தல தோனிக்கு சேப்பாக்கம் ஸ்டேடியத்தின் மினியேச்சர் மாடலை பரிசளித்த ரசிகர்!
சிஎஸ்கே கேப்டன் தோனிக்கு சேப்பாக்கம் மைதானத்தின் மினியேச்சர் வடிவத்தை ரசிகர் ஒருவர் பரிசளித்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
சிஎஸ்கே கேப்டன் தோனிக்கு சேப்பாக்கம் மைதானத்தின் மினியேச்சர் வடிவத்தை ரசிகர் ஒருவர் பரிசளித்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
தோனி மீது எப்படி ரசிகர்கள் அன்பு மழை பொழிகிறார்களோ? அதேபோல், அவரும் ரசிகர்கள் மீது அளவு கடந்த அன்பும், மரியாதையும் வைத்துள்ளார். சினிமா பிரபலங்கள் ஆடியோ ரிலீஸ் விழாவில் ரசிகர்களை புகழ்ந்து தள்ளுவதைப் போலவே, ஒவ்வொரு மைதானத்திலும் தனது வெற்றியைக் கொண்டாடும் போது, ரசிகர்களின் ஆதரவையும், அன்பையும் நினைவுகூர தோனி ஒருபோதும் தவறியது இல்லை.
தோனி மீது அன்பு மழை பொழியும் ரசிகர்கள்:
மற்ற சீசன்களை காட்டிலும் நடப்பு ஐபிஎல் தொடர் பல அதிரடி திருப்பங்களுடன் இறுதிக் கட்டத்தை நெருங்கி வருகிறது. ஒருபுறம் கோடிகளை கொட்டிக்கொடுத்து எடுக்கப்பட்ட பிரபல வீரர்களை விடவும், புதுமுகங்கள் களத்தில் அனல் தெறிக்க விளையாடி வருகின்றனர். மற்றொருபுறம் தோல்வி முகத்தில் இருந்த அணிகள் எல்லாம் வீறுகொண்டு விளையாடி “வெற்றி நமதே” என்ற எண்ணத்துடன் சுற்றிக்கொண்டிருந்த அணிகளை எல்லாம், அடித்து ஓரங்கட்டி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.
இதனால் எதிர்பாராத ட்விஸ்ட் அண்ட் டர்ன் உடன் ஐபிஎல் போட்டிகள் களைக்கட்டி வருகிறது. குறிப்பாக இந்த ஆண்டு நடந்து வரும் ஐபிஎல் போட்டியில் தல தோனி மீது ரசிகர்களின் சிறப்பு கவனம் திரும்பியுள்ளது.
சிஎஸ்கே கேப்டன் தோனி காரணமாக 2023 ஐபிஎல் சீசன் அதிக கவனம் பெற்றுள்ளது. எங்கே சென்றாலும், எல்லா மைதானங்களில் தோனிக்கு என்று ஸ்பெஷல் ரசிகர்கள் குவிந்த வண்ணம் இருக்கின்றனர். அவரைக் காண ஆயிரக்கணக்கில் மக்கள் வர தொடங்கி உள்ளனர். இதற்குக் காரணம் கேப்டன் தோனியின் கடைசி ஐபிஎல் தொடர் இதுவென்று கூறப்படுகிறது.
சேப்பாக்கம் மினியேச்சர்:
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சூப்பர் ஸ்டாரான தல தோனிக்கு சேப்பாக்கம் மைதானத்தில் ரசிகர்கள் அளிக்கும் வரவேற்பு நிகரற்றதாக உள்ளது. ஐபிஎல்'லலை பொறுத்தவரை தங்களது சொந்த மாநிலத்தில் விளையாடும் போது பேவரைட் வீரர்களை மண்ணின் மைந்தர்கள் அதிக ஆராவாரத்துடன் வரவேற்பது உண்டு.
ஆனால், வெளிமாநிலங்களில் சென்னை அணி விளையாடும் போட்டிகளுக்கு கூட அம்மாநில ரசிகர்கள் மஞ்சள் ஜெர்சியில் வந்து ஆதரவு அளித்து வருகின்றனர். பெங்களூரு, ராஜஸ்தான், கொல்கத்தா, மும்பை, ஐதராபாத் என்று அனைத்து மாநிலங்களிலும் தோனிக்கு ரசிகர்கள் அளித்த ஆதரவு முன்னாள் கிரிக்கெட் வீரர்களுக்கே ஆச்சரியம் கொடுத்து வருகிறது.
இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தீவிர ரசிகர் ஒருவர் தல தோனிக்கு சேப்பாக்கம் மைதானத்தின் மினியேச்சர் வடிவத்தை கொடுத்து அசத்தியுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.
“இன்ஸ்டா எம்.எஸ்தோனி.எஃப்சி” என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியாகியுள்ள வீடியோவில் தல தோனி டேபிள் மீது வைக்கப்பட்டுள்ள அச்சு அசலாக வடிவமைக்கப்பட்ட சேப்பாக்கம் மைதானத்தின் மினியேச்சர் வடிவத்தை கண்டு ரசிக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. அத்துடன் இந்த மினியேச்சரானது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தீவிர ரசிகர் ஒருவர் தோனிக்கு பரிசளித்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
“மினியேச்சர் வேர்ல்ட்” என்ற மினியேச்சர் தயாரிப்பு நிறுவனம் சார்பில் தோனிக்கு இந்த அன்பு பரிசை வழங்கிய சிவா, தோனியுடன் தான் இருக்கும் போட்டோக்களை சோசியல் மீடியாவில் பகிர்ந்து கொண்டுள்ளார்.