’வாடிக்கையாளர்களே எங்கள் வீட்டு விருந்தினர்’- திருவல்லிக்கேணி 'பாரதி மெஸ்' கண்ணன்!
சென்னை - திருவல்லிக்கேணியின் அடையாளங்களுள் ஒன்றாகிவிட்டது 'பாரதி மெஸ்'. உணவகத்தின் பெயரில் மட்டுமல்ல; உணவகம் முழுவதுமே நிரம்பியிருக்கிறார் பாரதி.
உணவகத்துக்குள் நுழைந்தவுடன் நம்மை பாரதிதான் வரவேற்கிறார். சுவர் முழுவதும் பாரதியின் அரிய புகைப்படங்களும் கவிதைகளும் வீற்றிருக்கின்றன.
"சொன்னதைச் செய்பவர்கள் அரிது. அதிலும் பாரதி மெஸ் அரிதினும் அரிது. இந்த உணவகம் தரும் உறுதிமொழிப் போலவே இங்கு வீட்டு முறையிலேயே சமைக்கிறார்கள். அஜினோமோட்டோ, சோடா உப்பு, பாமாயில், டால்டா போன்றவை சேர்ப்பது இல்லை. வயிற்றுக்கு எந்தப் பழுதும் ஏற்படாமல் மனதார சாப்பிடலாம்."
"சென்னையில் பல இடங்களில் சாப்பிட்டு வயிற்றைப் புண்ணாக்கிக் கொண்டேன். இப்போது எந்த வேலை எங்கு இருந்தாலும் சரியாக உணவு நேரத்தில் பாரதி மெஸ் வந்துவிடுவேன். சரியான விலையில் ஆரோக்கியமான உணவு கிடைக்கிறது."
"பாரம்பரிய முறையிலான உணவு வகைகள் மட்டுமின்றி சுவையாகவும் கிடைக்கின்றன. வீட்டுச் சாப்பாடு போலவே எப்போதும் திகட்டவே திகட்டாது என்பதே இதன் சிறப்பு."
- இவையெல்லாம் பாரதி மெஸ்ஸை தேடிச் சோறு உண்ணவரும் திருவல்லிக்கேணி மேன்ஷன்வாசிகள் சிலர் உளபூர்வமாகச் சொன்ன வாக்கியங்கள்.
பாரதி மெஸ்ஸின் உணவு வேளைகளில் கூட்டம் அலைமோதினாலும், வீட்டு விருந்தினர்கள் போன்ற வாடிக்கையாளர்களின் நெருக்கமான அணுகுமுறைதான் பரபரப்பிலும் அமைதி நிலவச் செய்கிறது.
தான் படிக்கும் காலத்தில் பாரதி மீது தீராக் காதலுடன் அலைந்தவர் 'பாரதி மெஸ்' கண்ணன். சமூகத்துக்குப் பயன்தரும் வாழ்க்கையை வாழவேண்டும் என்பதை பாரதியிடம் இருந்து தான் கற்றுக்கொண்டதாகச் சொல்கிறார் கண்ணன். பத்திரிகைத் துறையில் சிறந்து விளங்க வேண்டும் என்ற எண்ணம் கொண்ட இவர், ஒரு நாளிதழின் ஆசிரியர் இலாகாவில் சில ஆண்டுகள் பணிபுரிந்தார். குடும்பச் சூழல் காரணமாக தொழில் தொடங்க முடிவு செய்தவர், தனக்கு அனுபவமும் ஆர்வமும் கொண்ட உணவுத் துறையைத் தேர்ந்தெடுத்து பாரதி மெஸ்ஸுக்கு அடித்தளம் அமைத்தார். இந்த உணவகம் உருவானதன் பின்னணி குறித்து அவர் கூறியது:
"உணவே மருந்து' என வாழ்ந்த தமிழர்கள் இன்று 'உணவுக்குப் பிறகு மருந்து' என்றச் சூழலுக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். 10 ஆண்டுகளுக்கு முன்பு திருவல்லிக்கேணி மேன்ஷனில் இரண்டு ஆண்டுகள் தங்கியிருந்தேன். அப்போது, வயிற்றுக்குக் கெடுதல் இல்லாத உணவு கிடைக்கிறதுக்கு நான் கஷ்டப்பட்டிருக்கேன். அந்த அனுபவத்தின் எதிரொலியாக, மேன்ஷன்ல தங்கியிருப்பவர்களுக்காக வீட்டு உணவு கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் உருவாக்கப்பட்டதுதான் இந்த 'பாரதி மெஸ்'.
