Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

விலங்குகளின் கழிவுகளை எரிசக்தியாக மாற்றி விவசாயிகளுக்கு உதவும் ஸ்டார்ட் அப்!

மெக்சிகோ மற்றும் இந்தியாவைச் சேர்ந்த Sistema.Bio பயோ டைஜஸ்டர்களின் உதவியுடன் விவசாயக் கழிவுகளை பயோ கேஸாக மாற்றுகிறது. குஜராத், மஹாராஷ்டிரா, கர்நாடகா, பீஹார் ஆகிய பகுதிகளில் செயல்படும் இந்நிறுவனம் இதுவரை 1,000-க்கும் அதிகமான வீடுகளில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

விலங்குகளின் கழிவுகளை எரிசக்தியாக மாற்றி விவசாயிகளுக்கு உதவும் ஸ்டார்ட் அப்!

Tuesday March 19, 2019 , 5 min Read

மின் உற்பத்தியில் இந்தியா உலகளவில் மூன்றாம் இடம் வகிக்கும் நிலையிலும் 300 மில்லியன் இந்தியர்களுக்கு மின் ஆற்றல் கிடைப்பதில்லை. மோசமான பைப்லைன் இணைப்பு, போதிய வளங்கள் இருந்தும் மின் உற்பத்தியில் பற்றாக்குறை, திறனற்ற வருவாய் அமைப்பு போன்றவை இந்தியாவில் மின் ஆற்றல் துறையில் இருக்கும் திறனற்ற தன்மைக்கான சில காரணங்களாகும்.

மின் ஆற்றலை அணுக முடியாத காரணத்தினாலேயே கிராமங்கள் முறைசாரா சந்தையை சார்ந்து இருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. இதற்காக அவர்கள் அதிகம் செலவிட வேண்டியுள்ளது என உலக வளங்கள் நிறுவனம் மற்றும் சர்வதேச நிதி நிறுவனத்தின் சமீபத்திய அறிக்கை தெரிவிக்கிறது. உதாரணத்திற்கு பால் பண்ணை விவசாயியான யோகேஷ் காதம் 13 பேர் கொண்ட தனது குடும்பத்தைப் பராமரிக்கவும் மஹாராஷ்டிராவில் இருக்கும் சிறிய கிராமத்தில் இருக்கும் 12 ஏக்கர் நிலத்தை நிர்வகிக்கவும் போராடி வருகிறார். பயிர்கள் மூலம் கிடைக்கும் வருவாயும் அவரிடம் இருக்கும் எட்டு மாடுகளிடமிருந்து கிடைக்கும் பால் விற்பனை மூலமாகவும் அவர் ஈட்டும் வருவாய் போதுமானதாக இல்லை.

”13 பேர் கொண்ட எங்கள் குடும்பத்தின் சமையல் தேவைகளுக்கு ஒரு மாதத்திற்கு 300 கிலோ விறகும் ஒரு எல்பிஜி கேஸ் சிலிண்டரும் தேவைப்பட்டது. சில சமயம் சமைக்கவும் தண்ணீரை சூடு செய்யவும் போதுமான எரிசக்தி இருக்காது,” என்றார் 40 வயது விவசாயி ஒருவர்.

அதே பகுதியைச் சேர்ந்த பால் பண்ணை விவசாயியான 51 வயது சந்தோஷ் ஹோல்கர், தனது வணிகத்தை விரிவுபடுத்த போராடி வந்தார். சந்தோஷின் குடும்பத்தில் நான்கு பேர். இவர் மட்டுமே வருவாய் ஈட்டி வந்தார். இவர் பராமரித்து வந்த 30 மாடுகள் தரும் பாலை விற்பனை செய்வதன் மூலம் கிடைக்கும் வருவாயை மட்டுமே இவரது குடும்பம் சார்ந்திருந்தது. இவர் ஒவ்வொரு மாதமும் 50 கிலோ விறகு வாங்கவும் வீட்டுத்தேவைகளுக்காக 15 கிலோ எல்பிஜி வாங்கவும் செலவழித்ததுடன் டீசலுக்கு 1,200 ரூபாய் செலவிட்டார்.

”இனிப்பில்லாத பால் கோவா போன்ற பால் பொருட்களைத் தயாரிக்க விரும்புகிறேன். இந்தத் தயாரிப்பு முறைக்கு தொடர்ந்து அதிகமான தீ அவசியம். அதற்கு அதிகம் செலவாகும். என்னுடைய கனவு நிறைவேற வேண்டுமானால் அதற்கு அதிகப்படியான எரிசக்தி அவசியம். டீசல் மற்றும் எல்பிஜி-யின் விலை அதிகரித்து வருவதால் இதற்கு அதிகம் செலவிட நேரும்,” என்று யுவர்ஸ்டோரியிடம் தெரிவித்தார் சந்தோஷ்.

