விவசாயிகளுக்கு நிதி எங்கிருந்து வருகிறது? போரட்டம் உயிர்ப்புடன் இருப்பது எப்படி?
டெல்லியில் போராடும் விவசாயிகள் இத்தனை நாட்கள் எப்படி தொடர்கிறார்கள்? நிதி எங்கிருந்து வருகிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
விவசாயிகள் உறுதியுடன் இருக்கிறார்கள். போராட்டம் வாபஸ் பெறும் மனநிலையில் இல்லை. மத்திய அரசு வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும் வரை போராட்டம் நடத்தப்படும் என கூறியுள்ளனர். அடுத்தக்கட்டமாக நாடுமுழுவதும் உள்ள விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார்கள்.
டெல்லியை திணறடிக்கும் விவசாயிகளின் போராட்டம் என்பது இப்போது ஆரம்பித்ததல்ல. ஜூன் மாதம் விவசாயச் சட்டம் தொடர்பான தகவல் வெளியானபோதே, போராட்டத்தை கையிலெடுத்தவர்கள் விவசாயிகள்.
பஞ்சாப் ஹரியானாவில் 10 உழவர் சங்கங்களுடன் தொடங்கிய போராட்டம் செப்டம்பரில் 31 அமைப்புகளாக விரிவடைந்தது. இன்று டெல்லியின் எல்லைகள் மூடபட்டுக்கிடக்கின்றன. ஆயிரக்கணக்கான டிராக்டர்கள் மற்றும் டிராலிகளுடன் டெல்லி எல்லைகளுக்குள் படையெடுக்கின்றனர் விவசாயிகள்.
போராட்டத்தின் நடுவே அடுப்பு எரிந்துகொண்டேயிருக்கிறது. பஞ்சாப்பின் லங்கர் எனப்படும் கூட்டு சமையல் மூலம் எந்த நேரம் பார்த்தாலும் ஏதோ ஒன்று சமைக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது. விவசாயிகளுக்கு மட்டுமின்றி அங்கிருக்கும் காவலர்களுக்கும் உணவு பரிமாறி, விவசாயிகளின் உன்னத நோக்கத்தை அவர்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.
இதற்கெல்லாம் எங்கிருந்து நிதி கிடைக்கிறது?
தங்கள் ஊரை விட்டு, விட்டு டெல்லியில் முகாமிட்டிருக்கும் விவசாயிகளுக்கு எங்கிருந்து நிதி கிடைக்கிறது? எப்படி குடும்பத்தை சமாளிப்பார்கள்? இப்படியான கேள்விகள் தொக்கி நிற்கின்றன.
இந்த கேள்விகளுக்கெல்லாம் பதில் இதுதான். பெரும்பாலும் போராட்டத்தில் பங்கேற்க வரும் விவசாயிகள், தங்களுக்குத் தேவையானவற்றை தாங்களே கொண்டு வருகிறார்கள். அவர்களின் சொந்த கிராமம், மற்றும் சங்கத்தின் மூலமாகவும் உதவிகள் செய்யப்படுகின்றன. இதையெல்லாம் கடந்து விவசாயிகளுக்கு பல்வேறு இடங்களிலிருந்தும் உதவிகள் கிடைப்பது தான் போராட்டம் இத்தனை நாள் உயிர்ப்புடன் இருக்கக் காரணம் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.
ஹரியானாவில் உள்ளது ஃபதேஹாபாத் மாவட்டம். இங்குள்ள ஃபுலான் கிராமத்தில் வசிக்கும் கிராம மக்கள் தாங்கள் வளர்க்கும் பசுக்களிலிருந்து பாலை கறந்துகொண்டு வருகிறார்கள். ஒருமணி நேரத்திற்குள் 50 லிட்டர் சேகரிக்கப்பட்டு, வாகனத்தில் ஏற்றி குண்ட்லி எல்லைக்கு அனுப்பப்படுகிறது.
