சர்வதேச அளவில் கலக்கும் 10 சென்னை தொழில்நுட்ப ஸ்டார்ட் அப்ஸ்!
உற்பத்தி, ஆட்டோமொபைல், பொறியியல்… இப்போது ஸ்டார்ட் அப்… சென்னை இந்த வரிசையில் பல வெற்றிகரமான ஸ்டார்ட் அப் களோடு களத்தில் நிற்கிறது.
சென்னையை சேர்ந்த ‘பிரஷ்டெஸ்க்’ மற்றும் ‘இன்டிக்ஸ்’ உலகளவில் தங்களுக்கான இடத்தை பிடித்து அபார வளர்ச்சி அடைந்துள்ளது. SaaS ஹப்’களின் இருப்பிடமாவும் உயர்ந்து வருகிறது சென்னை.
சென்னைக்கு பெருமை சேர்க்கும் மற்றொரு நட்சத்திர ஸ்டார்ட் அப் ‘ஜோஹோ’. சிலிக்கான் வேலியில் தொடக்கப்பட்டாலும், சென்னை குழுவால் உருவாக்கப்பட்ட தொடக்க நிறுவனம் இது.
நிதி சந்தைத்துறையில், ‘BankBazaar.com’, பில் தேவைகளுக்கு தீர்வ் அளிக்கும் ‘Chargebee’, ஆன்லைன் தங்குமிடம் புக்கிங் வசதி சேவை வழங்கும் ‘Stayzilla’, சட்ட ஆலோசனை தரும் ‘Vakilsearch’ மற்றும் டைட்டனின் புதிய பிரிவான ‘Caratlane’ இவையெல்லாம் திரும்பி பார்க்க வைத்த சென்னை ஸ்டார்ட் அப்கள்.
யுவர்ஸ்டோரி’யின் ஆய்வின் படி, 2016 ஆம் ஆண்டின் முதல் பாதியில், சென்னை ஸ்டார்ட் அப்கள் சுமார் 43 மில்லியன் டாலர் அளவு வர்த்தக பரிமாற்றத்தை கிட்டத்தட்ட 16 முக்கிய டீல்கள் மூலம் கண்டுள்ளது. கடந்த ஆண்டு முதலீட்டின் உச்சியில் இருந்த சென்னை தொடக்க நிறுவனங்கள், சுமார் 308.8 மில்லியன் முதலீட்டை பெற்றது. இது 32 டீல்கள் மூலம் ஜனவரி முதல் செப்டம்பர் வரை கணக்கிடப்பட்டது. 2014 இல், 14 டீல்களில் 58 மில்லியன் முதலீட்டை சென்னை ஸ்டார்ட் அப் கள் பெற்றது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் வளரும் ஸ்டார்ட் அப்’ களால் பல வழிக்காட்டி நிறுவனங்களின் தேவைகளும், அவசியமும் அதிகரித்துள்ளது.’டை’ TiE (The Indus Entrepreneurs) , சிஐஐ ஸ்டார்ட் அப்ரூனர்ஸ்’ CII Startupreneurs, ஐஐடி அலும்னை க்ளப், நாஸ்காம் இன் 'மில்லியன் டாலர் ஸ்டார்ட் அப் ப்ரோக்ராம்’ என்று பல கடந்த வருடங்களில் உருவாகியுள்ளதை பார்க்க முடிகிறது. மேலும், தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 30 அடை காக்கும் இடங்கள் உள்ளது, முக்கியமாக ஐஐடி, விஐடி, போன்ற பல கல்லூரி வளாகங்களில் இவை அமைந்துள்ளது.
சென்னையின் ஸ்டார்ட் அப் அடையாளமாக திகழும் ‘பாரத்மேட்ரிமோனி.காம்’ பல புதிய ஸ்டார்ட் அப் உருவாக உந்துதலாக இருந்துள்ளது. இதோ சென்னையில் தொடங்கப்பட்ட, வேகமான வளர்ச்சியை கண்டுவரும் சில ஸ்டார்ட் அப்’ கள் ஒரு பார்வை:
ப்யூயல் புக் டெக்னாலஜி (Fuel Book Technology)
சென்னையை சேர்ந்த புபாலிக்' இந்திய தயாரிப்பான, 'ப்யூயல் புக் டிவைஸ்' ஒன்றை உருவாக்கியுள்ளது. ஒரு கருவியின் உதவியோடு, மொபைல் ஆப் மூலம் பயணி தனது காருடன் இணைப்பை ஏற்படுத்திக்கொண்டு, எரிபொருள் அளவு, மைலேஜ் விவரம், பயண தடம், பயணபாதை நிலப்பரப்பு மேப் போன்ற பல விஷயங்களை தெரிந்து கொள்ளமுடியும். அதேப்போல் வாகனத்தில் வைக்கப்பட்டிருக்கும் 'ப்ளாக் பாக்ஸ்', விபத்துக்களின் போது நடந்தவை பற்றியும் தகவல் அளிக்கும். கடந்த ஆண்டு மே மாதம், இந்த கருவி தயாரிப்பின் இறுதிக்கட்டத்தில் இருந்தது.
