'மிதக்கும் வீடு' - பீகாரில் வெள்ள பாதிப்பை எதிர்கொள்ள இளம் பொறியாளர் எடுத்த புதுமை முயற்சி!
பிரசாந்த் குமாரின் மிதக்கும் வீடு திட்டம், உள்ளூரில் கிடைக்கும் பொருட்கள், உள்ளூர் உத்திகளை கொண்டு, ஏழை மக்களுக்கு காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் திறன் கொண்ட வீடுகளை கட்டித்தருவதாக அமைகிறது.
இயந்திரவியல் பொறியாளரும், கலைஞருமான பிரசாந்த் குமார், எத்தனை சிக்கலான பிரச்சனையாக இருந்தாலும் சரி, அதற்கு பல தீர்வுகளை வைத்திருக்கிறார். குறைந்த தொழில்நுட்பத் தீர்வுகள், குறிப்பாக கழிவுகளை பயன்படுத்தி, ஏழைகளுக்கான வாழ்வாதாரம் தரும் தீர்வுகளை அளிப்பதில் வல்லவராக இருக்கிறார்.
பீகாரைச் சேர்ந்த பிரசாந்த், 2023 செப்டம்பரில், போஜ்பூர் மாவட்டத்தில் கங்கை நதிக்கரையில், பருவ மழை காலங்களில் தண்ணீரில் மிதக்கக் கூடிய, மற்ற காலங்களில் நிலையாக இருக்கும் வீட்டை கட்டியிருக்கிறார்.
இவர் உருவாக்கிய மிதக்கும் வீடு, பருவமழை காலங்களில் ஏற்படும் வெள்ள சேதத்திற்கு தீர்வாக அமைகிறது.
எப்படி துவங்கியது?
2015ல் பிராசாந்த், பூனாவில் நடைபெற்ற ஒரு சைக்கிளிங் நிகழ்வில், கனடா கல்வியாளர் பென் ரீட் ஹாவல்ஸை சந்தித்தார். இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இருவரும், இந்தியாவில் இருந்து ஸ்காட்லாந்திற்கு 22 நாடுகள் வழியே 60 ஆயிரம் கிமீக்கு 36 மாத பயணம் மேற்கொண்டனர்.
அவர்கள் தங்கிய இடங்களில் எல்லாம் உள்ளூர் சமூக குழுவினர்களுக்கு கழிவுகளில் இருந்து பயனுள்ள பொருட்களை பெறும் வழியை கற்றுக்கொடுத்தனர்.
நீடித்த வளர்ச்சி முறை மற்றும் எளிய அம்சங்கள் அடிப்படையில் தனது சமூக மாற்றத்திற்கான வழி அமைவதாக கூறுகிறார். இந்த பயணத்தை முடித்துக்கொண்டு திரும்பிய போது, பிகார் மாநிலத்தில் வெள்ள பாதிப்பில், 1270 கிராமங்கள் மூழ்கி, 130 பேர் பலியான நிலையில் பூனாவிலேயே தங்கியிருக்க வேண்டியிருந்தது.
“பூனாவில் இருந்தபடி, பீகாரில் மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த நண்பர்கள் சொல்வதை கேட்டுக்கொண்டிருந்தேன். மக்கள் பாதிப்பின் நடுவே ஒருவருக்கு ஒருவர் உதவினாலும், இந்த பாதிப்பை எப்படி சரி செய்வது என அறிந்திருக்கவில்லை,” என சோஷியல் ஸ்டோரியிடம் பேசிய பிரசாந்த் கூறுகிறார்.
2020ல் கோவிட் பெருந்தொற்றுக்கு மத்தியில் பிரசாந்த், நாடு திரும்பிய நிலையில், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், உள்ளூர் மக்களுடன் இணைந்து பணியாற்றினார்.