சிறு விவசாயிகள் சந்தித்த சவால்களைக் கண்டு Sistema.bio சிஇஓ-வான அலெக்ஸ் ஈடன் மனம் வருந்தினார்.

“சிறிய விவசாய நிலத்தில் வளர்ந்த பின்னணி எனக்கு இருப்பதால் ஒரு நிலத்தைப் பராமரிப்பதில் இருக்கும் கடின உழைப்பை நான் அறிவேன். எரிசக்தி மற்றும் உரங்களைப் பெறுவதில் சிறு விவசாயிகள் சந்திக்கும் பல்வேறு சவால்களை உணர்ந்தேன். இதற்கு நான் தீர்வுகாண விரும்பினேன்,” என்றார் அலெக்ஸ்.

உலகளவில் செயல்படும் இந்நிறுவனத்தின் இந்திய அலுவலகம் 2018-ம் ஆண்டு புனேவில் துவங்கப்பட்டது. கடந்த ஆண்டில் 200-க்கும் அதிகமான பயோ டைஜஸ்டர்களை நிறுவியுள்ளது. இது விவசாயக் கழிவுகளை பயோகேஸாக மாற்றும் ஹைபிரிட் ரியாக்டர் டைஜெஸ்டர் அமைப்பாகும். இந்நிறுவனம் குஜராத், மஹாராஷ்டிரா, கர்நாடகா, பீஹார் போன்ற பகுதிகளில் செயல்பட்டு 1,000-க்கும் அதிகமான வீடுகளில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

Sistema.bio இந்திய செயல்பாடுகளின் இயக்குநர் பியூஷ் சொஹானி விவரிக்கையில்,

”Sistema.bio பயோ டைஜஸ்டர் அமைப்பு ஆர்கானிக் கழிவுகளைப் பெற்றுக்கொண்டு மீத்தேன் அதிகம் கொண்ட பயோகேஸ் வடிவில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை உற்பத்தி செய்கிறது. காற்றில்லாத மூடப்பட்ட ரியாக்டருக்குள் உருவாகும் இயற்கையான பாக்டீரியாக்களை இந்த அமைப்பு பயன்படுத்திக் கொள்கிறது,” என்றார்.

இந்த செயல்முறையின் மற்றொரு பலனாக பயோகேஸ் கிடைக்கிறது. இது சமையலுக்கும் சூடாக்கவும் மின்சார உற்பத்திக்கும் பயன்படுத்தப்படுகிறது. அத்துடன் உள்ளூர் விவசாயத்திற்கு உதவும் பாதுகாப்பான ஆர்கானிக் உரமாகவும் பயன்படுத்தப்படுகிறது. இது பாரம்பரிய எரிபொருளுக்கான செலவு மற்றும் நேரத்திற்கு சிறந்த மாற்றாகும். இயந்திரமயமாக்கலை ஊக்குவித்து பயிரின் விளைச்சலை அதிகரிக்கச் செய்கிறது.

உலகளாவிய நெட்வொர்க்

அலெக்ஸ் விவசாய நிலத்தில் வளர்ந்ததால் சிறு வயது முதலே அவருக்கு விவசாயம் பரிச்சயமான ஒன்று. பத்திரிக்கைத் துறையில் பணி புரிந்தாலும் விவசாயிகளின் பிரச்சனைக்குத் தீர்வுகாண உதவுவதுடன் சுற்றுச்சூழலுக்கு உகந்த வளர்ச்சியில் பங்களிக்க விரும்பினார். இணை நிறுவனரான கேமிலோ பேஜஸ் உடன் இணைந்து பயோ டைஜஸ்டர் அமைப்பு உருவாக்கும் சோதனை முயற்சியைத் துவங்கினார்.

”பயோகேஸ் தொழில்நுட்பம் கடந்த 50 ஆண்டுகளாக வளர்ச்சியடையவில்லை என்பதை உணர்ந்தேன். சிறப்பான தயாரிப்பு, நிதி, சேவை ஆகியவற்றை வழங்க வாய்ப்பு இருந்தது. நாங்கள் உலகம் முழுவதும் உள்ள சிறு விவசாயிகளுக்குத் தேவையான தொழில்நுட்பத்தை மலிவான விலையிலும் நம்பகத்தக்க வகையிலும் வழங்கி உற்பத்தித் திறன் அதிகரிக்க உதவ விரும்புகிறோம்,” என்றார் அலெக்ஸ்.

