21 வயதில் ரூ.6300 கோடி சொத்து: ஃபோர்ப்ஸ் பணக்காரர் பட்டியலில் முதலிடம் பிடித்த கெய்லி ஜென்னர்!
ஃபோர்ப்ஸ் வெளியிடும் பிரபலங்கள் பட்டியல் எப்பொழுதுமே பரபரப்பை ஏற்படுத்தும் அதிலும் டாப் கோடிஸ்வரர் பட்டியலை வெளியிட்டால் பேச்சுக்கும் பரபரப்புக்கும் பஞ்சமிருக்காது. ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை கடந்த ஆண்டின் இளம் பணக்காரர் பட்டியலை வெளியிட்டது. அதில் கெய்லி ஜென்னரின் பெயர் முன்னிலையில் வர, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதில் என்ன இருக்கிறது என நீங்கள் கேட்கலாம்? இந்த பரபரப்பிற்கு காரணம் 21 வயதேயான கெய்லி ஜென்னர் 900 பில்லியன் டாலர் சொத்துக்கு சொந்தக்காரர். இந்த இளம் வயதிலே இவ்வளவு சம்பாதித்து இதற்கு முன் சாதனைப் படைத்த ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பர்க்கை பின் தள்ளியுள்ளார்.
மார்க் ஜூக்கர்பர்க் தனது 23 வது வயதில் தான் பில்லியனர் ஆனார். ஆனால் கெய்லி அதை முறியடுத்து 21 வயதில் புதிய சாதனைப்படைத்துள்ளர்.
யார் இந்த கெய்லி ஜென்னர்?
உலகளவில் பிரபலாமான கர்தாஷியன் சகோதரிகளில் ஒருவர் கெய்லி, இவர் தனது சொந்த கெய்லி அழகுப்பொருள் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தொலைக்காட்சியின் ரியாலிட்டி நிகழ்ச்சியின் நட்சத்திரம்.
இவர் தனது கெய்லி காஸ்மடிக்சை 2015ல் தான் துவங்கினார், தன் நிறுவனத்தை அமைத்த 3 வருடங்களிலே கெய்லி பில்லியனராகிவிட்டார். பிபிசியின் தகவல் படி கடந்த ஆண்டு மட்டும் இவர் நிறுவனத்தின் விற்பனை 360 மில்லியன் டாலராகும்.
இது குறித்து ஃபோர்ப்ஸ் பத்திரிக்கைக்கு இவர் அளித்த பேட்டியில்,
“நான் இது போன்ற பலனை எதிர்பார்த்து என் நிறுவனத்தை துவங்கவில்லை. ஆனால் எனக்குக் கிடைத்த அங்கீகாரத்தை நினைத்து மகழ்ச்சி கொள்கிறேன். இது என்னை ஊக்கமடைய செய்கிறது,” என கெய்லி தெரிவித்துள்ளார்.
தற்போது இவருடைய நிறுவனத்தின் சொத்து மதிப்பு 6,323 கோடி ரூபாய், மூன்றே வருடத்தில் இப்படி ஒரு அழகு பொருள் சாம்ராஜ்யத்தை உருவாக்கியது வியப்பாக உள்ளது.
இவரது இந்த சாதனையை பலர் பாராட்டினாலும், பலர் சமூக வலைதளத்தில் கெய்லியை விமர்சித்து வருகின்றனர். ஃபோர்பஸ் பத்திரிக்கை இவரை ’self-made’ பில்லியனர் என குறிப்பிட்டிருந்தது அதாவது தன் முயற்சியினாலுயர்ந்தவர் என்றது. இதை கண்டித்து பலர் பல பதிவுகளை பகிர்ந்துள்ளனர்.
அதாவது, கர்தாஷியன் வம்சத்தை சேர்ந்த கெய்லி, 13 வயது முதலே தனது சகோதரியின் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்று வந்தார். மேலும் மாடலிங் செய்துள்ளர். இவர் குடும்பத்தின் பெயரும் சகோதரிகளின் பிரபலமுமே இவர் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு முக்கியக் காரணம் என கூறியுள்ளனர். மேலும் மார்க் ஜூக்கர்பக் தான் உண்மையான ’self-made’ பில்லியனர் என்று கெய்லியை இவருடன் ஒப்பிடக்கூடாது என தெரிவத்துள்ளனர்.
இந்த விமர்சனங்கள் சரியா?
கெய்லி தான் மாடலிங் துறைக்கு வரும்பொழுதே தன் உடல் அழகு மீதும் முக அழகு மீதும் நம்பிக்கை இல்லாமல் தனம்பிக்கை இழந்தே இருந்தார்.
கர்தாஷியன் குடும்பத்தைச் சேர்ந்ததால் பலரும் அவரை கவனிக்க, ’Life of Kylie’ என்னும் ரியாலிட்டி நிகழ்ச்சியை தொலைக்காட்சியில் வெளியிட்டார். அதில் தனது உதடு அழகாக இல்லை என, தான் அதிகம் வருந்தியதாகவும் அதை சரி செய்ய முயற்சி செய்தபோது பிறந்ததே இந்த கெய்லி காஸ்மடிக்ஸ் என தெரிவித்தார். முதலில் 29 டாலர் மதிப்பிலான லிப் கிட்டையே தயாரித்தார் இவர்.
பின்னர் வெளி நிறுவனத்தில் 250,000 டாலர் கொடுத்து தனது விற்பனைக்கான முதல் லிப் கிட்டை தயாரித்தார். அதை தன் சமூக வலைதளம் மூலம் மார்க்கெடிங் செய்து விற்பனை செய்தார். இதுவரை வேறு எந்த வித மார்க்கெடிங் யுத்தியையும் பயன்படுத்தாமல் முழுக்க முழுக்க தன் சமூக வலைதளத்தில் மட்டுமே விளம்பரம் செய்கிறார். இவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை 17.5 கோடி மக்கள் பின் தொடர்கின்றனர்.
தனது நிறுவனத்தை சந்தை படுத்துவதிலிருந்து, அழகுப் பொருட்களுக்கு தேவையான நிறங்களை தேர்ந்தெடுப்பது வரை அனைத்துமே தனியாளாக பார்த்து கொள்கிறார் இவர்.