Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Youtstory

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

YSTV

ADVERTISEMENT
Advertise with us

26 மருத்துவர்கள்; 149 பொறியாளர்கள்: ஏழை மாணவர்களின் வாழ்வில் 'ஆனந்தம்' ஏற்படுத்தும் செல்வகுமார்!

பள்ளியில் அதிக மதிப்பெண்கள் பெற்றும் உயர்கல்வி பயில வழியில்லாமல் தவிக்கும் நூற்றுக்கணக்கான மாணவர்களுக்கு உயர்கல்வி மட்டுமின்றி, வேலை தேடி, முதல் மாத ஊதியம் பெறும்வரை அனைத்தையும் ஆனந்தம் இளைஞர் நல அமைப்பின் மூலம் செய்கிறார் செல்வக்குமார்.

26 மருத்துவர்கள்; 149 பொறியாளர்கள்: ஏழை மாணவர்களின் வாழ்வில் 'ஆனந்தம்' ஏற்படுத்தும் செல்வகுமார்!

Wednesday December 30, 2020 , 4 min Read

அன்பு என்ற அச்சாணியில்தான் உலகமே சுழன்று வருகிறது. மனித நேயத்துடன், சகோதர மனப்பான்மையுடன் நாம் அன்பு பாராட்டினால் நாமும் உயர்ந்து, மற்றவரையும் உயர்த்தலாம் என்பதற்கு ஓர் நிகழ்கால உதாரணமாய் வாழ்ந்து வருகிறார் ஆனந்தம் செல்வக்குமார்.


பள்ளிக்கல்வியில் அதிகபட்ச மதிப்பெண்கள் பெற்றும் உயர்கல்வி பயில வழியில்லாமல் தவிக்கும் நூற்றுக்கணக்கான மாணவ, மாணவியருக்கு ஓர் உடன்பிறவாத சகோதரனாய் நின்று அவர்களின் உயர்கல்வி மட்டுமின்றி, வேலை தேடி, முதல் மாத ஊதியம் பெறும்வரை உணவு, உடை, பாராமரிப்பு என அனைத்தையும் தனது ஆனந்தம் இளைஞர் நல அமைப்பின் மூலம் செய்து வருகிறார் செல்வக்குமார்.


நாகப்பட்டிணம் அருகே செட்டிசேரி என்ற குக்கிராமத்தில் பிறந்து அரசுப் பள்ளியில் படித்து, உயர்கல்விக்கு தினசரி போக, வர 24 கிலோமீட்டர் சைக்கிள் மிதித்து, டிப்ளமோ முடித்து, சென்னை வந்து அங்கும் தன்னை நிலைநிறுத்திக் கொள்ளப் போராடிய ஓர் சராசரி கிராமத்து இளைஞன்தான் இன்று நூற்றுக்கணக்கான இளைஞர்களுக்கு வழிகாட்டியாக, ரோல்மாடலாக இருக்கிறார்.

செல்வகுமார்

ஆனந்தம் அமைப்பின் நிறுவனர் செல்வகுமார்

தனது வாழ்க்கைப் பயணம் குறித்து ஆனந்தம் இளைஞர் நல அமைப்பின் நிறுவனர் செல்வக்குமார் கூறியதாவது, சராசரி கிராமத்து மாணவனாக கல்வி பயின்று, வேலை தேடி சென்னை வந்தேன். இங்கு வேலைக்காகப் போராடி, ஓர் கணினி நிறுவனத்தில் UPS சர்வீஸ் செய்யும் வேலை கிடைத்தது. எங்கள் நிறுவனம் தமிழகம் முழுவதும் பல்வேறு வங்கிகளில் சேவையளித்து வந்ததால், நானும் வேலை நிமித்தமாக தமிழகம் முழுவதும் பயணிக்க நேரிடும்.

