1 மணி நேரத்துக்குள் இத்தனை உணவுகளை சமைக்க முடியுமா? சாதித்த தமிழக சிறுமி!
உங்களால் அதிகபட்சமாக 2 வெவ்வேறு உணவு வகைகளை எவ்வளவு நேரத்தில் செய்ய முடியும்? 30 நிமிடம்? 4 வகையான உணவுப்பொருட்கள் என்றால் 1 மணிநேரம் தேவைப்படுமா? சிறந்த செஃப் – பை தேர்வு செய்வதற்கான போட்டிக்கு கேட்கப்படும் கேள்வியைப்போல் தோன்றுகிறதல்லவா...
5 முதல் 6 வகையான உணவுப்பொருட்களை ஒருமணிநேரத்துக்குள் தயாரிக்கும் திறமை படைத்த பெரும்பாலான செஃப்-கள் இங்குண்டு. எல்லாமே அனுபவம் மற்றும் பயிற்சியால் சாத்தியம்தான். ஆனால் சில நேரங்களில், மிகவும் அனுபவமுள்ள சமையல்காரர்கள் மற்றும் சமையல் ஆர்வலர்கள் கூட ஒரே நேரத்தில் பல்வேறு வகையான உணவுப்பொருட்களை தயாரிக்க நேரம் எடுப்பார்கள்.
சரி! இது ஒருபுறம் இருக்கட்டும். அனுபவம் வாய்ந்த சமையல் கலைஞர்களால் செய்ய முடியாத்தைக் கூட ஒரு பள்ளி மாணவி செய்துகாட்டியிருக்கிறார் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?!. ஆம், தமிழ்நாட்டைச் சேர்ந்த பள்ளி மாணவி ஒருவர், நம்மால் நம்ப முடியதா ஒன்றை செய்து காட்டி அசத்தியுள்ளார்.
லக்ஷ்மி சாய் ஸ்ரீ தான் அந்த சிறுமி. வெறும் 58 நிமிடத்தில் 46 வகையான உணவுப் பொருட்களை சமைத்து அசத்தியிருக்கிறார். இதன்மூலம் அவர், யுனிகோ புக் ஆஃப் வேல்டு ரெக்கார்ட் (UNICO Book of World Record) உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார்.
சென்னையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் லஷ்மி பாரம்பரிய உணவுகளை சமைத்த விதம் அங்கிருந்தவர்களை வெகுவாகக் கவர்ந்தது. ஒருமணி நேரத்துக்குள்ளாகவே அவர் சமைத்த உணவுப்பொருட்களின் புகைப்படங்களை ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.
”நான் தமிழகத்தில் பல்வேறு வகையான பாரம்பரிய உணவுகளை சமைப்பேன். அது கொரோனா ஊரடங்கு அமலில் இருந்த நேரம். அப்போது என் மகள், என்னுடன் சமையலறையில் அதிக நேரம் செலவிடுவாள். புது வகையான உணவுப்பொருட்களை சமைப்பது குறித்து எளிதில் கற்றுக்கொள்ளக் கூடிய திறமை அவளிடம் இருந்தது. என் மகளுக்கு சமைப்பதில் இருக்கும் ஆர்வம் குறித்து, என் கணவரிடம் கூறினேன்.”
”தொடர்ந்து அவருக்கு அதில் நல்ல திறமை இருப்பது குறித்தும் நாங்கள் ஆலோசித்தோம். அப்போது எனது கணவர், சமையல் தொடர்பான உலக சாதனை முயற்சியை மேற்கொள்வது குறித்து யோசனை சொன்னார். அப்படித்தான் எங்களுக்கு இந்த ஐடியா தோன்றியது,” என்கிறார் சிறுமியின் தாய் கலைமகள்.
கேரளாவில் 10 வயது சிறுமி ஒருவர் 1மணி நேரத்துக்குள் 30 வகையான உணவுகளை சமைத்து சாதனை படைத்திருந்தார். இதை தொடர்பாக அறிந்த லஷ்மியின் தந்தை, அந்த சாதனையை தனது மகள் முறியடிக்க வேண்டும் என்று விரும்பியுள்ளார். அதன்படியே தன் தந்தையின் எண்ணை நிறைவேற்றி அசாத்திய சாதனை படைத்துள்ளார் லஷ்மி.
தகவல் மற்றும் படங்கள் உதவி: ஏஎன்ஐ