“வெள்ளம் பாதிப்பு என்பது தனியான பிரச்சனை அல்ல: உணவு பாதுகாப்பின்மை, வறுமை, மோசமான விவசாய செயல்முறைகள், சுற்றுச்சூழல் சீரழிவு உள்ளிட்ட பெரிய சுழற்சியின் அங்கம், இவற்றை விரிவாக கவனிக்க வேண்டும்,” என்கிறார்.
பிரசாந்தின் முதல் ஐடியா பாதுகாப்பதை மையமாகக் கொண்டிருந்தது. வெள்ளத்தை தடுக்கும் வகையில், காலநிலை மாற்றத்திற்கு ஈடுகொடுக்கக் கூடிய அல்லது தானாக புத்துயிர பெறக்கூடிய வகையிலான உள்கட்டமைப்பை உருவாக்குவதில் கவனம் செலுத்தியதாக கூறுகிறார்.
14 ஆண்டுகளுக்கு மேலாக கழிவுகளை கொண்டு பயனுள்ள பொருட்களை உருவாக்கும் அப்சைக்ளிங் கலைஞரான இவர், கங்கை நதிக்கரை அருகே அமைந்துள்ள போஜ்பூரின் ஆரா கிராமத்திற்கு குடிபெயர்ந்தார். தன்னுடைய திட்டத்திற்கு நிதி திரட்ட தான் உருவாக்கிய கலை படைப்பை விற்பனை செய்தார்.
“தொழிலாளர்களை, வெல்டர்கள், இயந்திர வல்லுனர்களாக்க பயிற்சி அளித்தோம். வெற்றிபெறுமா அல்லது தோல்வி அடையுமா எனத்தெரியாத ஒரு பரிசோதனை திட்டத்தில் பங்கேற்க தயார் செய்தோம்,” என்கிறார்.
தொழிலாளர்கள் திறனுக்கு ஏற்ப ரூ.10 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை ஊதியம் அளிக்கப்பட்டது. நேபாளம், வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளிலும் இந்த மாதிரி எப்படி செயல்படும் என குழு கவனம் செலுத்தியது. இந்த நாடுகளில் இருந்து பல தொழிலாளர்கள் வந்திருந்தனர்.
ஒரு கட்டத்தில் இந்த திட்டத்திற்கு, நெதர்லாந்தைச் சேர்ந்த, மிதக்கும் கட்டிடங்களில் கவனம் செலுத்தும் கட்டிடக்கலை நிறுவனம் வாட்டர் ஸ்டூடியோவிடம் இருந்து நிதி கிடைத்தது.
ஜெர்மனியின் Meaalofa Foundation அமைப்பும் நிதி அளித்தது. புலம் பெயர்பவர்கள், சமூக நலம் மற்றும் சுற்றுச்சூழல் சார்ந்த திட்டங்களுக்கு ஆதரவு அளிக்கும் அமைப்பு இது.
மிதக்கும் வீடு
பிராசாந்த், ஹாவல்ஸ் தங்கள் பைக் பயணத்தில் உள்ளூர் செயல்முறைகள், அப்சைக்ளிங் உத்திகள் மற்றும் கலைஞரின் பார்வையை கொண்டு, கான்கிரீட் கழிவுகளை கொண்டு புதுமையான மொசைக்கை உருவாக்கினர். குளிர் பகுதிகளில் அகதிகள் முகாம் உள்பகுதிகளை வெப்பமாக வைத்திருக்க இது உதவியது.
இந்த அனுபவத்தை கொண்டு, மிதக்கும் வீட்டிற்கான முன்னோட்ட திட்டத்திற்கு 10 கிமீ சுற்றளவில் இருந்து தேவையான பொருட்கள் அனைத்தையும் தருவித்தார். வீட்டின் அமைப்பு பெரிய உருளைகளை கொண்டிருந்தது. உலோக குழாய்களோடு, சானம், எலுமிச்சை, வெல்லம், அரசி கொண்டு தயார் செய்த செங்கற்களால் உருவாக்கப்பட்டது.