எனர்ஜிலி (Energyly)
e.Meter.in என்று அழைக்கப்பட்டு தற்போது எனர்ஜிலி என்று மாறியுள்ள நிறுவனம், தொழில்நுட்ப நிறுவனம், தொழிற்சாலைகள், வர்த்தக மையங்கள் மற்றும் வீடுகளின் மின்சார செலவை குறைக்க உதவும் புதுவித ஹார்ட்வேர் மற்றும் பகுப்பாய்வைக் தயாரித்துள்ளது. இந்த ஆண்டு ஜனவரி மாதம் சந்தைக்கு வந்த இந்த தயாரிப்பு, தயால் நாதன் மற்றும் திலீப் ராஜேந்திரனின் உழைப்பில் உருவான ஒரு வித்தியாசமான முயற்சி.
எனர்ஜிலி ஹார்ட்வேரில் இணைக்கப்பட்டு, ஒரு எளிய தளத்தின் உதவியோடு மின்சார செலவை குறைக்க உதவுகிறது.
ஜார்கெட் (Zarget)
முன்னாள் ஜோஹோ ஊழியர்களான அர்விந்த் பார்திபன், நவீன் வெங்கட் மற்றும் சந்தோஷ் குமார் தொடங்கிய ஜார்கெட், மென்பொருள் தேர்வுமுறையில் மாற்றம் தொடர்பான விவரங்கள் அளிக்கும் ஒரு தளம். இவர்கள் இணையதள சந்தைப்படுத்தாளர்களுக்கு தகுந்த பகுப்பாய்வு மற்றும் மென்பொருள் தேர்வில் உள்ள மாற்றங்களை பற்றி ஆலோசனையும் வழங்குகின்றனர்.
கடந்த டிசம்பரில் இவர்கள் தொடங்கிய போது, சுமார் 400 நிறுவனங்களை சேர்ந்த 1500 வாடிக்கையாளர்கள் இந்த சேவையில் இணைந்தனர். மே மாதம், ஆக்செல் பார்ட்னர்ஸ், மாட்ரிக்ஸ் பார்ட்னர்ஸ் மற்றும் ஏஞ்சல் முதலீட்டாளர் கிரீஷ் மாத்ருபூதம் ஆகியோரிடம் இருந்து முதலீடை பெற்றது ஜார்கெட்.
கோ பம்ப்ர் (GoBumpr)
கார்த்திக் வெங்கடேஸ்வரன், நந்த குமார் மற்றும் சுந்தர் நடேசன் தொடங்கிய 'கோ பம்ப்ர்', வாகன உரிமையாளர், கார் அல்லது பைக் பழுது அடைந்த நிலையில்; இருந்த இடத்திலிருந்தே செர்விஸ் மற்றும் ரிப்பேர் சேவைக்கு புக் செய்து பதிவிடும் வசதியை வழங்குகிறது. இதைத் தவிர மாதாந்திர, வருடாந்திர சர்வீஸ் பேக்கேஜ் 24 மணி நேர ரிப்பேர் சேவை, நேரடி சாலை சேவை, வாகன காப்பீடு உதவி சேவை, அருகாமை பெட்ரோல் பங்க் தகவல் சேவை என பல விஷயங்களை இவர்கள் வழங்குவது கூடுதல் சிறப்பு. துரித சேவையை வழங்க இவர்கள் வாகன சேவை மையங்கள், மெக்கானிக் கடைகளை தங்கள் தளத்தில் இணைத்து கொண்டுள்ளனர்.
சுயநிதியில் தொடங்கப்பட்ட கோ பம்பர், தொடங்கிய 2 மாதத்தில், சுமார் 700 கார் மற்றும் பைக் உரிமையாளர்களை தங்கள் சேவையில் சேர்த்து, கிட்டத்தட்ட 15லட்ச ரூபாய் வருமானத்தை ஈட்டினர். ஜனவரி மாதத்தில், 260 செர்வீஸ் வழங்குவோர்களை தங்கள் தளத்தில் இணைத்து ( 50 நான்கு வாகன சேவை மையம், 120 இருசக்கர சேவை மையம், 90 டயர் பன்ச்சர் கடைகள்) நல்ல வளர்ச்சியை சந்தித்து வருகின்றனர்.
லாபாட் (Lawbot)
பாட் தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வரும் இக்காலத்தில், சென்னை அக்யூமெனிஸ்ட் அனாலிடிக்ஸ் பிரைவேட் லிமிட்டட் நிறுவனம் தயாரித்துள்ளதே 'லாபாட்'. மனஸ்வினி கிருஷ்ணா மற்றும் கிருஷ்ணா சுந்தரேசனின் மூளையில் உருவாகியுள்ளதே லாபாட்.
இது, பொதுவான தவறுகள் மற்றும் கோளாறுகளை தானாக கண்டுபிடித்து இயங்கும் பாட். சுயநிதியில் தொடக்கப்பட்ட இந்த தயாரிப்பு, ஒப்பந்தங்களை தானாகவே தயாரிக்கவும், சரி பார்க்கவும் உதவும்.
யுனிபோர் (Uniphore)
10 வருடங்களுக்கு முன்பு ரவி சரோகி மற்றும் உமேஷ் சச்தேவ் சென்னையில் தொடங்கிய முதல் ஸ்டார்ட் அப் ‘சிங்குலாரிஸ் டெக்னாலஜீஸ்.’ 2008 இல் இதுவே 'யுனிபோர் சாப்ட்வேர் சிஸ்டம்ஸ்' என்று தொலைதொடர்பு துறையில் உள்ள பெரிய இடைவெளியை போக்கும் தொழில்நுட்பத்தை உருவாக்கும் நிறுவனமாக உருமாறியது. ‘தாய்மொழியை அடையாளம் கண்டு இயங்கக்கூடிய 'வாய்ஸ் பயோமெட்ர்க்' முறையை உருவாக்கினர் இவர்கள். இந்த மென்பொருள், ஊரக மக்கள் கைப்பேசி மூலம் சேவைகளை துரிதமாக பெற உதவிகரமாக இருந்து வருகிறது. யுனிபோர் முக்கியமாக வங்கி மற்றும் விவசாயத்துறையில் கவனம் செலுத்துகிறது. எனினும் கல்வி, மருத்துவம், சில்லறை விற்பனை ஆகிய துறைகளிலும் கட்டமைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.
கடந்த ஜூன் மாதம், இவர்கள் க்ருஷ் கோபாலகிருஷ்ணன் மற்றும் முதலீட்டாளர்கள் இடமிருந்து சிரீஸ் ஏ முதலீடை பெற்றனர். அண்மையில் டைம்ஸ் நாளிதழ் வெளியிட்ட உலகில் மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய, "அடுத்த தலைமுறை தலைவர்கள்" பட்டியலில் பத்து பேரில் ஒருவராக தொழில்முனைவர் உமேஷ் சச்தேவ் அங்கீகரிக்கப்பட்டார்.
ட்ரைவர்ஸ் கார்ட் (DriversKart)
செப்டம்பர் 2015 இல், ஐஐஎம் கல்கத்தா முன்னாள் மாணவர் வினித் ஸ்ரீவத்சவா தொடங்கிய தேவைக்கேற்ப ட்ரைவர் சேவை வழங்கும் நிறுவனம் 'ட்ரைவர்ஸ் கார்ட்'. பெங்களுரு, மும்பை, புனே, டெல்லி மற்றும் சென்னையில் இயங்கும் இந்த சேவை நிறுவனத்தில் சுமார் 20 ஊழியர்கள் பணியாற்றுகின்றனர்.
200 ட்ரைவர்களை கொண்டுள்ள இவர்கள், தங்கள் செயலியின் மூலம் வாடிக்கையாளர்களை தங்களுக்கு தேவையான நேரத்தில், இடத்தில் புக் செய்து கொள்ளமுடியும். இந்த ஆப்பை இதுவரை 5000 பேர் வரை பதிவிறக்கம் செய்துள்ளனர். மாதத்தில் 4000 பயணங்களுக்கு சேவையை வழங்கி வருகிறது.
கடந்த ஏப்ரல் மாதம் இந்த ஸ்டார்ட் அப், ப்ரி சிரீஸ் ஏ நிதியை பெற்றது மற்றும் மும்பையை சேர்ந்த ட்ரைவர் சேவை நிறுவனம் ஒன்றையும் கையகப்படுத்தியுள்ளது.
ஃபிக்ஸ்நிக்ஸ் (FixNix)
2012 இறுதியில் தொடக்கப்பட்ட 'ஃபிக்ஸ்நிக்ஸ்' சென்னையைச் சேர்ந்த தொழில்முனைவர் தொடங்கிய SaaS அடிப்படை மேலாண்மை தளம். இந்த மென்பொருள், இடர் மேலாண்மை மற்றும் கட்டுப்பாடு முறைகளை கார்ப்பரேட் மேலாண்மையுடன் இணைக்கிறது.
