'டோக்கியோ தோல்வியிலிருந்து மீள நீண்ட காலம் பிடித்தது; தற்போது சர்ரியல் ஆக உள்ளது' - ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற மனு பாக்கர்!
டோக்கியோ ஒலிம்பிக் தோல்விக்குப் பிறகு மீண்டெழுந்த மனு பாக்கர், தற்போதைய பாரீஸ் ஒலிம்பிக்கில் பிஸ்டல் ஷூட்டிங்கில் 3வது இடம் பிடித்து வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.
பாரீஸ் ஒலிம்பிக்ஸில் 22 வயதான பேக்கர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் போட்டியில் வெண்கலம் வென்று 10மீ துப்பாக்கிச் சுடுதலில் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றார் மனு பாக்கர்.
டோக்கியோ ஒலிம்பிக் தோல்விக்குப் பிறகு மீண்டெழுந்த மனு பாக்கர், தற்போதைய பாரிஸ் ஒலிம்பிக்கில் 3வது இடத்தில் முடிந்தது பற்றியும், டோக்கியோ ஒலிம்பிக்கில் பிஸ்டல் கோளாறு காரணமாக குவாலிபயரிலேயே அடந்த தோல்வி அவரை துரத்தியது. இது பற்றி பகிர்ந்த மனு,
“டோக்கியோவிற்குப் பிறகு, நான் மிகவும் ஏமாற்றமடைந்தேன். அந்தத் தோல்வியைக் கடந்து வர எனக்கு நீண்ட காலம்பிடித்தது. நான் வெண்கலம் வென்றது மகிழ்ச்சியளிக்கிறது. ஒருவேளை இது அடுத்த முறை மேலும் சிறப்பாக அமையலாம். நான் பெருமையாக நினைக்கிறேன். இந்த பதக்கம் இந்தியாவுக்கு நீண்ட காலமாக நிலுவையில் உள்ள ஒன்று. இது ஆழ் எதார்த்த நிலையை உணர்த்துகிறது," என்றுள்ளார்.
இந்தியா இன்னும் பல பதக்கங்களுக்கு தகுதியானது, இந்த உணர்வு மிகவும் உண்மையானது, இதற்கு நிறைய முயற்சி தேவை. கடைசி ஷாட்டில், என்னிடமுள்ள முழு ஆற்றலுடனும் நான் போராடினேன். நான் அடுத்த தொடரில் இன்னும் சிறப்பாக வருவேன்.
நான் பகவத் கீதையைப் படித்து, 'கடமையைச் செய் பலனை எதிர்பார்க்காதே' என்ற அடிப்படைத் தத்துவத்தில் நான் செய்ய வேண்டியதைச் செய்ய முயற்சித்தேன், மற்ற அனைத்தையும் கடவுளிடம் விட்டுவிட்டேன். நம்மால் விதியை எதிர்த்துப் போராட முடியாது, விளைவையும் நம்மால் கட்டுப்படுத்த முடியாது.
"நான் இந்த வெண்கலம் வென்ற பிறகு எப்படி உணர்கிறேன் என்பதை விளக்க முடியாது. என்னிடம் இருந்த அனைத்து ஆற்றலுடனும் நான் போராடினேன். தகுதிச்சுற்று முடிந்ததும், விஷயங்கள் எப்படி இருக்கும் என்று எனக்குத் தெரியவில்லை. நாங்கள் மிகவும் கடினமாக உழைத்துள்ளோம். எங்களால் முடிந்த அளவு செய்வோம். இந்த உணர்வு நன்மை பயக்கும் உணர்வாகும்,” என்றார்.
யார் இந்த மனு பாக்கர்?
ஹரியாணாவைச் சேர்ந்தவர் மனு பாக்கர். உலக துப்பாக்கிச்சுடுதலில் இவரை வீழ்த்துவது கடினம் என்று பெயர் எடுத்தவர். ஹரியானா மாநிலம் குத்துச் சண்டை வீரர்களையும் மல்யுத்த வீரர்களையும் கொண்டது, அதில் மனு பாக்கர் தனக்கென ஒரு வழியைத் தேர்ந்தெடுத்தார்.
இவர் உண்மையில் பன்முகத்திறன் கொண்ட விளையாட்டு ஆளுமை. டென்னிஸ், ஸ்கேட்டிங் மற்றும் தற்காப்புக் கலையான தாங் டா என பல திறமைகளைப் பெற்றவர். தாங் டாவில் அவர் தேசிய விருதுகளையும் பெற்றுள்ளார். இவருக்கு துப்பாக்கிச் சுடுதல் மீது அலாதி பிரியம் ஏற்பட்டது. தந்தையிடம் பிடிவாதம் பிடித்து துப்பாக்கி ஒன்றை வாங்கினார். தேசிய சாம்பியன்ஷிப்பில் அனுபவம் வாய்ந்த ஒலிம்பிக் வீராங்கனை ஹீனா சித்துவுக்கு எதிரான ஒரு அற்புதமான வெற்றி மனு பாக்கரின் வருகையை அறிவித்தது, இது துப்பாக்கி சுடும் போட்டி உலகில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது.
ஆசிய ஜூனியர் சாம்பியன்ஷிப் வெற்றி முதல் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தோல்வியடைந்தது வரை, பாக்கரின் பயணம் வெற்றிகள், மற்றும் தோல்விகளால் நிரம்பியிருந்தது.
யூத் ஒலிம்பிக்கில் அவரது பொன்னான தருணம்தான், துப்பாக்கி சுடும் வீராங்கனை என்ற அந்தஸ்தை உறுதிப்படுத்தியது. பதினாறாவது வயதில், துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவின் முதல் ஒலிம்பிக் தங்கப் பதக்கம் வென்று தேசிய நட்சத்திரமாக உயர்வடைந்தார்.
அனுபவமிக்க துப்பாக்கி சுடும் வீரர் ஜஸ்பால் ராணாவின் வழிகாட்டுதலால், பாக்கரின் முன்னேற்றம் தொடர்ந்தது. ஒலிம்பிக் தேர்வு சோதனைகளில் இவரது செயல்திறன் இந்திய துப்பாக்கி சுடும் அணியில் அவரது இடத்தை உறுதிப்படுத்தியது, டோக்கியோவில் அவரது ஒலிம்பிக் அறிமுகத்திற்கு களம் அமைத்தது. இன்று ஒலிம்பிக் வெண்கல சிங்கப்பெண் ஆக வலம் வருகிறார் மனுபாக்கர்.