இந்த செங்கற்கள் தண்ணீர் மிதக்கும் லேசான வடிவம் மற்றும் குளிர் காலங்கள் உட்புறத்தை வெப்பமாக வைத்திருக்கும் கனமான வடிவம் என இரண்டு விதங்களில் அமைவதாகக் கூறுகிறார்.
அது மட்டுமல்ல, இந்த திட்டத்திற்காக உள்ளூர் பெரியவர்களிடம், பலரும் 90 வயதுக்கு மேலானவர்களிடம் ஆலோசனை பெற்றார். அவர்களிடம் இருந்து பாரம்பரிய அறிவை பெற்றுக்கொண்டார்.
“ஒவ்வொரு நுட்பமும் பீகாருக்கு உரியதாக இருந்தது. பெரியவர்கள் எங்களுக்கு ஊக்கம் அளிப்பவர்களாக இருந்தனர். அவர்களிடம் இருந்து பாரம்பரிய அறிவை பெற்றுக்கொண்டோம்,” என்கிறார்.
கடந்த ஆண்டு பருவ மழையின்போது இந்தக்குழு முன்னோட்ட வீட்டை முடித்தது. மிதக்கும் வீடு மூன்று அறைகளைக் கொண்டுள்ளது. ஒவ்வொன்றும் 10x12 அடி. மொத்த பரப்பளவு —30x30 அடி. ஒரு சமயலறை மற்றும் உலர் கழிவறை இருக்கிறது. கழிவுகள், தனியே சேகரிப்பட்டு உரமாக்கப்படுகிறது.
இந்த வீட்டில் எட்டு பேர் தங்கலாம். கால்நடைகளையும் வைத்திருக்கலாம். மேலே உள்ள சூரிய மின்சகதி பேனல்கள் மின்சக்தி அளிக்கிறது. 720 வாட் வரை உற்பத்தி திறன் கொண்டது.
இந்த முன்னோட்ட வீடு ரூ.6 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த செலவை மேலும் 2 லட்சம் குறைக்க விரும்புகிறார்.
மாவட்ட கலெக்டர் ஆதரவோடு, இந்த திட்டத்தை இந்தியாவின் மற்ற பகுதிகளில் செயல்படுத்த ஒரு சில சுற்றுச்சூழல் சோதனையை நிறைவேற்ற காத்திருக்கிறார். மேலும், தனது பயிற்சி மையத்தை, செண்டர் ஃபார் ரெஸிலன்ஸ் மையமாக மாற்றியிருக்கிறார்.
குறைந்த வருமானம் ஈட்டும் தொழிலாளர்களை பணிக்கு அமர்த்தி பயிற்சி அளிக்கிறார். நிலத்திற்கு புத்துயிர் அளித்து, சமூக தடைகளை வென்று, நீடித்த வளர்ச்சி தீர்வுகளின் சாத்தியத்தை உணர்த்தும் வகையில் இந்த பயிற்சி அமைகிறது.
“மக்கள் சூரிய மின்சகத்தி, காற்றாலை மின்சாரத்தை பயன்படுத்தவும், அக்வாபோனிக்ஸ் போன்ற நுட்பங்களில் பருவகால காய்கறிகளை பயிரடவும் மக்களுக்கு பயிற்சி அளிப்பது தான் நீண்ட கால இலக்கு எனும் பிரசாந்த் மிதக்கும் வீடு திட்டம் அதன் துவக்கம் என்கிறார்.
ஆங்கிலத்தில்: சரண்யா சக்ரபாணி, தமிழில்: சைபர் சிம்மன்
முட்டை மற்றும் வெல்லம் சேர்த்து சூழலுக்கு உகந்த வீடுக்கட்டி அசத்திய திருப்பூர் இன்ஜீனியர்!
Edited by Induja Raghunathan