”சாப்பாடு என்றால் ருசிக்க வேண்டும் என்பது முக்கியம் அல்ல. சாப்பாடு என்றால் அது செரிக்க வேண்டும். அதுதான் மிகவும் முக்கியம். எங்களது உணவுகளில் கொஞ்சம் கொஞ்சமாக பாரம்பரிய உணவுகளை அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கிறோம்.”
அதன் முதல் கட்டமாக கம்பங்களி, கேப்பக்களி, கொள்ளுக்களி முதலானவற்றைச் சேர்த்தோம். அதன்பின், முளைக்கட்டிய தானியங்களை தினசரி உணவில் சேர்த்தோம். அடுத்தக்கட்டமாக இப்போது நீராவி உணவுகளை முழுமையாகக் கொண்டு வந்துள்ளோம். குறிப்பாக கம்பு, கேழ்வரகு என சிறுதானியங்களை நீராவி உணவுகளாக அறிமுகப்படுத்துகிறோம். முன் எப்போதையும் விட மக்களிடம் பாரம்பரிய உணவு மீது ஆர்வம் மிகுதியாகியிருப்பது எங்களுக்கும் ஊக்கத்தைத் தருகிறது" என்கிறார்.
பாரதி மெஸ்ஸில் வாடிக்கையாளர்கள் மட்டுமல்ல; ஊழியர்களை இவர் அணுகும் விதமும் நேர்த்தியானது.
"இது ஒரு கடை அல்ல. இது ஒரு தாய்வீடு. இந்த வீட்டுக்கு வரும் விருந்தாளிகள்தான் வாடிக்கையாளர்கள். எனவே, கவனத்துடன் நாம் சமைத்துத் தர வேண்டும் என்று எங்கள் ஊழியர்களிடம் அறிவுறுத்துகிறோம். எங்கள் ஊழியர்கள் மன ரீதியில் ஈடுபாட்டுடன் இருக்க வேண்டும் என்பதிலும் கவனத்துடன் இருக்கிறோம்.
“தூய்மையான உடை உடுத்திக்கொண்டு வந்தால் தினமும் ரூ.25, சரியான நேரத்துக்கு வந்தால் ரூ.25 என்று இனாம் தருகிறோம். இதில் பணம் முக்கியம் அல்ல; நேரம் தவறாமை என்ற பண்புக்கு நாங்கள் தரும் மரியாதை இது" என்கிறார் கண்ணன்.
வர்த்தக ரீதியிலான வளர்ச்சி குறித்து பேசிய கண்ணன், "திருவல்லிக்கேணியில் பாரதி மெஸ் தொடங்கி 5 ஆண்டுகள் நிறைவடைகிறது. மைலாப்பூர் - கபாலீஸ்வரர் கோயிலுக்கு அருகில் புதிய கிளை தொடங்கி 3 மாதங்கள் ஆகிறது. கொஞ்சம் பெரிய கடையாகவே இருக்கிறது. பாரதியின் படங்கள், சமையல் பாணி உள்ளிட்ட அம்சங்களுடன் திருவல்லிக்கேணியில் உள்ள கடையை அப்படியே பிரதிபலிக்கும்படி அமைத்துள்ளோம். விரைவில் சேப்பாக்கம் மைதானத்தையொட்டி ஒரு கிளையைத் தொடங்க இருக்கிறோம்.
மைலாப்பூர் கிளை 100 சதவீத பெண்களைக் கொண்டு நடத்தப்படுவதைத் தனிச் சிறப்பாக பார்க்கலாம். சமையல் செய்வது முதல் நிர்வகிப்பது வரை எல்லாமே பெண்கள்தான். ஒட்டுமொத்தமாக பாரதி மெஸ் முழுவதுமே பெண்களால் நடத்தப்பட வேண்டும் என்பதே எங்களது இலக்கு. இப்போது 45 பெண்களும், 5 ஆண்களும் பணிபுரிகின்றனர். விரைவில் 100 சதவீத பெண்கள் என்ற இலக்கை எட்டிவிடுவோம்.
