'உழைப்பின் வியர்வையில் நனைந்த காகிதமே ரூபாய் நோட்டு'– அமேசிங் ஆட்டோ அண்ணாதுரையின் பயணம்!
யார் இந்த அண்ணாதுரை?
செப்டம்பர் மாதம் 15ம் தேதி 1984ம் ஆண்டு தஞ்சையில் உள்ள பேராவூணி என்ற இடத்தில் கணேசன் மற்றும் அம்சவள்ளி என்ற தம்பதிக்கு பிறந்தவர் அண்ணாதுரை. அறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் அன்று பிறந்த காரணத்தினால் இவருக்கு அண்ணாதுரை என்ற பெயர் சூட்டப்பட்டது. இவர் பிறந்த சில நாட்களிலேயே இவரின் தந்தை குடும்பத்துடம் மெட்ராஸுக்கு குடியேறினர். இவர் சென்னையில் உள்ள செயிண்ட் ஜோசெப் பள்ளிக்கூடத்தில் கல்வி பயின்றவர். கல்வி பயிலும் காலங்களில் குடும்பத்தில் ஏற்பட்ட சூழ்நிலைகளால் தனது பள்ளிக்கூட வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்தார் இவர். பின்பு சில நாட்கள் இடைவெளிக்கு பின் ஷேர் ஆட்டோ ஓட்டுனராக சென்னையில் தனது பயணத்தை துவங்கினார். இவரது இந்த பயணம் ஐந்து வருங்களாக தொடர்ந்து வருகிறது.
தமிழ் யுவர்ஸ்டோரி நடத்திய பிரத்யேக உரையாடல் இதோ...
ஆட்டோவும்-அண்ணாதுரையும்:
இவரின் முதல் ஷேர் ஆட்டோ பயணம் நான்கு சக்கரம் கொண்ட வெள்ளை ஷேர் ஆட்டோ மாடலில் துவங்கியது. தனது ஆட்டோவில் பயணிப்போருக்கு வசதிகள் ஏற்படுத்தித் தருவது தனது கடமை என்றும் சேவை என்றும் கருதினார். பின்பு முதல் கட்டமாக தனது ஆட்டோவில் செய்தித்தாள் மற்றும் மாத இதழ்களை வைத்தார். இவரது ஆட்டோவில் பயணிக்கத் துவங்கிய மக்கள் பொழுதைப்போக்க அவற்றை படிக்கத் துவங்கினர். இதை பார்த்த அண்ணாதுரை, தனது ஆட்டோவில் பயணிக்கும் வாடிக்கையாளர்களை மகிழ்ச்சியாகவும் வசதியாக வைத்துக்கொள்வதில் தான் தனது மகிழ்ச்சியும் உள்ளது என்று உணர்ந்தார். இதை தொடர்ந்தே அவர் தனது ஆட்டோவை மேலும் தொழில்நுட்பம் நிறைந்த ஆட்டோவாக அலங்கரிக்க முடிவெடுத்தார்.
அண்ணாதுரையின் கேட்ஜெட் ஆட்டோ:
செய்தி நாளிதழ்கள் மற்றும் மாத நாளிதழ்களை வாடிக்கையாளர்களுக்கு அளித்து வந்த அண்ணாதுரை, அடுத்தக்கட்டமாக தனது ஆட்டோவில் தொழில்நுட்ப கேட்ஜெட்களை பொருத்த முடிவு செய்தார். முதலில் ஆட்டோவில் பயணிப்போரின் பயனத்திற்கு ஏற்ப இண்டர்னெட் வைஃபை (internet wifi) பொருத்தினார். பின்பு அதன் மூலம் அவரது ஆட்டோவில் பயணிக்கும் அனைவருக்கும் இலவசமாக இண்டர்னெட் சேவையை அளித்தார். ஒருபடி மேல் போய் அதிவிரைவு இணையச் சேவையை பொருத்தி, தனது ஆட்டோ சவாரிகளை மகிழ்ச்சியில் திளைக்கவைத்தார்.