அலெக்ஸ் முதலில் மத்திய மெக்சிகோ பகுதியில் இருக்கும் சிறு விவசாயிகளுக்கு தனது புதுமையான பயோ டைஜஸ்டர் இயந்திரத்தை அறிமுகப்படுத்தினார். அவர்களது தேவைக்கேற்ப தயாரிப்பை வடிவமைத்த பிறகு அனைத்து வகையான விவசாயிகளுக்கும் சேவையளிக்கும் விதத்தில் இந்நிறுவனம் பல்வேறு மாற்றங்களை அறிமுகப்படுத்தத் துவங்கியது. ஒவ்வொரு அமைப்பும் ஆறு விவசாயிகளிடம் தாக்கத்தை ஏற்படுத்தி ஒரு வருடத்திற்கு ஐந்து டன் கார்பன் வெளியேற்றத்தைக் குறைத்து சேமிப்பை அதிகரிக்கிறது. ஓராண்டிற்குள்ளாகவே இவர்களது தயாரிப்புகள் பிரபலமானது. இந்நிறுவனத்தின் செயல்பாடுகள் மெக்சிகோவின் முன்னாள் குடியரசுத் தலைவர் Felipe Calderon Hinojosa கவனத்தைப் பெரிதும் ஈர்த்தது. அவர் இது குறித்து கூறுகையில்,

”இத்திட்டம் பல்வேறு நன்மைகளை உள்ளடக்கியது. இதில் நொதித்தல் முறை மூலம் ஆர்கானிக் கழிவுகளைக் கொண்டு பயோகேஸ் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த பயோகேஸை சமையல் அடுப்புகளில் பயன்படுத்தலாம் என்பதால் சேமிப்பு அதிகரிக்கும். அத்துடன் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும். எனவே இது ஆரோக்கியத்திற்கும், பொருளாதாரத்திற்கும் சிறந்தது,” என்றார்.

மெக்சிகோவில் வெற்றியடைந்ததும் அலெக்ஸ் கடந்த ஆண்டு இந்தியாவில் கவனம் செலுத்தத் துவங்கினார். உலகளவில் உள்ள விவசாயிகள் பருவநிலை சார்ந்த சவால்களையும் சந்தை தொடர்பான சவால்களையும் சந்திக்கின்றனர். வறட்சி, வெள்ளம், பால் விலையில் ஏற்ற இறக்கம் போன்றவை இத்தகைய சவால்களில் அடங்கும். எனவே உலகளவில் வலுவான நெட்வொர்க்கை உருவாக்குவதிலும் வளர்ந்து வரும் தொழில்முனைவு சுற்றுச்சூழலை முறையாகப் பயன்படுத்துவதிலும் கவனம் செலுத்தி பியூஷுடன் இணைந்து புனேவில் செயல்படத் துவங்கினார்.

”இந்தியாவில் புதுமையான விவசாயத் தொழில்நுட்பம் உள்ளது. அவை இயற்கை வேளாண் பகுதியில் அங்கீகரிக்கப்பட்டு வருகிறது. புதிய தொழில்நுட்பங்கள் சிறப்பாக செயல்படுவதைப் பார்க்கும்போது இந்திய விவசாயிகள் அவற்றை ஏற்றுக்கொள்ளத் தயார் நிலையில் உள்ளனர்,” என்றார் அலெக்ஸ்.

இந்திய செயல்பாடுகள்

Sistema.Bio இந்தியாவில் Clnl உடன் இணைந்து 2017-ம் ஆண்டு குஜராத்தில் தொழில்நுட்ப சோதனை நடத்தியது. மூன்றாண்டுகளில் இந்நிறுவனம் 60-க்கும் மேற்பட்ட வீடுகளுடன் பணியாற்றி குஜராத்தில் உள்ள 500-க்கும் மேற்பட்டோரின் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தியது. இவர்களது தொழில்நுட்பம் 299 டன் கார்பன் டையாக்ஸைடிற்கு மாற்றாக செயல்பட்டு வருடத்திற்கு 123 மரங்களை பாதுகாக்க உதவியுள்ளது. பியூஷ் விவரிக்கையில்,

”இந்தத் தொழில்நுட்பம் விலங்குகளின் கழிவுகளை எரிசக்தியாக மாற்றுவதால் விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டினர். விலங்குகளின் கழிவுகள் சமையலுக்கான எரிசக்தியாக பயன்படுத்தப்படலாம் என்பது அவர்களது கற்பனைக்கு அப்பாற்பட்டதாக இருந்தது. புனேவின் ஃபல்டன் பகுதியில் உள்ள சாங்வியில் இருக்கும் எங்களது கிளை அலுவலகத்தில் இருந்தவர்களும் பயோ டைஜஸ்டரின் செயல் விளக்கத்தைக் கண்டு உற்சாகமடைந்தனர்,” என்றார்.

