’உலகின் சக்திவாய்ந்த 100 பெண்கள்’ பட்டியலை வெளியிட்டது ஃபோர்ப்ஸ்!
நிர்மலா சீதாராமன், கிரண் மசூம்தார் ஷா, ரோஷ்னி நாடார் மல்ஹோத்ரா, ரேணுகா ஜக்தியானி ஆகிய நான்கு இந்தியப் பெண்கள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
’உலகின் சக்திவாய்ந்த 100 பெண்கள்’ பட்டியலை ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ளது. ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்கல் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார். ஐரோப்பிய மத்திய வங்கியின் தலைவர் கிறிஸ்டைன் லெகார்டே இரண்டாவது இடத்திலும் அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் நான்சி பெலோசி மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.
இந்தப் பட்டியலில் நிர்மலா சீதாராமன், கிரண் மசூம்தார் ஷா, ரோஷ்னி நாடார் மல்ஹோத்ரா, ரேணுகா ஜக்தியானி ஆகிய நான்கு இந்தியப் பெண்கள் இடம்பெற்றுள்ளனர்.
இந்தியாவின் முதல் முழுநேர பெண் நிதியமைச்சராக இந்த ஆண்டு மே மாதம் பொறுப்பேற்ற நிர்மலா சீதாராமன் இந்தப் பட்டியலில் 34வது இடத்தில் உள்ளார். இவர் இதற்கு முன்பு இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சராக பதவி வகித்துள்ளார். தேசிய மகளிர் ஆணையத்தில் முன்னாள் உறுப்பினராகவும் இருந்துள்ளார்.
ஹெச்சிஎல் எண்டர்பிரைஸ் சிஇஓ மற்றும் நிர்வாக இயக்குனர் ரோஷ்னி நாடார் மல்ஹோத்ரா இந்தப் பட்டியலில் 54வது இடத்தில் உள்ளார். இவர் ஹெச்சிஎல் நிறுவனர் ஷிவ் நாடாரின் மகள். தொழில்முனைவரான இவர் தனது குடும்பத்தின் லாப நோக்கமற்ற நிறுவனமான ’ஷிவ் நாடார் அறக்கட்டளை’ மூலம் சமூகத் தொண்டு செய்து வருகிறார்.
முதல் தலைமுறை தொழில்முனைவரான கிரண் முசூம்தார் ஷா இந்தப் பட்டியலில் 65வது இடம் பிடித்துள்ளார். இந்தியாவின் முன்னணி பயோடெக்னாலஜி நிறுவனமான Biocon தலைவரான இவர் நாட்டின் மிகவும் வெற்றிகரமான பெண் தொழிலதிபர்களில் ஒருவர். ஃபோர்ப்ஸ் உலகின் சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலில் இதற்கு முன்பும் இருமுறை தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவரது நிகர மதிப்பு 3.1 பில்லியன் டாலர் என ஃபோர்ப்ஸ் தெரிவிக்கிறது.
ரேணுகா ஜக்தியானி ஃபோர்ப்ஸ் பட்டியலில் 96வது இடத்தில் உள்ளார். இவர் லேண்ட்மார்க் குழுமத்தின் தலைவர் மற்றும் சிஇஓ ஆவார். துபாயைச் சேர்ந்த இந்நிறுவனம் ரேணுகாவின் கணவர் மிக்கியால் தொடங்கப்பட்டது. ரேணுகா இருபதாண்டுகளுக்கும் மேலாக இந்நிறுவனத்தின் கார்ப்பரேட் உத்திகள் மற்றும் புதிய சந்தைகளில் விரிவடையும் நடவடிக்கைகளுக்கு தலைமை வகித்து வருகிறார்.
ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த பருவநிலை ஆர்வலர் கிரேட்டா துன்பர்க், நடிகை, திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் தொழில்முனைவர் ரீஸ் விதர்ஸ்பூன், பாடகி ரிஹானா, கொடையாளர் மெலிண்டா கேட்ஸ், டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் ஆகிய பிரபலங்களும் இந்தப் பட்டியலில் இடம்பிடித்துள்ளனர்.
ஆங்கில கட்டுரையாளர்: தன்வி துபே | தமிழில்: ஸ்ரீவித்யா