“என்னோட ஆட்டோ பயணிகள் அதிகபட்சமா 20 நிமிஷம் பயணம் செய்ரவங்களா இருப்பாங்க. அந்த 20 நிமிஷத்துல அவங்க நல்ல இண்டர்நெட் சேவை பெறனும். அவங்களோட திருப்தி தான் எனக்கு மகிழ்ச்சி. அதற்காகவே நான் ஸ்பீடு அதிகமா இருக்குற இண்டர்நெட் பேக்கை தேர்ந்தெடுத்தேன். கஸ்டமர்ஸ் குறைந்தபட்சம் 200mb-யாவது உபயோகிக்கத் தகுந்தா மாதிரி இருக்கும்.” என்கிறார் அண்ணாதுரை.
இந்த சேவையோடு நிறுத்திக்கொள்ளாமல் தனது வாடிக்கையாளர்கள் நினைத்திராத அளவு மேலும் பல சேவைகளை அளித்தார் அண்ணாதுரை. முதல் ஒரு இணைய சேவை பொருத்திய இவரது மனதில் ஒரு கேள்வி எழுந்தது. ஒரு வேளை இந்த சேவை திடீரென செயலிழந்தால் அது வாடிக்கையாளர்களை மகிழ்ச்சியடைய செய்யாது என்பதால் மேலும் இரண்டு இணைய சேவைகளை பொருத்தினார். மேலும் இதனோடு கூடுதலாக ஸ்மார்ட்போன் மற்றும் டேப்லெட்களை வாங்கினார். இதை இவரது அட்டோவில் ஸ்மார்ட்போன் வசதி இல்லாமல் பயணிப்போரின் உபயோகத்திற்கு வைத்தார்.
“என்னோட ஆட்டோல ஸ்மார்ட்போன் இல்லாமல் பயணம் செய்பவங்களும் மற்றவர்களைப் போலவே இந்த வசதியை எல்லாமல் அனுபவிக்கனும். அதுக்காகவே நான் போன் மற்றும் டேப் வங்கினேன்,” என்கிறார்.
அதோடு இந்த ஆண்டு கூடுதலாக இவர் ஐ.பேட், ப்ரோ டேப்லெட்டையும் வாங்கி பொருத்தியுள்ளார். மேலும் இவரது ஆட்டோ லேப்டாப் சேவை, போன் சார்ஜிங் வசதியும் கொண்டதாகும். மேலும் இவர் சில்லரைத் தொல்லையை தவிர்க்க ஸ்வைபிங்க் மெஷின்களையும் வாங்கி வைத்துக்கொண்டார். இதன் மூலம் சில்லரை இல்லாதவர்கள் தங்களின் கார்டு மூலம் பணத்தை செலுத்தலாம். 10 ரூபாயில் இருந்தே இந்த ஸ்வைபிங்க் சேவையை மக்களுக்காக அளிக்கிறார்.
வாடிக்கையளர்களுக்கு மகிழ்ச்சி தரும் சலுகைகள்:
அண்ணாதுரையின் ஆர்வமும், மக்களை மகிழ்விக்கும் எல்லையும் இதோடு அடங்கவில்லை. அவர்களை மேலும் மகிழ்ச்சிபடுத்தும் வகையில் பல்வேறு போட்டிகளை அறிமுகப்படுத்தினார். அதன் பெயர் 'கஸ்டமர் ரெலேஷன்ஷிப் டெவலப்மெண்ட்' (customer relationship development contest) போட்டி. இவர் தன்னுடைய வாடிக்கையாளரோடு கொண்டுள்ள உறவை வலுபடுத்த இப்போட்டியை துவங்கினார்.
