Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Yourstory

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

YSTV

ADVERTISEMENT
Advertise with us

மரண விபத்தில் இருந்து மீண்டெழுந்து இந்திய அணியில் இடம்பெற்ற ஃபீனிக்ஸ் நாயகன் ரிஷப் பந்த்!

ஆம்! எரியும் காரிலிருந்து அன்று ரஜத் குமார், நிஷு குமார் என்ற இருவரும் ரிஷப் பந்த்தை பிடித்து வெளியே இழுத்து காப்பாற்றியிருக்காவிடில் இன்று ரிஷப் பந்த் இல்லை. தலைகுப்புற கிடந்த ரிஷப் பந்த்தின் வலது மூட்டு 90 டிகிரி திரும்பி விட்டது.

மரண விபத்தில் இருந்து மீண்டெழுந்து இந்திய அணியில் இடம்பெற்ற ஃபீனிக்ஸ் நாயகன் ரிஷப் பந்த்!

Friday June 14, 2024 , 4 min Read

வங்கதேசத்திற்கு எதிராக மிர்பூரில் 2-வது டெஸ்ட் போட்டி 2022ம் ஆண்டு டிசம்பர் 22 முதல் 25 வரை நடைபெற்றது. இந்த டெஸ்ட் போட்டியில் இந்தியா வெல்வதற்குப்பிரதான காரணமாகத் திகழ்ந்தார் ரிஷப் பந்த்.

வங்கதேச அணியின் 227 ரன்களுக்கு எதிராக இந்திய அணி 94/4 என்று தடுமாறிக் கொண்டிருந்த போது, கிரீசில் இருந்தார் ரிஷப் பந்த், அவருடன் ஸ்ரேயஸ் அய்யர் ஜோடி சேர ரிஷப் பந்த் தனக்கேயுரிய மரபு மீறிய பேட்டிங் ஆட்டத்தினால் 104 பந்துகளில் 7 பவுண்டரிகள் 5 சிக்சர்களுடன் 94 ரன்களை விளாசினார். இந்தியா கடினமான குழிப்பிட்சில் முதல் இன்னிங்ஸ் முன்னிலை பெற்று அந்த டெஸ்ட் தொடரை வென்றது இந்திய அணி.

வெற்றி பெற்ற நாள் டிசம்பர் 25 ஞாயிறு. ஆனால், இன்னும் 5 நாட்களில் தன் வாழ்க்கையையே புரட்டிப் போடக்கூடிய மரணத்தின் வாசலை எட்டிப்பார்க்கச் செய்யும் விபத்தை சந்திக்கப்போகிறோம் என்று ரிஷப் பந்த் அறிந்திருக்கவில்லை.

டிசம்பர் 30ம் தேதி அதிகாலை கார் விபத்தில் சிக்கினார் பந்த். காப்பாற்றப்பட்டதே பெரிய அதிசயம், அதன் பிறகு, அவருக்குக் கிடைத்தது புனர் ஜென்மம் என்றால் மிகையாகாது. அதாவது, தன் கார் விபத்தைப் பற்றி அவர் பின்னால் நினைவு கூர்ந்த போது அந்தத் தருணத்தில், 'இந்த உலகத்தில் என் காலம் முடிந்து விட்டது,” என்று நினைத்தேன் என்று கூறினார்.
rishab pant

ஆம்! எரியும் காரிலிருந்து அன்று ரஜத் குமார், நிஷு குமார் என்ற இருவரும் ரிஷப் பந்த்தை பிடித்து வெளியே இழுத்து காப்பாற்றியிருக்காவிடில் இன்று ரிஷப் பந்த் உயிருடன் இல்லை. தலைகுப்புற கிடந்த ரிஷப் பந்த்தின் வலது மூட்டு 90 டிகிரி திரும்பி விட்டது.

