இந்திய விமானப் படையில் உச்சம் தொட்ட சிங்கப் பெண் - மேற்கு இந்திய செக்டரின் தளபதி ஷாலிசா தாமி!
இந்திய விமானப் படையின் குரூப் கேப்டன் ஷாலிசா தாமி, மேற்கு இந்திய செக்டரின் போர்ப் படைப் பிரிவின் தளபதியாக தேர்வு செய்யப்பட்டு, புதிய சரித்திரம் படைத்துள்ளார்.
இந்திய விமானப் படையின் குரூப் கேப்டன் ஷாலிசா தாமி, மேற்கு இந்திய செக்டரின் போர்ப் படைப் பிரிவின் தளபதியாக தேர்வு செய்யப்பட்டு, புதிய சரித்திரம் படைத்து, ஒட்டுமொத்த வீராங்கனைகளையும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடும் வகையில், 90 ஆண்டு கால விமானப் படை வரலாற்றில் படைப் பிரிவு ஒன்றில் முதல் பெண் தளபதியாக ஷாலிஜா தாமி நியமிக்கப்பட்டுள்ளார். பாகிஸ்தான் எல்லைக்கு அருகில் உள்ள ஏவுகணைப் படையின் கமாண்டர் அதிகாரியாக குரூப் கேப்டன் ஷாலிஜா தாமியை இந்திய விமானப் படை நியமித்துள்ளது.
சட்டப் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி:
1992-ம் ஆண்டு முதலே இந்திய ராணுவத்தில் பெண் வீராங்கனைகள் பணியமர்த்தப்பட்டு வந்தாலும், நிரந்தர காமண்டர் பணி என்பது பெண் வீராங்கனைகளுக்கு எட்டாக்கனியாக இருந்து வந்தது. குறுகிய கால சேவை கமிஷனின் கீழ் பெண்கள் 16 ஆண்டுகள் மட்டுமே சேவையாற்ற முடியும் என்ற நிலையும், லெப்டினட் கர்னலுக்கு மேல் ஒரு பெண் அதிகாரியால் பதவி உயர்வு பெற முடியாது போன்ற அவலம் நீடித்து வந்தது. நிரந்தர கமிஷனுக்கு தேர்வு செய்யப்பட்டால் மட்டுமே பெண்களால் கர்னல், பிரிகேடியர், ஜெனரல் போன்ற பதவிகளில் அமர முடியும் என்ற நிலை நீடித்து வந்தது.
இந்த பாலின சமத்துவமின்மையை எதிர்த்து பெண் ராணு வீராங்கனைகள் நடத்திய சட்டப் போராட்டத்திற்கு வெற்றியாக தேசிய ராணுவ கல்லூரி மூலம் நிரந்தர கமிஷனில் சேரவும், ராணுவத்தில் உள்ள 10 பிரிவுகளில் உள்ள பெண் அதிகாரிகளுக்கு நிரந்தர காமண்டர் பதவி வழங்கவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்தத் தீர்ப்பின் பலனாக ஹெலிகாப்டர் விமானியாக இந்திய ராணுவத்தில் காலடி எடுத்து வைத்த ஷாலிகா தாமி, இன்று இந்திய விமானப் படையின் குரூப் கேப்டனாக பதவி உயர்வு பெற்றுள்ளார்.
யார் இந்த ஷாலிசா தாமி?
பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் பிறந்த ஷாலிசா தாமி, பஞ்சாப் வேளாண் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள அரசுப் பள்ளியில் பள்ளிப் படிப்பையும், லூதியானாவில் உள்ள பெண்களுக்கான கல்சா கல்லூரியில் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன்ஸ் துறையில் இளங்கலை பட்டமும் பெற்றார். அதன் பின்னர் 2003-ஆம் ஆண்டு ஹெலிகாப்டர் பைலட்டாக IAF இல் தனது பயணத்தைத் தொடங்கினார்.
2,800 மணி நேரம் பறந்த அனுபவமும், 15 ஆண்டுகள் பணி அனுபமும் கொண்ட உயர் தகுதி வாய்ந்த ஹெலிகாப்டர் பைலட்டான ஷாலிசா தாமி, இந்தியாவின் மிக முக்கியமான எல்லைப் பிரிவுகளில் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டை மேற்பார்வையிடும் உயர் பதவியில் அமர்ந்துள்ளார்.
பாகிஸ்தான் அருகே அமைந்துள்ள மேற்கத்திய செக்டாரில் உள்ள போர் பிரிவின் தலைமை பொறுப்பை அலங்கரிக்க உள்ளார். சமீபத்தில்தான் 108 பெண் அதிகாரிகளை கர்னல் பதவிக்கு தகுதியானவர்கள் என ராணுவம் அறிவித்திருந்த நிலையில், ஷாலிசா தாமியின் நியமனம் வரலாற்று சிறப்பு மிக்கதாக கருதப்படுகிறது.
ஏனெனில் இந்திய விமானப் படை அக்டோபர் 8, 1932-இல் நிறுவப்பட்டது மற்றும் உலகின் நான்காவது பெரிய விமானப் படையும் ஆகும். இவ்வளவு சிறப்பான வரலாற்றைக் கொண்ட இந்திய விமானப் படையில், முதல் பெண் தளபதியாக தாமி பொறுப்பேற்று புதிய வரலாற்றைத் தொடங்கியுள்ளார்.
"என் நரம்பு முழுவதும் உற்சாகம் பாய்ந்துள்ளது. நான் எவ்வளவு தூரம் வந்திருக்கிறேன், இந்தப் பயணம் என்னை எவ்வளவு தூரம் அழைத்துச் செல்லும் என்று நினைக்கும்போது எனது வைராக்கியம் மேலும் அதிகரிக்கிறது” எனக் கூறியுள்ளார்.
ஏர் கமாண்டர் கமாண்டிங்-இன்-சீஃப் மூலம் இரண்டு முறை பாராட்டப்பட்ட கேப்டன் தாமி, தற்போது ஃப்ரண்ட்லைன் கமாண்ட் தலைமையகத்தின் செயல்பாட்டுக் கிளையில் பணியாற்றி வருகிறார்.