2 பில்லியன் டாலர் நஷ்டம்: சென்னை உட்பட இந்திய ஆலைகளை மூட ஃபோர்ட் முடிவு!
அமெரிக்க கார் தயாரிப்பு நிறுவனமான ஃபோர்ட், அதிகரிக்கும் நஷ்டம் காரணமாக, இந்தியாவில் கார் உற்பத்தியை நிறுத்துக்கொள்ள இருப்பதாக அறிவித்துள்ளது.
இந்தியாவில் கார் தயாரிப்பை துவக்கிய ஆரம்ப கால வெளிநாட்டு நிறுவனங்களில் ஒன்றான அமெரிக்காவின் ஃபோர்டு நிறுவனம், அதிகரிக்கும் நஷ்டம் காரணமாக, இந்தியாவில் செயல்பாடுகளை குறைத்துக்கொள்ள இருப்பதாகவும், சென்னை உள்ளிட்ட இந்திய ஆலைகளில் கார் உற்பத்தியை நிறுத்துக்கொள்ள இருப்பதாகவும் அறிவித்துள்ளது.
ஃபோர்டு நிறுவனத்தின் இந்த முடிவு 4,000 ஊழியர்களை நேரடியாகவும், விநியோக அமைப்பில் உள்ள 40,000 ஊழியர்களை மறைமுகமாகவும் பாதிக்கும் எனக் கருதப்படுகிறது.
அமெரிக்காவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஃபோர்டு மோட்டார்ஸ் நிறுவனம், 1990 களில் இந்தியாவில் தனது செயல்பாட்டைத் துவங்கியது. சென்னை மறைமலைநகர் மற்றும் குஜராத்தின் சனாந்த் ஆகிய இடங்களில் கார் உற்பத்தி ஆலையை நிறுவனம் அமைத்தது.
1990-களில் மேற்கொள்ளப்பட்ட பொருளாதார சீர்திருத்தங்களுக்கு பின், இந்தியாவில் நுழைந்த வெளிநாட்டு கார் நிறுவனங்களில் ஒன்றாக ஃபோர்டு நிறுவனம் அமைந்தது.
சென்னையின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாகவும் ஃபோர்டு ஆலை மாறியது. பியாஸ்டா, ஐகான், ஃபிகோ, அஸ்பயர், ஈக்கோஸ்போர்ட், ஃப்ரீஸ்டைல் மற்றும் எண்டேவர் உள்ளிட்ட பல்வேறு கார்களையும் ஃபோர்டு இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது.
இந்நிலையில், இந்தியாவில் கார் உற்பத்தியை நிறுத்திக்கொள்ள இருப்பதாக நிறுவனம் அறிவித்துள்ளது. கார்களுக்கான ஆதரவு குறைவு மற்றும் அதிகரிக்கும் நஷ்டம் காரணமாக இந்திய செயல்பாடுகளை சீரமைக்க இருப்பதாக நிறுவனம் அறிவித்துள்ளது.
கடந்த பத்தாண்டுகளில் 2 பில்லியன் டாலருக்கு மேல் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக, உற்பத்தியை நிறுத்திக்கொள்ள இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. 2022ல் முழுவதும் உற்பத்தி நிறுத்தப்பட உள்ளது.
குஜராத் மாநிலம் சனந்த் பகுதியில் உள்ள தொழிற்சாலையில் ஃபோர்டு இந்தியா நிறுவனம் நடப்பு 2021ம் ஆண்டின் நான்காவது காலாண்டில் உற்பத்தியை நிறுத்தவுள்ளது. அதே நேரத்தில் தமிழக தலைநகர் சென்னைக்கு அருகே உள்ள தொழிற்சாலையில் வரும் 2022ம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் உற்பத்தி நிறுத்தம் செய்யப்படவுள்ளது.
நிறுவனத்தின் இந்த முடிவு ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஃபோர்டு நிறுவனத்தின் இந்த முடிவு 4,000 ஊழியர்களை நேரடியாகவும், விநியோக அமைப்பில் உள்ள 40,000 ஊழியர்களை மறைமுகமாகவும் பாதிக்கும் என கருதப்படுகிறது.
இந்தியாவில் உற்பத்தியை நிறுத்தி விட்டாலும், விலை உயர்ந்த மற்றும் மஸ்டங் போன்ற தயாரிப்புகளை மட்டும் விற்பனை செய்வதற்கு ஃபோர்டு திட்டமிட்டுள்ளது. இந்த தயாரிப்புகள் முழுவதும் கட்டமைக்கப்பட்டு, இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே உள்ள கார் வாடிக்கையாளர்களுக்கு சேவை மற்றும் உதிரிபாகங்கள் விற்பனை தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் இருந்து வெளியேறும் முடிவால் ஏற்படும் பாதிப்பை குறைக்க ஊழியர்கள், தொழிற்சங்கங்கள், டீலர்களுடன் நெருக்கமாக செயல்பட்டு வருவதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே அமெரிக்காவில் ஜெனரல் மோட்டார்ஸ் மற்றும் ஹார்லி டேவிட்சன் ஆகிய நிறுவனங்கள் இந்தியாவில் இருந்து வெளியேறியுள்ளன.