இதில் பயணம் செய்யும் வாடிக்கையாளர்களிடம் 5 கேள்விகள் கேட்கப்படும். 5 கேள்விகளுக்கும் சரியாக பதிலளிக்கும் நபருக்கு மாதம் 1000 ரூபாய் அளிக்கப்படுகிறது. அதோடு 'டோக்கன் டிரீட்' (token treat) என்ற முறையை அவர்களுக்கு அண்ணாதுரை அளிக்கும் சிறப்பான சலுகை ஆகும். இதை பற்றி அண்ணாதுரை விளக்குகையில்,
“இந்த ஆஃப்பர் நிறைய பேருக்கு பிடித்தது. ரெஃபெர் அண்ட் ரிபீட் (refer and repeat technology) முறையை பின்பற்றும் சலுகை இது. ஒரு மாதத்தில் 20முறைக்கு மேல் எனது ஆட்டோவில் பயணித்தால் 250 ரூபாய் வழங்கப்படும், 30 முறைக்கு 500 ரூபாயும், 40 முறைக்கு 1000 ரூபாயும் வழங்கப்படும். இந்த டோக்கன் முறையை நான் சந்தோஷமாக செய்வதற்கு முக்கியக் காரணம் எனது கஸ்டமர்ஸ். அவர்களால் தான் என் குடும்பத்திற்கு நான் உதவுகிறேன் எனவே அவர்களுக்கு இந்த சலுகைகள் கொடுத்து அவர்களை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்கிறேன்” என்றார்.
மேற்கொண்டு இவர் ஆசிரியர்களுக்கு கட்டணம் பெறாமல் அவர்களுக்கு ஆட்டோ ஓட்டுவதாகவும், ஐடி கம்பனி சி.இ.ஒ வின் பிறந்தநாள் அன்று அந்த கம்பனியில் பணிபுரியும் அனைவருக்கும் இலவசமாக ஆட்டோ ஓட்டியதாகவும் கூறுகிறார்.
அண்ணாதுரைக்கு கிடைத்த ஊக்குவிப்பு:
முதன்முதலாக ஆட்டோவில் இது போன்ற சேவையை துவங்கியபோது பெரிதாக ஆதரவு கிடைக்கவில்லை என்கிறார் அண்ணாதுரை. இவரது பெற்றோர்களும் இவர் எடுக்கும் முயற்சிக்கு ஏற்ற பலன் கிடைக்காமல் போய்விடுமோ என்றே அஞ்சினர். மேலும் முதன் முதலில் இவர் நான்கு சக்கரம் கொண்ட வாகனம் ஓட்டி வந்தார் ஆனால் பிற்காலத்தில் குடும்பச் சூழ்நிலை காரணமாக அந்த ஆட்டோவை விற்று சிறிய மஞ்சள் நிற ஷேர் ஆட்டோ வாங்கினார். இருப்பினும் தன்னம்பிக்கையை தளர விடாமல் வாடிக்கையாளார்களுக்கு அளிக்கும் சேவையை தொடர்ந்தார். ஆட்டோவின் அளவு சிறியதாக இருந்தாலும் மனம் தளர்ச்சி அடையாமல், இந்த ஆட்டோவையும் தான் வைத்துள்ள கேட்ஜெட்களைக் கொண்டு அலங்கரித்தார்.
மேலும் எந்த ஒரு காலத்திலும், இவர் செய்யும் சேவைகளை எந்த குறையும் கூறாமல் தொடர்ந்து ஊக்குவிக்கும் இரண்டு பேர்களைப் பற்றிக் கூறினார் அண்ணாதுரை. அவ்விரண்டு பேர்களின் ஒருவர் இவருடைய ஆட்டோவில் என்றும் பயணிக்கும் வாடிக்கையாளர் விஜயகுமாரி கண்ணன் மற்றும் இவரது அண்ணன் ஜகதீசன். இவர்களின் ஊக்குவிப்பு அண்ணாதுரையின் வாழ்வில் பெரிய ஆதரவு அளிப்பதாக கூறுகிறார்.
உலகம் அழைக்கும் வாலிபன் அண்ணாதுரை:
இதுவரை இவரை பற்றி பல பத்திரிக்கைகள் எழுதியிருக்கலாம், பேசியிருக்கலாம் அனால் மக்கள் பலர் அறியாத ஒன்று இவர் சென்னைவாசிகளின் பிரியமானவர் மட்டுமல்ல. இவர் உலகெங்கும் அழைப்புகளைப் பெற்ற சாதனையாளர். இவரைப் பற்றி லண்டனில் உள்ள 'டெயிலி மெயில் யுகே' (daily mail UK) என்ற நாளிதழ் செய்திப் பதிவை வெளியிட்டுள்ளது. இதே போன்று பாகிஸ்தானில் உள்ள நாளிதழ்களிலும் இவரின் வாழ்க்கைப் பதிவு இடம்பெற்றுள்ளது. பத்திரிக்கைகள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் இவரின் ஆட்டோவில் பயணிக்க இவரை வருவதற்கு முன்பே தொடர்பு கொண்டு முன்பதிவு செய்வதாக கூறுகிறார்.
