அத்தியாவசியப் பொருட்கள், மருத்துவப் பொருட்கள் டெலிவரியில் முன்னுரிமை: அமேசான் அறிவிப்பு!
சமூக விலகல் அவசியம் என்பதால் மக்கள், குறிப்பாக முதியவர்கள் மற்றும் நோயுற்றவர்களின் அத்தியாவசியத் தேவைகளை அவர்களது வீட்டிற்குச் சென்று சேர்ப்பதில் அமேசான் தீவிரமாகவுள்ளது.
கொரோனா அச்சுறுத்தலின் எதிரொலியாக அமேசான் தளம் மருத்துவப் பொருட்கள் மற்றும் வீட்டிற்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கு முன்னுரிமை அளித்து வருகிறது. மற்ற பொருட்களை அனுப்புவதை நிறுத்திவிட்டு இந்தப் பொருட்களுக்கு முன்னுரிமை அளிக்கிறது.
"மக்கள் ஆன்லைனில் ஷாப்பிங் செய்வது அதிகரித்துள்ளது. இதனால் வீட்டிற்குத் தேவைப்படும் அத்தியாவசியப் பொருட்களுக்கும் மருத்துவப் பொருட்களுக்கும் தட்டுப்பாடு நிலவுகிறது,” என்கிறது இந்தத் தளம்.
"வீட்டிற்குத் தேவையான அத்தியாவசியமான பொருட்கள், மருத்துவப் பொருட்கள் மற்றும் தேவை அதிகமுள்ள இதர பொருட்களை எங்களது மையங்களுக்குக் கொண்டு வருவதற்கு முக்கியத்துவம் அளித்து வருகிறோம். இந்த நடவடிக்கையின் மூலம் இத்தகைய பொருட்களை விரைவாகப் பெற்றுக்கொண்டு, இருப்புகளை அதிகப்படுத்தி, வாடிக்கையாளர்களின் தேவைகளை விரைவாக பூர்த்திசெய்யமுடியும்,” என்று தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பலர் வெளியில் செல்வதைக் குறைத்துக்கொண்டிருப்பதால் டாய்லெட் டிஷ்யூ, மளிகைப் பொருட்கள், செல்லப் பிராணிகளுக்குத் தேவையான பொருட்கள் என அனைத்துத் தேவைகளுக்கும் அமேசான் தளத்தை நாடுகின்றனர்.
"தேவைகள் அதிகரித்திருப்பதால் அவற்றைப் பூர்த்திசெய்ய அமேசான் கடும் அழுத்தத்தை சந்தித்து வருகிறது. டாய்லெட் பேப்பர் போன்ற பொருட்களை எப்போதும் அமேசானில் விற்பனைக்குக் கிடைக்கும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்,” என்றார் ஆய்வாளரான பாப் ஓ டானல்.
அமேசான் நிறுவனம் பல ஆண்டுகளாக சேமிப்புக்கிடங்குகள், விநியோகம், டெலிவரி ஆகியவற்றில் அதிகமாக முதலீடு செய்துள்ளது. விரைவாக லாபத்தை எதிர்நோக்கும் வால் ஸ்ட்ரீட் முதலீட்டாளர்களுக்கு இது ஏமாற்றத்தை அளித்திருக்கலாம். ஆனால் இதுபோன்ற நெருக்கடியான சூழல்களில் அனைவரும் விரும்பித் தேர்வு செய்யும் மின்வணிகத் தளமாக அமேசான் இருப்பதால் அந்த முதலீடுகள் தற்போது பலளிப்பதாகவே தோன்றுகிறது.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக வெளியில் செல்ல இயலாத அல்லது வெளியில் செல்வதற்கு அச்சப்படும் மக்களுக்கு அமேசான் ஒரு வரப்பிரசாதமாக மாறும் பட்சத்தில் ஏற்கெனவே மின்வணிக தளங்களின் மூலம் பொருட்களை வாங்குவோர் மேலும் சிறப்பாக இந்தத் தளங்களில் இணைந்திருப்பதுடன் உலகம் முழுவதும் புதிய பயனர்கள் இணையக்கூடும் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அமேசான் ஒரு ஹீரோவாகவே கருதப்படும் என்று Moor Insights and Strategy நிறுவனத்தின் பேட்ரிக் மூர்ஹெட் குறிப்பிட்டுள்ளார்.
சியாட்டில் நகரைச் சேர்ந்த அமேசான் நிறுவனம் மணிக்கணக்கு பணியாளர்களுக்கான ஊதியத்தை இந்த வாரம் உயர்த்தியுள்ளது. அத்துடன் கூடுதலாக 1,00,000 பேரை பணியிலமர்த்தவும் திட்டமிட்டுள்ளது.
"சமூக விலகல் அவசியம் என்பது வலியுறுத்தப்படுவதால் மக்கள், குறிப்பாக முதியவர்கள் மற்றும் நோயுற்றவர்களின் அத்தியாவசியத் தேவைகளை அவர்களது வீட்டிற்குச் சென்று சேர்ப்பது அவசியமாகிறது. நுகர்வோர் தேவைகள் அதிகரித்திருப்பதால் தொழிலாளர்கள் தேவையும் குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்துள்ளது,” என்று உலகளாவிய செயல்பாடுகளின் மூத்த துணைத் தலைவர் டேவ் கிளார்க் தெரிவித்தார்.
முக்கியப் பொருட்களான முகக்கவசங்கள், கைகளை கழுவப் பயன்படுத்தும் சானிடைசர்கள் போன்றவற்றை கையிருப்பாக வைத்துள்ள புதிய விற்பனையாளர்கள் இந்தப் பொருட்களின் விலையை அதிகரித்து வரும் நடவடிக்கைகளையும் அமேசான் முறியடித்துள்ளது.
”இது போன்றோர் கூடுதல் விலைக்கு விற்பனை செய்வது குறித்த தகவல்களை அமேசான் வெளியுலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டுகிறது,” என்று Enderle Group ஆய்வாளர் ராப் எண்டெர்லி தெரிவிக்கிறார்.