”அப்போது கிடைக்கும் வருவாயில் பயணச் செலவுக்கும், உணவுக்கும் சரியாக இருக்கும். அதனால் அறை எடுத்து தங்க காசில்லாமல் பேருந்து நிலையங்களிலேயே பெரும்பாலான இரவுகளை கழித்திருக்கிறேன்,” என்றார்.


அப்போதுதான் என்னைச் சுற்றியுள்ள சமூகத்தை கவனித்தேன். எவ்வளவோ பேர் பேருந்து நிலையத்தில் குடும்பத்துடன் தங்கியிருப்பதை பார்த்தேன். அவர்கள் கொசுக்கடியிலும், மழை நேரத்திலும் படும் அவஸ்தைகளைக் கண்டிருக்கிறேன். இந்த காட்சிகள்தான் சமுதாயத்தின் அடித்தட்டில் இருக்கும் மக்களை மேம்படுத்த நாம் எதாவது செய்யவேண்டும் என என்னைத் தூண்டியது என்கிறார்.


இதையடுத்து 2001ஆம் ஆண்டு முதல் 2011ஆம் ஆண்டுவரை, இவர் தனது நண்பர்கள் 5 பேருடன் இணைந்து, இளைஞர் விழிப்புணர்வு இயக்கம் தொடங்கி பல்வேறு பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களின் கல்வி மற்றும் வாழ்க்கை முன்னேற்றத்துக்காக பல கருத்தரங்குகளை ஏற்பாடு செய்து மாணவர்களின் கல்வி மற்றும் வாழ்க்கை மேம்பாட்டுக்காக கடுமையாக பாடுபட்டுள்ளார்.


ஆனால் அது எந்த வகையிலும் மாணவர்களுக்குப் பயன்படவில்லையாம். இதனால் மாணவர்கள் யாரேனும் வாழ்க்கையில் முன்னேறினார்களா என்றாலும் இல்லையாம். அப்போதுதான் செல்வக்குமார் தான் சரியான பாதையில் பயணிக்கவில்லை என்பதை உணர்ந்துள்ளார்.

ஆனந்தம்2

உயர்கல்விக்குத் தேர்வாகியுள்ள ஏழை மாணவர் தனது தாயுடன், தனது குடிசை வீட்டின் முன்.

சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த, அன்பை விதைக்க, மனிதநேயத்தை பெருக்க சரியான கல்வி முறை இல்லை. இதனை மாற்ற, உருவானதுதான் ‘ஆனந்தம் இளைஞர் நல அமைப்பு’ என்கிறார் செல்வக்குமார். இதுகுறித்து அவர் கூறும்போது,

“2012ஆம் ஆண்டு ஆனந்தத்தைத் தொடங்கினேன். ஓவ்வொரு ஆண்டும் பிளஸ் 2-க்கு பிறகு உயர்கல்வி பயில வழியின்றி சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர் என்பதை அறிந்தேன். இதுதான் நான் இயங்க வேண்டிய களம் என்பதை உணர்ந்தேன்.”

முதல்கட்டமாக தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் பகுதிகளைச் சேர்ந்த அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் கடிதம் அனுப்பி, பிளஸ் 2-வில் நல்ல மதிப்பெண் பெற்றிருந்தும், உயர்கல்வி பயில வழியின்றி தவிக்கும் மாணவர்களின் விவரங்களை சேகரித்து, ஓவ்வொரு பள்ளியில் இருந்தும் 2 மாணவர்களைத் தேர்ந்தெடுத்தோம்.

மொத்தம் 30 மாணவர்களை 2012ஆம் வருடம் தேர்ந்தெடுத்து, அவர்களின் அனைத்து செலவுகளையும் ஏற்றுக் கொண்டோம். தற்போது தமிழகம் முழுவதும் ஓர் பள்ளிக்கு 2 மாணவர் என்கிற ரீதியில் மாணவர்களைத் தேர்வு செய்கிறோம் என்கிறார்.
ஆனந்தம்3

மகிழ்ச்சியில் துள்ளிக் குதிக்கும் ஆனந்தம் மாணவர்கள்.