ரசிகர்களுக்கும் பேரதிர்ச்சி. இனி அந்த ‘ஒரு கை சிக்ஸ்’ பார்க்க முடியுமா? வேகப்பந்து வீச்சாளர்களை மேலேறி வந்து விளாசும் கால்களைப் பார்க்க முடியுமா, ஸ்பின்னர்களை ரிவர்ஸ் ஷாட் அடித்து வெளுக்கும் ரிஷப் பந்த்தை இனி பார்க்க முடியுமா என்ற ஆதங்கம் மேலிட்டது.

‘ஆனால் எனக்குக் கிடைத்தது 2-வது உயிர், 2வது வாழ்க்கை’ என்று பீனிக்ஸ் பறவையாய் எழுச்சிபெற்றதை வர்ணித்தார் ரிஷப் பந்த். ஆம்! மரணத்திடம் போய் விட்டு திரும்பியுள்ளார் இந்த மரணத்தை எண்ணிக் கலங்கிடாமல் எழுச்சி பெற்ற ‘விஜயன்’ ரிஷப் பந்த்.

விபத்திலிருந்து மீண்ட ரிஷப் பந்த்திற்கு உண்மையில் தன் உடம்பில் எந்தெந்த இடங்களிலெல்லாம் காயம் ஏற்பட்டுள்ளது என்று கூட தெரியாத அளவுக்கு மோசமான சாலை விபத்து அது. முதலில் டெஹ்ராடூன் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றார். அங்கிருந்து மும்பை மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இங்குதான் வலது முழங்காலில் கிழிந்த மூன்று தசைநார்களை இழுத்து வைத்து பழைய நிலைக்குக் கொண்டு வரும் அறுவை சிகிச்சைகள் நடந்தது. அவரது கால்கள் ஒல்லியாகிவிட்டன. உடல் எடை குறைந்தது. தேசிய கிரிக்கெட் அகாடமியில் அவருக்கு புனர் சிகிச்சை நடைபெற்றது.

புனர்வாழ்வுக்கான சிகிச்சை என்பது தனிநபராக பெரிய சோர்வூட்டக்கூடியது. தினசரி செய்ததையே செய்ய வேண்டும். வெறுப்பாகிவிடும் என்று ரிஷப் பந்த்தே பிற்பாடு ஒரு பேட்டியில் கூறினார்.

கடுப்பாகிய பந்த், மருத்துவரிடம் ‘எத்தனை காலம் ஆகும்?’ என்று கேட்க அவர் 16-18 மாதங்கள் ஆகும் என்று கூறியுள்ளார். ஆனால், இங்குதான் ரிஷப் பந்த்தின் மனவலிமை அவரை விரைவில் குணப்படுத்தியுள்ளது. அதாவது, மருத்துவர் கூறுவதற்கு 6 மாதம் முன்னதாகவே குணமடைந்து விடுவோம் என்று மனத்தில் சங்கல்பம் பூண்டார்.
Rishabh Pant

விபத்து நடந்த போது ஒரு காலை இழந்து விடுவோம் என்று தீவிரமாக நம்பி கடும் கவலையடைந்த ரிஷப் பந்த் அதன் பிறகு மருத்துவர் சொன்னதிலிருந்து 6 மாதத்திற்கு முன்னதாகவே குணமடைந்ததுதான் ரிஷப் பந்த் என்னும் வீரனின் உளவியல் வலிமை.

ரிஷப் பந்த்தின் மேலாளரும் நண்பரும் ஆன புனீத் சோலங்கி ஒரு பேட்டியில் விபத்துக்குப் பிறகான சூழ்நிலையை வர்ணிக்கும் போது,

“முதல் அறுவை சிகிச்சை முடிந்த பிறகு ஒரு கண்ணைத் திறந்தார் ரிஷப். என்னை அருகில் அழைத்து ‘என் கால்களில் இருக்கும் பேடை அகற்று, இந்த என் கிளவ்களைப் பிடி’ என்றார். அந்த அளவுக்கு கிரிக்கெட் நினைவிலேயே இருந்துள்ளார்," என்றார்.

