்டுள்ளனர். கிராமப்புற நுகர்வோர்களுக்கான விற்பனையின் மீது லாபம் கிடைப்பதாக நிறுவனர்கள் தெரிவிக்கின்றனர்.
2019 நிதியாண்டில் 145 கோடி ரூபாயாக இருந்த பூன்பாக்ஸ் வருவாய் 2020 நிதியாண்டில் 230 கோடி ரூபாயாக உள்ளது.
இந்நிறுவனத்தின் பெரும்பாலான பொருட்கள் சீனாவில் இருந்து பெறப்படுவதால் கோவிட்-19 காரணமாக சீனாவில் இருந்து பொருட்களைப் பெருவதில் சிக்கல் ஏற்பட்டது. மார்ச் மாதம் முதல் நாட்டில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால், டெலிவரி செய்வதில் சிக்கல் ஏற்பட்டதால் இவர்களுக்கு ஆர்டர்கள் கிடைக்கவில்லை. ஏற்கெனவே பெறப்பட்ட ஆர்டர்களையும் பூர்த்தி செய்யமுடியாமல் போனது.
எனவே கோவிட்-19 தொற்றுக்கு எதிராக உலகமே போர்கால அடிப்படையில் நடவடிக்கைகள் எடுத்துவரும் இன்றைய சூழலில் பூன்பாக்ஸ் கிராமப்புறங்களுக்கு வழங்கும் சேவையை மாற்றியமைக்கத் தீர்மானித்துள்ளது.
ஆரம்பக்கட்டமாக தமிழ்நாடு, கர்நாடகா, ஒரிசா ஆகிய மாநிலங்களில் உள்ள கிராமங்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் விநியோகிக்கப்படுவதை உறுதிசெய்ய ‘மிஷன் லைஃப்லைன் பாரத்’ என்கிற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்தப் பகுதிகளில் அத்தியாவசியப் பொருட்கள் தடையின்றி தொடர்ந்து விநியோகிக்கப்படுவதை உறுதிசெய்வதற்காக பூன்பாக்ஸ் இந்த முயற்சியின் மூலம் மத்திய மற்றும் மாநில அரசாங்கங்கள், வளர்ச்சி நிதி நிறுவனங்கள், கார்ப்பரேட் ஃபவுண்டேஷன் மற்றும் டிரஸ்ட் ஆகியவற்றுடன் இணைந்து செயல்படுகிறது.
இந்த முயற்சியின் மூலம்,
- மருந்துகள்
- எஃப்எம்சிஜி பொருட்கள்
- சுகாதாரப் பொருட்கள்
- அத்தியாவசிய மளிகைப் பொருட்கள்
ஆகியப் பொருட்கள் தொடர்ந்து விநியோகிக்கப்படுவது உறுதிசெய்யப்படும்.
பூன்பாக்ஸ் சிஇஓ மற்றும் நிறுவனர் ராமச்சந்திரன் ராமநாதன் இதுபற்றி கூறும்போது, “கோவிட்-19 அச்சுறுத்தல் அதிகரித்து வரும் சூழலில் அத்தியாவசியப் பொருட்கள் நாடு முழுவதும் உள்ள அனைவருக்கும் கிடைக்கவேண்டியது அவசியம். இந்தியாவில் 70 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் கிராமப்புறங்களிலும் சிறு நகரங்களிலும் வசிக்கின்றனர். அதாவது கிட்டத்தட்ட 138 மில்லியன் வீடுகள் இந்தப் பகுதிகளில் வசிக்கின்றன.
இந்தக் கடினமான சூழல்களில் அந்தக் குடும்பங்களுக்கு அடிப்படையான அத்தியாவசிப் பொருட்கள் கிடைக்கவேண்டியது முக்கியம். நாடு முழுவதும் முடக்கப்பட்டுள்ளதால் விநியோகச் சங்கிலி தடைபட்டுள்ளது. இதனால் இந்தப் பகுதிகளுக்கு அத்தியாவசிப் பொருட்கள் பற்றாக்குறை நிலவுகிறது. எங்களது முயற்சி இந்தப் பகுதிகளுக்கு முக்கியப் பொருட்கள் விநியோகிக்கப்படும் செயல்முறையை எளிதாக்கும்,” என்றார்.
பூன்பாக்ஸ்; பொருட்களை சேமிக்கும் அதன் மையங்களில் இருந்து பொருட்களைக் கொண்டு செல்ல அனுமதிப் பெற்றுக்கொண்டு கிராமங்களுக்கு அத்தியாவசியப் பொருட்களைக் கொண்டு சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
“நாங்கள் இந்தியாவின் முக்கியப் பிரிவான கிராமப்புறங்களில் கவனம் செலுத்துகிறோம். நாங்கள் அத்தியாவசியப் பொருட்களையும் சேவைகளையும் கிராமப்புற வாடிக்கையாளர்களுக்குத் தொடர்ந்து வழங்குவோம். இந்தப் பகுதிகளில் தடைபட்டுள்ள விநியோகச் சங்கிலி அமைப்பை சீரமைப்பதில் பங்களிப்போம். கிராமப்புற அளவில் வாழ்வாதாரம் மேம்படுவதற்கு எங்களது வணிக மாதிரி உதவும் என நம்புகிறோம்,” என்றார்.