நிகழாண்டு மட்டும் சுமார் 2000-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்களைப் பெற்றுள்ள ஆனந்தம் இளைஞர் நல அமைப்பினர், மாணவர்களைத் தேர்வு செய்ய பல்வேறு நடைமுறைகளை பின்பற்றுகின்றனர்.


பெற்றோர்கள் இல்லாதவர்கள், பெற்றோரில் ஓருவர் மட்டும் இல்லாதவர்கள், உடல் ஊனமுற்றவர்களின் குழந்தைகள், கணவரால் கைவிடப்பட்டவர்களின் குழந்தைகள் மற்றும் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய, குடும்பத்தில் ஓர் வருமானம் மட்டுமேயுள்ள, முதல் பட்டதாரியான மாணவர் என பல்வேறு நிபந்தனைகளை கடைபிடிக்கின்றனர்.


மேலும், தொலைபேசி வாயிலாக நேர்காணல் செய்தும், நேரில் கிராமத்துக்கே சென்றும், கிராம மக்களிடம் விசாரணை செய்தும், மாணவர்களின் வீடுகளைப் பார்வையிட்டும், இறுதியாக சென்னைக்கு வரவழைத்தும் நேர்காணல் நடத்தி மாணவர்களைத் தேர்வு செய்கின்றனர்.

இதில் சிறப்பு என்னவென்றால், மாணவர்கள் நேர்காணலுக்காக சென்னை வரும் செலவில் தொடங்கி, அவர்களின் கல்வி, ஹாஸ்டல், புத்தகம் என அனைத்து செலவுகளையும் ஏற்றுக் கொள்ளும் ஆனந்தம், மாணவர் தேர்ச்சி பெற்று, பணியில் சேர்ந்து முதல் மாத ஊதியம் பெறும்வரை தொடர்ந்து பராமரிக்கிறது.
ஆனந்தம்

ஆனந்தம் அமைப்பின் நோக்கம் குறித்து செல்வக்குமார் கூறியதாவது, மிகவும் எழ்மை நிலையில் உள்ள மாணவர்களை உயர்கல்வி பயில வைத்து அவர்களை பட்டதாரிகள் ஆக்குவது மட்டுமல்ல எங்கள் நோக்கம். அவர்களுக்கு வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும் என்பதை கற்றுக் கொடுக்கிறோம். அதற்காகத்தான் நாங்கள் பாடுபடுகிறோம்.

அன்பு நிறைந்த, மனிதாபிமானம் மற்றும் சமூக அக்கறையுள்ள ஓர் சமூகத்தை ஏற்படுத்துவதே எங்கள் அமைப்பின் நோக்கம். இதற்கான பாடத்திட்டத்தைத்தான் நாங்கள் உருவாக்கி செயல்படுத்தி வருகிறோம். இதுவரை நாங்கள் மொத்தம் 488 மாணவர்களைக் கடந்த 8 ஆண்டுகளில் தேர்வு செய்து, உயர்கல்வி அளித்து, சமூகத்தில் தலைசிறந்த மனிதர்களாக உருவாக்கியுள்ளோம் என்பதை மிகுந்த பெருமையுடன் கூறிக் கொள்கிறேன்.

இதில், 26 பேர் மருத்துவர்கள், 149 பேர் பொறியாளர்கள் மற்றும் வேளாண்மைத் துறை, நர்சிங், டிப்ளமோ என பல்வேறு துறைகளில் எங்கள் ஆனந்தம் மாணவர்கள் ஜொலித்து வருகின்றனர்.


மாணவர்களின் கல்வி மட்டுமன்றி அவர்களின் ஆளுமைத் திறனை மேம்படுத்தவும் ஆனந்தம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இம்மாணவர்கள் அனைவருக்கும் பிரச்னைகளை எதிர்கொள்ளும் தன்மை, விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை போன்ற வாழ்வியல் திறன்களை மேம்படுத்த ஆண்டுதோறும் சென்னையில் 4 நாள்களுக்கு பயிலரங்கம் நடத்துகிறார்கள்.