“வெளியூர்ல இருந்து வரவங்க எல்லாம் நினைச்சா நல்ல ஏ.ஸி கார் புக் செய்து அதுல போகலாம். ஆனால் என்னுடைய வண்டியில் ஏ.சி இல்லையென்றாலும் அது பற்றி கொஞ்சமும் கவலை படுவத்தில்லை. உங்களோட வண்டியில நாங்க வரனும் அதனால் நீங்க நேரா விமான நிலையத்துக்கே வந்துருங்கனு சொல்லிடுவாங்க. அவங்க போகிற இடம் எல்லாமே பெரிய பெரிய ஸ்டார் ஓட்டலாக இருக்கும். ஆனாலும் உங்க சேவை நல்லா இருக்கு எங்களுக்கு உங்க வண்டியில தான் வரனும்னு ஆசையில வருவாங்க, பாராட்டுவாங்க. அந்த மாதிரி முன்பின் அறிமுகம் இல்லாத ஒருத்தர் பாராட்டுறத நினைக்கும்போதே எனக்கு மனநிறைவு கிடைக்குது,” என்று கூறுகிறார் அண்ணாதுரை.
அதோடு நாட்டின் பல்வேறு இடங்களில் இருந்து இவருக்கு அழைப்பு வருவதாக கூறுகிறார்.
டெட்-எக்ஸ் (TED-X) கொடுத்த அறிமுகமும் அனுபவமும்:
2014ம் டெல்லியில் நடைப்பெற்ற டெட்-எக்ஸ் நிகழ்ச்சியில் அண்ணாதுரை பங்கேற்றார். இவரின் ஆர்வமும், இந்த ஆர்வத்தால் அவர் கொண்டுவந்த மாற்றங்களுக்கு வரவேற்பு அளிக்கும் வகையில் இவரை டெட்-எக்ஸ் அணியினர் அழைத்தனர். இதில் பங்கேற்ற அண்ணாதுரை அவருக்கு அங்கு அளிக்கப்பட்ட வரவேற்பைக் கண்டு பெருமை அடைந்ததாகவும், அது அவரை மேலும் ஊக்குவித்ததாகவும் கூறினார். அதோடு அந்நிகழ்ச்சிக்கு தலைமை வகிப்பவரிடம் இவரை அறிமுகப்படுத்தியபோது அண்ணாதுரை போன்ற ஆட்கள் எங்கு உள்ளார்கள் என்று வியப்படைந்ததாகவும் கூறினார். மேலும் இந்த நிகழ்விற்கு பின் அவரின் குடும்பத்தினர் அளவில்லா மகிழ்ச்சி அடைந்ததாகவும் கூறுகிறார்.
அண்ணாதுரைக்கு சமூக மாற்றம் என்றால் என்ன?
அண்ணாதுரையிடம் தொடர்ந்து பேசுகையில் சமூக மாற்றம் என்றால் என்ன என்பது குறித்த கேள்வி கேட்டப்போது.
“நம் நாட்டை பொருத்தவரை மாற்றம் என்றால் சிறிய அளவில் இருந்து நடக்க வேண்டும். ஐ.டி.செக்டார் மற்றும் உயர்மட்ட அளவில் ஏற்படும் மாற்றம் மட்டுமே மாற்றங்கள் இல்லை. பிளாட்பார மக்களின் வாழ்க்கையில் மாற்றம் ஏற்பட வேண்டும். அதுவே உண்மையான மாற்றம்” என்றார்.