ஒரு மாதம் படுத்த படுக்கையாக இருந்தார். எழுந்து நடக்க ஆசை, ஆனால் முடியாது. பிறகு கொஞ்சம் கொஞ்சமாக மனதைரியமும் சிகிச்சைகளின் பலன்களும் கிடைக்க மீண்டு எழுந்துள்ளார் ரிஷப் பந்த்.

டெஸ்ட் கிரிக்கெட்டின் போக்கையே தன் அதிரடி பேட்டிங்கினால், குறிப்பாக இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டின் போக்கையே மாற்றியவர் ரிஷப் பந்த். குறுகிய காலத்தில் மேட்ச் வின்னராக கடினமான பிட்ச்களில் பெரிய பவுலர்களை மிரட்டும் பாணியில் ஆடியது ரிஷப் பந்த் ஒரு பொக்கிஷ வீரர் என்ற தகுதியை ரசிகர்களிடத்தும் கேப்டன்களிடத்தும் பெற்றுத் தந்தது.

Rishabh Pant

கார் விபத்துக்குப் பிறகு அந்தப் பயங்கரம் மீண்டும் மீண்டும் வந்து அச்சுறுத்துவதால் காரை இனி தொடமாட்டார் என்று பலரும் நினைத்தனர், ஆனால் மீண்டும் கார் ஓட்டத் தொடங்கியுள்ளார். கொஞ்சம் கொஞ்சமாக சகஜ நிலைக்குத் திரும்பி கிரிக்கெட்டிலும் கடுமையாக பயிற்சிகளை மேற்கொண்டு முதலில் ஐபிஎல் போட்டிக்குத் திரும்பினார்.

அதில் சிறப்பான சில இன்னிங்ஸ்களை ஆட அவரது பழைய ஸ்ட்ரோக்குகளை மீண்டும் பார்த்த போதுதான் ரசிகர்களும் திருப்தி அடைந்தனர், ரோஹித் சர்மாவும் திருப்தி அடைந்தார், ராகுல் திராவிட்டும் திருப்தி அடைந்தார். இதனையடுத்து, டி20 உலகக் கோப்பையில் இப்போது ஆடுகிறார்.

முதல் போட்டியில் அயர்லாந்துக்கு எதிராக அந்த கடைசி வின்னிங் ஷாட் ‘ரிவர்ஸ் ஹூக்’ போன்று ஆடியது திகைப்பூட்டும் ஒரு ஷாட். பிறகு பாகிஸ்தானுக்கு எதிராக ஆடியது அதிர்ஷ்டம் நிரம்பிய இன்னிங்ஸ் என்றாலும் அவர் எடுத்த 42 ரன்கள் வெற்றிக்கு வித்திட்டது. நடப்பு உலகக்கோப்பையில் 3ம் நிலையில் இறங்கும் ஒரு முக்கியமான பொறுப்பு அவருக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. கோலி ஆடிய டவுன் அது. அந்த இடத்தில் ஆடுவது சாதாரணமல்ல.

மரணத்திற்குள் சென்று திரும்பிய ரிஷப் பந்த்தினால் அந்த ரோலையா சிறப்பாக செய்ய முடியாது? நிச்சயம் செய்வார், இந்தியா டி20 உலகக்கோப்பையை வெல்லும் என்றால் அது ரிஷப் பந்த்தின் அதிரடி பேட்டிங், விக்கெட் கீப்பிங் இல்லாமல் சாத்தியமில்லை. இந்த ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அங்கே பார்டர்-கவாஸ்கர் ட்ராபியை தக்க வைக்க ரிஷப் பந்த்தின் மீள்வருகை நிச்சயம் இந்திய அணிக்கு ஒரு பெரிய பக்கபலமாகவும் உத்வேகம் அளிப்பதாகவும் இருக்கும்.