தற்போது வேன் ஓட்டுதல் போன்ற வேலைகளில் மட்டும் ஆண்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கொஞ்சம் கொஞ்சமாக நிலை மாறி, பெண்களால் நடத்தப்படும் பாரதி மெஸ் என்று ஆக்கவுள்ளோம். சமையல் முழுவதுமே இப்போது பெண்கள்தான் செய்கிறார்கள். வீட்டில் இருந்து சமைக்கும் தன்மையைத் தக்கவைக்க வேண்டும் என்பதும் ஒரு காரணம். கடை ருசி வந்துவிடக் கூடாது என்பதில் இயன்றவரை கவனத்துடன் இருக்கிறோம். மேலும், பெண்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதன் மூலம் அவர்கள் பெறுகின்ற ஊதியம் முழுமையாக அவர்களது குடும்பத்துக்குப் பயன் தரும் என்று நம்புகிறோம். இதுவே பெண்களுக்கு முக்கியத்துவம் தருவதற்கான முக்கியக் காரணம்" என்கிறார் அழுத்தமாக.
உணவுச் சேவையினூடே போதுமான லாபத்தை ஈட்டக் கூடிய இந்த வெற்றிக்குக் காரணமாக சிலவற்றை முன்வைக்கும் கண்ணன், தங்களிடம் குறைகள் இருப்பதையும் தன்னடக்கத்துடன் ஒப்புக்கொள்கிறார்.
"எந்த ஒரு துறையிலும் தவறுகள் என்பது இயல்பு. அது எங்களிடமும் இருப்பதை மறைக்க விரும்பவில்லை. ஆனால், அந்தத் தவறுகளைக் கண்டறிந்து அதைக் களைவதற்கு உரிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம்.
உதாரணமாக, சில நேரங்களில் உணவு சாப்பிட வரும் வாடிக்கையாளர்கள் சுமார் 10 நிமிடங்கள் காத்திருக்க வேண்டிய நிலை இருக்கிறது. இதை அவர்கள் பொறுத்துக்கொள்வது எங்கள் மீது அவர்கள் வைத்துள்ள அன்பைக் காட்டினாலும், அதுபோன்ற தாமதத்தைத் தவிர்ப்பதற்கு உரிய முயற்சிகளை எடுத்துவருகிறோம். அதேபோல், எவ்வளவுதான் பார்த்துப் பார்த்துச் செய்தாலும் சில நேரங்களில் சுவையில் வித்தியாசம் வந்துவிடுகிறது. அதைத் தவிர்ப்பதற்கும் முயன்று வருகிறோம்.
இவைபோன்ற தவறுகளைக் களைவதற்கு ஊழியர்களுடன் சேர்ந்து தினமும் மூன்று உணவு வேளைகளுக்கு முன்பும் பிரார்த்தனைகளில் ஈடுபடுகிறோம். அது மனதளவில் மாற்றத்தை ஏற்படுத்தி எங்களை நெறிப்படுத்துவதற்குத் துணைபுரிகிறது" என்று தெளிவாகச் சொல்கிறார் கண்ணன்.
மகாகவி பாரதியை மனதில் வைத்துக்கொண்டு பாரதி மெஸ் ஊழியர்கள் மூன்று வேளையும் உதிர்க்கும் பிரார்த்தனை வரிகள் இவை:
"இறைவா வழிகாட்டு. பாரதி மெஸ்ஸில் சாப்பிட்டால் உடலுக்கு கெடுதல் வராது என்ற நம்பிக்கையில் வரும் வாடிக்கையாளர்களுக்கு எங்களால் இயன்றவரை நல்ல உணவைக் கொடுக்க முயற்சி செய்கிறோம். எங்களின் முயற்சித் தொடர, இறைவா வழிகாட்டு."
கண்ணனின் அணுகுமுறை மட்டுமின்றி, லாப நோக்கத்துக்கு அப்பாற்பட்ட உணவுத்துறைக்கே உரிய தொழில்முறை கொள்கை ஒன்றுதான் பாரதி மெஸ்ஸை மென்மேலும் வளர்த்தெடுக்கிறது.
"நாம் வாடிக்கையாளர்களிடம் இருந்து வாங்கும் காசு, நம் உடம்பில் ஒட்டவேண்டும் என்றால், நாம் கொடுக்கும் சாப்பாடு அவர்களின் உடம்பில் ஒட்டவேண்டும்."
- இதுதான் 'பாரதி மெஸ்' கண்ணன் தனக்குத்தானே வகுத்துக்கொண்ட எளிதான அரிய கொள்கை.
படங்கள்: மாவீரன் சோமசுந்தரம்