அந்த ஒரு கிராமம் மட்டுமின்றி, சுற்றியுள்ள 35 கிராமங்களிலிருந்து நாள்தோறும் சுமார் 2000 லிட்டருக்கும் அதிகமான பால் குண்ட்லி எல்லைக்கு கொண்டுவரப்படுகிறது. இந்த குண்ட்லி எல்லையில் தான் ஹரியானா மாநில விவசாயிகள், வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடி வருகிறார்கள். போராட்டம் நடந்துவரும் இந்த 14 நாட்களும் தினமும் காலையில் இங்கு பால் அனுப்பப்பட்டு வருகிறது.
குண்ட்லியில் இருந்து 200கி.மீ தொலைவில் உள்ளது ராஜஸ்தானின் ஸ்ரீகங்காநகர். இந்த மாவட்டத்தில் உள்ள லாகியன் கிராமத்தில் வசிக்கும் விவசாயி பரார் என்பவர் அமைப்பு ஒன்றை உருவாக்கியுள்ளார். அதன்மூலம்,
விவசாயிகளுக்கான நிதியை திரட்டி வருகிறார். தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், நில உரிமையாளர்கள் உள்ளிட்ட பலரும் விவசாயிகள் போராட்டத்துக்கு நிதி அளித்து வருகின்றனர். இதில் அரசியல் கட்சியினர் சிலரும் கூட மறைமுகமாக நிதி கொடுத்து உதவி வருவதாக கூறுகிறார் விவசாயி பரார். இந்த நிதி தான் விவசாயிகளின் டிராக்டர்களுக்கு எரிபொருள் வாங்க பயன்படுத்தப்படுகிறது.
நமது நாட்டில் இருந்து இந்த ஆதரவு என்றால், கலிபோர்னியாவைச் சேர்ந்த தத் சகோதரர்கள், களத்தில் போராடிக்கொண்டிருக்கும் விவசாயிகளுக்கு எதிர்ப்புச் சக்தி வேண்டும் என்பதால் பாதாம் அனுப்பி உதவுகின்றனர்.
ஒன்றல்ல இரண்டல்ல, இதுவரை 200 குவிண்டால் பாதம் பேக்குடகளை போராட்டக்கார்களுக்கு அனுப்பியுள்ளனர் அந்த சகோதரர்கள். அதுமட்டுமின்றி, தனியார் பெட்ரொல் பங்க் உரிமையாளர் ஒருவர் விவசாயிகளுக்கு இலவசமாக எரிபொருளை வழங்கி வருகிறார்.
சில பெரிய விவசாயிகள் குவிண்டால் கணக்கில் சமையலுக்குத் தேவையான கேரட் போன்ற காய்கறிகளை அனுப்பி வருகிறார்கள். பஞ்சாப் முஸ்லீம் கூட்டமைப்பு ஒன்று, தேவையான அரிசிகளை அனுப்பி வருகிறது. இதுமட்டுமின்றி, விவசாயச் சங்கங்கள், தன்னார்வலர்கள் மூலம் நிதி சேகரிக்கப்பட்டு வருகிறது. இப்படி பல வழிகளில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்குத் தேவையானவை கொண்டு வந்து சேர்க்கப்படுகின்றன.
சில அமைப்புகள் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ள பெண் விவசாயிகளுக்கு சானிட்டரி பேடுகளை இலவசமாக அனுப்பி வைத்துள்ளனர். இப்படி அங்கு கூடி இருக்கும் பல மாநில விவசாயிகளுக்கு பல முனைகளில் இருந்து நிதி மற்றும் உதவிகள் குவிந்து வருகிறது.
இத்தனை உதவிகளும் போராட்டக்களத்திலிருக்கும் விவசாயிகளுக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் வழங்கப்படுகின்றன. இந்த உதவும் கரங்கள் சொல்ல வருவதெல்லாம் ஒன்றுதான். அது சர்ச்சைக்குரிய 3 விவசாயச் சட்டங்களையும் நீக்க வேண்டும் என்பதுதான். மத்திய அரசு இதற்கு செவிமடுக்குமா என்பதை காலம்தான் பதில் சொல்லவேண்டும்.
தொகுப்பு: மலையரசு