மற்ற ஆட்டோக்களும் அண்ணாதுரை ஆட்டோவும்:
வாடிக்கையாளர்களுக்கான வசதி அண்ணாதுரையின் ஆட்டோவில் பெருக்கெடுத்து ஓடினாலும் கட்டணங்களை பொருத்தமட்டில் மற்ற ஆட்டோக்களில் இருந்து வேறுபடுவதில்லை. மேலும் இது குறித்து கேட்கையில் அவர் உயிரற்ற பணத்திற்கு மரியாதை கொடுப்பதை விட மனிதனின் உழைப்பிற்கே தான் மரியாதை அளிப்பதாகக் கூறினார். அதோடு அண்ணாதுரைக்கு அவரின் வாடிக்கையாளர்களின் மனதிருப்தியே முக்கியம் என்றும் கூறினார். உழைப்பைப் பற்றி குறிப்பிடுகையில்,
“வியர்வையில் நனைந்த காகிதம் தான் பணம்,” என்ற அவர் கூறிய சொற்கள் நமக்கு பெரும் ஈர்ப்பை ஏற்படுத்தியது.
எனவே பணத்திற்கு பெரிய முக்கியவம் அளிப்பதில்லை என்றும், மற்ற ஆட்டோக்களில் எவ்வளவு தொகை பெறப்படுகிறதோ அதே கட்டணத்தையே அண்ணாதுரையும் பெறுவதாகக் கூறினார்.
எதிர்காலத் திட்டங்கள்:
தற்போது இவர் அளவற்ற சேவைகளை அளித்து வந்தாலும், எதிர்காலத்தில் இவரின் சேவையை மெருகேற்றும் வகையில் செயலி ஒன்றை உருவாக்க உள்ளதாக கூறினார். அச்செயலியை பதிவிறக்கம் செய்து உபயோகிக்கையில், 200 மீட்டர் தொலைவில் அண்ணாதுரையின் ஆட்டோ இருக்கும் போது, அச்செயலி மூலம் அறிவிப்புச் செய்தி ஒன்று பயனருக்கு வந்தடையும் என்கிறார். அந்த செய்தியை வைத்து இவரின் ஆட்டோ சேவையை பெற செயலி மூலம் பதிவு செய்யும் வசதியைக் கொண்டு உருவாக்கப்போவதாக கூறினார்
மூன்று சக்கரம் என்றால் ஆட்டோ என்று அடையாளம் கொள்ளும் மக்களின் எண்ணம் மாற வேண்டும் என்றும், 4 சக்கரம் கொண்ட கார் கூட ஆட்டோ என்று அழைக்கப்படலாம் என்று தனது புதிய சேவையைக் கொண்டு வர, இவர் ரத்தன் டாடா வை சந்திக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும், அவரின் உதவி கொண்டு இந்த மாற்றங்களை ஏற்படுத்த முயற்சிக்கப்போவதாகவும் கூறினார்.
அண்ணாதுரையின் தாரக மந்திரம்:
இவரிடம் இறுதியான கேள்வியாக மக்களுக்கு அவர் சொல்ல நினைப்பதைப் பற்றிக் கேட்டப்போது,
“அதித்தி தேவோ பவ” என்றார்.
இந்த சொற்களின் விளக்கமாக வாடிக்கையாளர்களே கடவுள் என்றும் அவர்களை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்வதே தனது முதன்மை பொறுப்பு என்று கூறினார். மேலும் அவர் கூறுகையில்,
”இந்த உலகில் உள்ள அனைவருமே வாடிக்கையாளர்கள் தான். நாம் எதோ ஒரு சூழ்நிலையில் ஒன்றை தருகிறோம் நம்மிடம் இருந்து அதை மற்றொருவர் வாங்கிக்கொள்வார். இல்லையென்றால் ஒருவர் நம்மிடம் விற்பனை செய்வார் நாம் அதை வாங்குவராக இருப்போம். எனவே வடிக்கையாளர்கள் தான் முதல் கடவுள். அவர்களை திருப்தியடையச் செய்வது அனைவரின் கடமையாகும் என்றார்.
சென்னையில் எவ்வளவு ஆட்டோக்கள் நிறைந்திருந்தாலும், அண்ணாதுரையின் ஆட்டோவிற்கான மவுசு குறையாததற்கான காரணம் இப்போது நமக்கு புலப்பட்டது...
படங்கள் உதவி: அண்ணதுரையின் ஃபேஸ்புக் பக்கம்
இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்
தொடர்பு கட்டுரைகள்: