ஆன்லைன் மூலம் வில்லங்கச் சான்று பெறுவது எப்படி? Step-by-Step விளக்கம்!
தமிழ்நாடு பதிவுத்துறை சார்பில் வழங்கப்படும் இந்த சான்றை இணைய வழியில் எளிய முறையில் விண்ணப்பித்து, பெறுவது எப்படி என்பதை விரிவாக பார்ப்போம்.
பொதுவாக நிலம், வீட்டு மனை, வீடு போன்ற சொத்துகளை வாங்க விரும்புவர்கள் அந்த சொத்தின் முந்தைய உரிமையாளர் குறித்தும், அதில் வில்லங்கம் ஏதேனும் உள்ளதா என்பதை அறிந்து கொள்ளவும் வில்லங்கச் சான்று பெறுவர். இப்போது அசையா சொத்தின் மீது வங்கி மற்றும் நிதி சேவை நிறுவனங்களில் கடன் பெறவும் வில்லங்கச் சான்று தேவைப்படுகிறது.
முன்பு வில்லங்கச் சான்று பெற பத்திரப்பதிவுத்துறை அலுவலகத்திற்கு நேரில் செல்ல வேண்டி இருந்தது. இன்றைய டிஜிட்டல் யுகத்தில் இணைய வழியே வில்லங்கச் சான்றை மக்கள் பெற முடியும். தமிழ்நாடு பதிவுத்துறை சார்பில் வழங்கப்படும் இந்த சான்றை இணைய வழியில் எளிய முறையில் விண்ணப்பித்து, பெறுவது எப்படி என்பதை விரிவாகப் பார்ப்போம். இதற்கு எந்தவித லஞ்சமும் இடைத்தரகர் உட்பட யாருக்கும் கொடுக்க வேண்டிய அவசியமில்லை.
வில்லங்கச் சான்று (Encumbrance Certificate)
ஒரு சொத்தின் உரிமையாளர் யார் என்பதை உறுதிப்படுத்தும் சான்று இது. இதில் அந்த குறிப்பிட்டு சொத்து யார் வசம் இருந்து கைமாறி வந்தது என்ற அனைத்து விவரங்களும் இருக்கும். அந்த சொத்து பதிவுத்துறையில் பத்திரப்பதிவு செய்யப்பட்ட தேதி, பத்திரத்தின் ஆவண எண், உரிமையாளர் பெயர், சொத்தின் வகைப்பாடு, சொத்தின் விஸ்தீர்ணம் (அளவு), சர்வே விவரம் என சகல விவரங்களும் இதில் உள்ளடங்கி இருக்கும். இதன் மூலம் ஒரு சொத்து தொடர்பான வில்லங்கத்தை முழுமையாக தெரிந்து கொள்ள முடியும்.
இணையத்தின் மூலம் வில்லங்கச் சான்று:
தமிழ்நாடு பதிவுத்துறை தளத்தில் வில்லங்கச் சான்று விவரம் பார்க்கவும் மற்றும் வில்லங்கச் சான்றை இணைய வழியில் தேடி விண்ணப்பித்து, பெறவும் முடியும்.
இதில், வில்லங்கச் சான்று விவரம் பார்க்க கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. இதனை இணைய வழியே இலவசமாக Pdf டாக்குமெண்ட் வடிவில் டவுன்லோடும் செய்து கொள்ளலாம். அதுவே வில்லங்கச் சான்றை இணைய வழியில் தேடி விண்ணப்பித்து பெற கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும்.
வில்லங்கச் சான்று விவரம் பார்க்க
- பதிவுத்துறையின் https://tnreginet.gov.in/portal/ தளத்திற்கு செல்ல வேண்டும்.
- அதில் மின்னணு சேவைகளை தேர்வு செய்ய வேண்டும்.
- பின்னர், வில்லங்கச் சான்று > வில்லங்கச் சான்று விவரம் பார்வையிடுதலை க்ளிக் செய்ய வேண்டும்.
- அதில் ஆவணம் வாரியாக, மனை/அடுக்குமாடி குடியிருப்பு எண் வாரியாக அல்லது வில்லங்கச் சான்று என ஏதேனும் ஒன்றை தேர்வு செய்ய வேண்டும்.
- தொடர்ந்து மண்டலம், மாவட்டம், சார்பதிவாளர் அலுவலகம், வில்லங்க சான்று தேவைப்படும் காலம், கிராமம், புல எண், உட்பிரிவு எண் போன்ற விவரங்கள் கேட்கப்படும். மனை/அடுக்குமாடி குடியிருப்பு எண் வாரியாக என்றால் இந்த விவரங்களுடன் மனை/அடுக்குமாடி குடியிருப்பு எண்ணை கொடுக்க வேண்டும்.
- ஆவணம் வாரியாக என்றால் சார்பதிவாளர் அலுவலகம், ஆவண எண், ஆவணம் பதிவு செய்யப்பட்ட ஆண்டு, ஆவண வகைப்பாடு போன்ற விவரங்களை கொடுக்க வேண்டும்.
- அதன் பின்னர், 'உங்களது திருத்த இயலாநிலை ஆவண வடிவம் வெற்றிகரமாக உருவாக்கப்பட்டது. திருத்த இயலாநிலை ஆவண வடிவத்தை பதிவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்’ என்ற லிங்க் வரும். அதை க்ளிக் செய்து பயனர்கள் வில்லங்கச் சான்று விவரகங்களை பார்க்க முடியும்.
வில்லங்கச் சான்றை இணையவழியில் தேடி விண்ணப்பித்து, பெறுவது எப்படி?
இந்த சேவையை பதிவுத்துறையின் வலைதளத்தில் பயனர்களாக பதிவு (Registered Users) செய்யப்பட்டவர்கள் மட்டுமே பெற முடியும். மின்னஞ்சல் முகவரியை உருவாக்குவது போல பயனர்கள் எளிதாக இந்த தளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். இதில் பயனர்களின் பெயர், ஊர், வயது, அடையாள சான்று, பிறந்த ஆண்டு, மொபைல் எண், மின்னஞ்சல் முகவரி, வசிப்பிட முகவரி என அனைத்து விவரங்களும் கேட்கப்படும். அதை கொடுத்து புதிய பயனர்களாக இணைந்து கொள்ள முடியும்.
- பதிவு செய்யப்பட்ட பயனர்கள் பதிவுத்துறையின் வலைதளத்தில் லாக்-இன் செய்ய வேண்டும்.
- தொடர்ந்து மின்னணு சேவைகள் > வில்லங்கச் சான்று தெரிவு செய்ய வேண்டும்.
- அதில் தேடல் மற்றும் வில்லங்கச் சான்று என்பதை க்ளிக் செய்ய வேண்டும்.
- மண்டலம், மாவட்டம், சார்பதிவாளர் அலுவலகம், வில்லங்கச் சான்று தேவைப்படும் காலம், கிராமம், புல எண், மனை எண், வீடு தொடர்பான விவரங்கள் (சொத்து வீடாக இருந்தால்), எல்லை விபரங்கள் (இது சொத்து விவரத்தில் கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு எனக் குறிப்பிடப்பட்டு இருக்கும்), விஸ்தீர்ணம் போன்ற விவரங்களைக் கொடுக்க வேண்டும்.
- பின்னர், ‘தேடுக’ என்பதை க்ளிக் செய்ய வேண்டும். அதில் அந்த கிராமம் மற்றும் சர்வே எண்ணில் பதிவு செய்யப்பட்டுள்ள சொத்துகளின் விவரம் பட்டியலிடப்படும்.
- அதன் கீழ் உள்ள ஆன்லைன் வழியே விண்ணப்பிக்க என்பதை க்ளிக் செய்ய வேண்டும்.
- தொடர்ந்து விண்ணப்பதாரர்கள் பெயர் மற்றும் மொபைல் எண்ணை கொடுத்து கட்டணம் செலுத்தலாம்.
- கணினிக் கட்டணம் ரூ.100, விண்ணப்பக் கட்டணம் ரூ.1 உடன் தேடுதல் கட்டணத்தையும் செலுத்த வேண்டி இருக்கும். தேடுதல் கட்டணம் பயனருக்கு தேவைப்படும் வில்லங்கச் சான்றின் காலத்தை பொறுத்து மாறுபடும்.
- கட்டணம் செலுத்தியதும் அடுத்த சில நாட்களில் (குறைந்தபட்சம் 2 அல்லது 3 நாட்கள்) பயனர்களுக்கு டிஜிட்டல் வடிவில் வில்லங்கச் சான்று கிடைக்கும். இதை பதிவுத்துறையின் வலைதளத்தில் மின்னணு சேவைகள் > வில்லங்கச் சான்று > கோரிக்கைப் பட்டியலில் இருந்து பெற முடியும். கட்டணம் செலுத்தியதற்கான ரசீதும் கிடைக்கும்.
- இந்த வழியில் பயனர்கள் எளிய முறையில் ஆன்லைனில் விண்ணப்பித்து வில்லங்கச் சான்றை பெற முடியும். Digitally Signed (மின் கையொப்பம்) சான்றாக இது கிடைக்கும். இதில் QR கோடும் வலதுபுறம் இருக்கும்.
Edited by Induja Raghunathan