நாடு முழுவதும் 10,000க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மூடல்: மத்திய அரசின் அதிர்ச்சி டேட்டா!
தமிழகத்தில் மட்டும் 1,322 நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.
நாடு முழுவதும் 10,000க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா பெருந்தொற்று மற்றும் ஊரடங்கு நடவடிக்கைகளால் பொருளாதாரம் மந்த நிலைக்குச் சென்றது. பொருளாதார நெருக்கடியை நிறுவனங்களால் சமாளிக்க முடியவில்லை. அந்த வகையில்,
கடந்த ஏப்ரல் 2020 முதல் இந்த ஆண்டு பிப்ரவரி வரை நாடுமுழுவதும் 10,000 க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. பொருளாதாரம் கணிசமாக சரிந்ததன் விளைவாக இப்படியொரு முடிவை நிறுவனங்கள் எடுக்கவேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளன.
மத்திய கார்ப்பரேட் விவகாரங்கள் அமைச்சகத்தின் (எம்.சி.ஏ) தகவலின் படி, நடப்பு நிதியாண்டில் பிப்ரவரி வரை நிறுவனங்கள் சட்டம் 2013ன் பிரிவு 248 (2) இன் கீழ் மொத்தம் 10,113 நிறுவனங்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிவு 248 (2)ன் படி நிறுவனங்கள் தங்கள் வணிக நிறுவனங்களை தானாக முன்வந்து நிறுத்தியுள்ளன.
எந்தவொரு தண்டனை நடவடிக்கையினாலும் அல்ல என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அமைச்சகமானது, ஆவணங்கள் மற்றும் விண்ணப்பங்களின் அடிப்படையில் நிறுவனங்களின் பதிவேட்டை பராமரிக்கிறது.
திங்களன்று மக்களவையில் கார்ப்பரேட் விவகாரத்துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், வணிகத்திலிருந்து வெளியேறிய நிறுவனங்கள் குறித்த தகவல்கள் எதுவும் தங்களிடம் இல்லை என்று கூறினார்.
“2020-21ஆம் ஆண்டில் (ஏப்ரல் 2020 முதல் பிப்ரவரி 2021 வரை) மொத்தம் 10,113 நிறுவனங்கள் சட்டத்தின் 248 (2) பிரிவின் கீழ் நிறுத்தப்பட்டுள்ளன. அமைச்சகத்தின் தரவுகளின்படி, டெல்லியில் மொத்தம் 2,394 நிறுவனங்கள் நிறுத்தப்பட்டன. அதே நேரத்தில் உத்தரப்பிரதேசத்தில் 1,936 நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.”
ஏப்ரல் 2020 முதல் பிப்ரவரி 2021 வரையிலான காலகட்டத்தில் முறையே தமிழகத்தில் 1,322 நிறுவனங்களும், மகாராஷ்டிராவில் 1,279 நிறுவனங்களும் மூடபட்டுள்ளன. கர்நாடகாவில் 836 நிறுவனங்கள் தானாக முன்வந்து மூடப்பட்டன. அதே நேரத்தில் சண்டிகர், ராஜஸ்தான் (479), தெலுங்கானா (404), கேரளா (307), ஜார்க்கண்ட் (137), மத்தியப் பிரதேசம் (111) மற்றும் பீகார் (104) ஆகிய இடங்களில் 501 நிறுவனங்கள் நிறுத்தப்பட்டன.
மற்ற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள எண்ணிக்கையின் படி, மேகாலயா (88), ஒரிசா (78), சத்தீஸ்கர் (47), கோவா (36), பாண்டிச்சேரி (31), குஜராத் (17), மேற்கு வங்கம் (4) மற்றும் அந்தமான் & நிக்கோபார் (2) )-ல் மேற்கண்ட எண்ணிக்கையிலான நிறுவனங்கள் மூடபட்டுள்ளன என்றும் அமைச்சகம் வெளியிட்ட தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2020-21 ஆம் ஆண்டில் வணிகத்திலிருந்து வெளியேறிய பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களின் எண்ணிக்கையைப் பற்றிய மாநில வாரியான விவரங்களைத் குறித்து ஒரு உறுப்பினர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் தரவு வழங்கப்பட்டது.
தொகுப்பு: மலையரசு