மூன்று ஆண்டுகள் சுயநிதியில் செயல்பட்ட இந்த நிறுவனம், டெஸ்லா சிஐஒ ஜெய் விஜயன் இடமிருந்து 5லட்சம் டாலர் சிரீஸ் ஏ முதலீடை பெற்றுள்ளது. சிலிக்கான் வேலியை சேர்ந்த ஏஞ்சல் முதலீட்டாளர்களும் இதில் முதலீடு செய்துள்ளனர்.
சிலிக்கான் வேலியில் அலுவலகம் கொண்டுள்ள பிக்ஸ்நிக்ஸ் நிறுவனர் சண்முகவேல் சங்கரன், தங்களது நிறுவனம் கடந்த 3 ஆண்டுகளில் 5 லட்சம் டாலர் வருமானத்தை ஈட்டியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
யெல்டி சாப்ட்காம் (YELDI Softcom)
ஜூலை 2015 இல் தந்தை மகள் இணைந்து தொடங்கிய யெல்டி சாப்ட்காம் சென்னையை சேர்ந்த நிறுவனம். லக்ஷ்மிதீபா மற்றும் ரா.அர்ஜுன்மூர்த்தி தொடங்கிய இந்த தளம், பணம் செலுத்துதல் மற்றும் அது தொடர்பான செக்யூரிட்டி அனுகுமுறைகளை கையாள வடிவமைக்கப்பட்டுள்ளது. இலங்கையில் ப்ரீபெய்ட் கார்ட் சேவையை அறிமுகப்படுத்தியுள்ள இவர்கள், பாங்களாதேஷ், வடகிழக்கு நாடுகள் மற்றும் பிலிப்பைன்சில் தங்கள் சேவைகளை விரிவுபடுத்த உள்ளனர்.
90 பேர் அடங்கிய குழு கொண்ட யெல்டி, 10மில்லியன் NFC கார்ட்களை இந்த ஆண்டு இறுதிக்குள் சந்தைப்படுத்த இலக்கு வைத்துள்ளது.
ப்ரொக்ளீன் டெக்னாலஜீஸ் (Proklean Technologies)
ப்ரோபயோடிக் கெமிக்கல் நிறுவன 'ப்ரொக்ளீன்' Dr.சிவராம் பிள்ளை, சந்திரசேகர் மற்றும் விஷ்வதீப் குயிலா ஆகிய நிறுவனர்கள் கொண்டு 2012 இல் தொடங்கப்பட்டது. தோல் மற்றும் ஜவுளித்துறையில் வாடிக்கையாளர்களை கொண்டுள்ள ப்ரொக்ளீன், இயற்கையான ப்ரோபயோடிக் பொருட்களை 'ப்ரோவியரா' எனும் பெயரில் தயாரித்து வருகிறது.
நச்சுத்தன்மை இல்லாத, எளிதில் மறுசுழற்சி செய்யப்படக்கூடிய இந்த பொருட்கள், அமெரிக்கா, ப்ரேசில், மெக்சிகோ, சவுத் ஆப்ரிகா, ஜெர்மனி, ஸ்பெயின் ஹங்கேரி, டர்கி, தாய்லாந்து, சீனா, பிலிப்பைன்ஸ், ஆஸ்திரேலியா மற்றும் பாங்களாதேஷில் சந்தை படுத்தப்படுகிறது.
மேற்கூறிய ஸ்டார்ட் அப்'கள் தவிர சென்னையிலிருந்து உருவாகிய பல நிறுவனங்கள் இன்று வெளுத்துக்கட்டிக் கொண்டிருக்கிறது. கிராமப்புறங்களுக்கான குறைந்த விலை ஏடிஎம் கட்டும் நிறுவனம் 'வோர்டெக்ஸ் எஞ்சினியரிங்', 'மேட் ஸ்ட்ரீட் டென்', 'கோனோட்டர்', 'அன்மெட்ரிக்', 'அவாஸ் ஆப்', 'கான்டஸ்', 'ஹைப்பர்வெர்ஜ்' 'பைக்யூப்', 'ஸ்கிரிப்ட்', 'பான்டெயின்', போன்ற பல ஸ்டார்ட் அப்' கள் தங்கள் துறைகளில் முத்திரை பதித்து வேகமாக வளர்ந்து சென்னைக்கு பெருமை சேர்த்து வருகிறது.
உங்களுக்கு பிடித்த சென்னை ஸ்டார்ட் அப் எது என்று சொல்லுங்கள்...