Anandham selvakumar

ஆனந்தம் அமைப்பின் நிறுவனர் செல்வகுமார்

மேலும், இதுதவிர அருகில் உள்ள மாணவர்களின் கிராமங்களுக்கும் சென்று இதுபோன்று பயிற்சிப் பட்டறைகளை நடத்தி வருகின்றனர். இதனால் ஆனந்தம் மாணவர்கள் ஓருவரையொருவர் அன்போடு அண்ணா, அக்கா, தம்பி என்றே அழைத்து அனைவரும் ஓர் குடும்பமாய், அனைவரின் இன்ப, துன்பங்களிலும் பங்கேற்று உலகமே ஓர் குடும்பம் என்பதுபோல வாழ்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


2012ஆம் ஆண்டு ஆனந்தம் அமைப்பால் தேர்வாகி தற்போது நாடு முழுவதும் பல்வேறு முன்னணி நிறுவனங்களில் பணியாற்றி வரும் முதல் குழுவினர் மற்றும் 2013ஆம் ஆண்டின் 2ஆம் குழுவினர் போன்றோர் தற்போது அவர்களே ஆனந்தம் அமைப்பில் களப் பணியில் ஈடுபடுகின்றனர்.


தற்போது அவர்கள்தான் மாணவர்களைத் தேர்வு செய்வது, அவர்களுக்குத் தேவையான பயிற்சி அளிப்பது, மாணவர்களைத் தத்தெடுத்து படிக்க வைப்பது என ஆனந்தம் விழுதுகள் என்ற பெயரில் தற்போது இயங்கத் தொடங்கியுள்ளனர்.

நாங்கள் உருவாக்கிய மாணவர்கள் இன்று சமுதாயப் பணியில் ஈடுபட்டு வருவது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இவர்களைத் தவிர பல்வேறு நபர்கள் மாணவர்களின் கல்வி உள்ளிட்ட அனைத்து செலவுகளையும் ஏற்றுக் கொண்டு, மாணவர்களின் வாழ்க்கை மேம்பாட்டுக்காக தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருவதே ஆனந்ததின் முழுவெற்றிக்குக் காரணம் என்கிறார் செல்வக்குமார்.
யோகா
ஆனந்தம் பல்கலைக்கழகம் என்ற பெயரில் ஓர் அன்பு சார்ந்த சமுதாய நலன் மிக்க கல்வி நிறுவனத்தை உருவாக்கி, மாணவர்களை அறிவுப்பூர்வமாக மட்டுமன்றி சக மனிதர்களை நேசித்து, அன்பு காட்டும், மனிதாபிமானமிக்க ஓர் சமுதாயத்தை உருவாக்கவேண்டும். நாட்டின் ஓட்டுமொத்த மாற்றத்துக்கான காரணமாக ஆனந்தம் பல்கலைக்கழகம் இருக்கவேண்டும் என்பதே எனது எதிர்கால லட்சியம் என்கிறார் ஆனந்தம் செல்வக்குமார்.

இளைஞர்களுக்கு கல்வியை மட்டும் கற்றுக் கொடுக்காமல் வாழ்க்கையைக் கற்றுக் கொடுக்கும் ஆனந்தத்தின் வெற்றிப் பயணம் தொடர நம் அனைவரின் மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவிப்போம்.


ஆனந்தம் குடும்பத்தில் இணைய விரும்புவோரும், ஆனந்தம் குடும்பத்துக்கு உதவ விரும்புவோரும் தொடர்பு கொள்ள: Selvakumar.S | Founder & Chairman

ANANDHAM YOUTH FOUNDATION, Mobile      : 9551939551, Website: www.anandham.org

FaceBook: Anandham youth foundation