குஜராத்தில் இந்தத் தயாரிப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டத்தைப் பார்த்த பிறகு ஒன்பது பேர் கொண்ட Sistema.Bio குழு மஹாராஷ்டிரா முழுவதும் உள்ள சிறு விவசாயிகளை சென்றடையத் துவங்கினர். விளம்பர நிகழ்ச்சிகள் மூலமாகவும் விவசாயிகளுக்கான கண்காட்சிகள் மூலமாகவும் விவசாயிகளை சென்றடைந்தனர். புனேவின் ஃபல்டன் பகுதியில் உள்ள இவர்களது கிளை அலுவலகம் விவசாயிகளுக்கான சில்லறை வர்த்தக மையமாக செயல்பட்டது. மஹாராஷ்டிரா மற்றும் கர்நாடகாவில் உள்ள விவசாயிகள் பயோஸ்லர்ரி அல்லது பயோஉரங்கள் குறித்து நன்கறிந்தவர்கள் என்பதால் இந்தச் சந்தையில் செயல்படுவது எளிதாக இருந்தது என்றார் பியூஷ்.

”சிறு விவசாயிகள், குடும்பங்கள், கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்கள் போன்றோர் கழிவுகளை எரிசக்தியாக மாற்றும் தொழில்நுட்பத்தைக் கொண்டு தங்களது சிறு நிலங்களில் உற்பத்தித் திறனை அதிகரிக்கச் செய்யவும் சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் செயல்படவும் முதலீடு செய்ய முன்வருவார்கள் என நாங்கள் நம்பினோம். பொருளாதார ரீதியான அவர்களது முதலீடு சிறப்பாக பலனளிக்கும் வகையில் தொழில்நுட்பம், பயிற்சி, நிதி ஆகியவற்றை ஒரு தொகுப்பாக வழங்குகிறோம். அத்துடன் எங்களது செயல்பாடுகள் ஆரோக்கியம், சுற்றுச்சூழல் மற்றும் சமூக ரீதியான தாக்கத்தை ஏற்படுத்துகிறது,” என்றார் பியூஷ்.

அடுத்தகட்ட செயல்பாடுகள்

ONergy, Simpa Networks, Mlinda போன்ற க்ளீன் எனர்ஜி ஸ்டார்ட் அப்கள் இந்திய கிராமப்புறங்களுக்கு க்ளீன் மற்றும் புதுப்பிக்கப்பட்ட ஆற்றலை மலிவு விலையில் வழங்கும் நோக்கத்துடன் செயல்படுகிறது. இருப்பினும் Sistema.Bio சேவை மற்றும் நிதி தொடர்பான ஆதரவையும் வழங்கி தனித்துவமாக செயல்படுகிறது என்றார் அலெக்ஸ். உதாரணத்திற்கு பயோடைஜஸ்டர் அமைப்பை எளிய தவணை முறையில் வாங்கும் வசதியை விவசாயிகளுக்கு வழங்குகிறது. அத்துடன் பத்தாண்டு கால உத்தரவாதமும் வழங்கப்படுகிறது.

”அரசாங்கத்தின் பயோகேஸ் திட்டங்கள் பரவலாக்கப்பட்டு வருவதால் இந்தியாவில் பயோகேஸ் சந்தை வளர்ச்சியடைந்து வருகிறது. இந்தத் துறை சார்ந்த நிபுணர்கள் மற்றும் பொறியாளர்கள் தரப்பிலிருந்து சிறு விவசாயிகளுக்கான புதுமையான கண்டுபிடிப்புகள் இன்னமும் தேவைப்படுகிறது. கிராமப்புறங்களில் மிகப்பெரிய அளவில் வாய்ப்புகள் உள்ளது என்பதையும் பெரியளவிலான புதுமைகள் விவசாயிகளுக்கு நன்மை பயக்கும் என்பதையும் நாங்கள் தெரிந்துகொண்டோம். இந்தியாவில் 1,000 யூனிட்களுக்கு மேல் நிறுவி 5,000-க்கும் அதிகமானோர் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளோம்,” என்றார் அலெக்ஸ்.

Sistema.Bio சோஷியல் ஆல்ஃபாவால் இன்குபேட் செய்யப்பட்டுள்ளது. இந்நிறுவனம் கர்நாடகா, மஹாராஷ்டிரா, குஜராத், பீஹார் ஆகிய பகுதிகள் முழுவதும் Clnl, TATA Trust, SELCO Foundation ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

ஆங்கில கட்டுரையாளர் : ஸ்ருதி கேடியா | தமிழில் : ஸ்ரீவித்யா