மாற்றுத்திறனாளிகளுக்கு ‘இலவச ஹேர்கட்’ - வேலூர் ராஜா செய்யும் உன்னத சேவை!
வேலூரில் மாற்றுத்திறனாளிகளுக்கு ராஜா என்பவர் தனது சலூன் கடை மூலமாக இலவச ஹேர் கட் செய்து வருகிறார்.
வேலூரில் மாற்றுத்திறனாளிகளுக்கு ராஜா என்பவர் தனது சலூன் கடை மூலமாக இலவச ஹேர் கட் செய்து வருகிறார்.
மாற்றுத்திறனாளிகளுக்கு உணவு, உடை, சக்கர நாற்காலிகள், வாழ்வாதரத்திற்காக பெட்டி கடைகள் போன்றவற்றை இலவசமாக அமைத்துக் கொடுக்க பல்வேறு தொண்டு நிறுவனங்கள், தன்னார்வ அமைப்புகள் உள்ளன.
ஆனால், மாற்றுத்திறனாளிகளையும் சக மனிதர்களைப் போல் தன்னம்பிக்கையுடன் திகழ வைக்கும் வித்தியாசமான சேவையை செய்து வருகிறார் வேலூர் ராஜா என்ற சலூன் கடைக்காரர்.
மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை:
வேலூரில் உள்ள பெரிய அல்லாபுரம் என்ற சிறிய நகரத்தில் 'ஜெயம் சலூன்' என்ற கடை முன்பு காலையிலேயே மாற்றுத்திறனாளிகள் காத்திருக்க ஆரம்பிக்கின்றனர். அந்த கடையின் ஓனர் ராஜா அனைவரையும் புன்னகையுடன் எதிர்கொள்கிறார். அவர்களது சக்கர நாற்காலியை கடைக்குள் கொண்டு வர உதவுகிறார். ஒவ்வொரிடமும் புன்னகை மாறா முகத்துடன், 'உங்களுக்கு எப்படிப்பட்ட ஹேர்கட் வேண்டும்?' எனக்கேட்டு, அவர்கள் சொல்லும் ஸ்டைலின் பொறுமையாக வெட்டிவிடுகிறார்.
சலூன் கடைக்காருக்கு வேலையே சிகை அலங்காரம் செய்வது தானே, இதில் என்ன பிரமாதம் என நீங்கள் நினைக்கலாம். ஆனால், ராஜா இதனை பணத்திற்காக செய்யவில்லை. மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச சேவையாக செய்து வருகிறார்.
நன்றிக்கடன்:
ராஜா 1996ம் ஆண்டு முதல் சிகை அலங்கார கலைஞராக செயல்பட்டு வருகிறார். அவர் 12ம் வகுப்பு முடித்த கையோடு, தந்தையைப் போலவே சலூன் கடையை நடத்த முடிவெடுத்தார். ஆனால், அவரது தந்தைக்கு இது பிடிக்காததால், அவருக்கு தொழில் கற்றுத்தர மறுத்துவிட்டார்.
ஆனால், நிச்சயம் சிகையலங்கார நிபுணராக வேண்டும் என்று தீர்மானித்த அவர், பெங்களூருக்கு சென்று, அங்கு ஆறு மாதங்கள் சலூனில் பணிபுரிந்தார். பின்னர், சென்னை தாம்பரத்தில் உள்ள மற்றொரு சலூனில் வேலைக்குச் சேர்ந்தார். அப்போது தான் அவருக்கு சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அழகு நிலையமான ரமேஷ் ஜென்ட்ஸ் சிகையலங்கார நிபுணர் பற்றி தெரியவந்தது. இந்த சிகை அலங்கார நிலையம் அஜித்குமார் உள்ளிட்ட பல திரைப்பிரபலங்களின் விருப்பமானதாக உள்ளது.
பல கட்ட முயற்சிகள் மற்றும் கடிதங்களுக்குப் பிறகு ரமேஷிடம் உதவியாளராக சேரும் வாய்ப்பு, ராஜாவிற்கு கிடைத்தது. அத்துடன் நின்று விடாமல், தொண்டு இல்லங்கள் மற்றும் அனாதை இல்லங்களில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு முடி வெட்டுவதன் மூலம் தனது திறமைகளை மெருகூட்டினார்.
“நான் 2000ம் ஆண்டின் முற்பகுதியில் ஒரு சிகையலங்கார நிபுணராக வாழ்க்கையைத் தொடங்கினேன் மற்றும் மாற்றுத்திறனாளி நபர்களுக்கு முடிவெட்டுவதன் மூலமாக எனது பயிற்சியைப் பெற்றேன். இப்போது, அவர்களுக்கு இலவச ஹேர்கட் வழங்குவதன் மூலம் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்,” என்கிறார்.
சென்னையில் முதல் சலூன்:
சென்னை அசோக் நகரில் தனது சொந்த சலூனைத் திறந்தார். அங்கு மாற்றுத் திறனாளிகளுக்கு இலவசமாக சேவை வழங்கி வந்தவர், தற்போது சலூனை வேலூருக்கு மாற்றிய பிறகும் சேவை மனப்பான்மையை மட்டும் மாற்றிக்கொள்ளவில்லை.
இப்போது, சுமார் 100 உடல் ஊனமுற்ற நபர்கள் ஒவ்வொரு மாதமும் அவரது சேவையால் பயனடைகிறார்கள். ராஜா தனது சேவைக்காக இந்த ஆண்டு சுதந்திர தினத்தன்று மாவட்ட ஆட்சியரிடம் பாராட்டு சான்றிதழைப் பெற்றுள்ளார்.
“5 கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள மாற்றுத்திறனாளிகள் இலவச சேவைக்காக கடைக்கு வருகிறார்கள். சில சமயம், ஊனமுற்ற வாடிக்கையாளர்கள் யூரோ-பேக்குடன் சலூனுக்கு வருவதால், நாற்காலியில் ஏறுவதற்கும் உட்காருவதற்கும் மிகவும் சிரமப்படுகிறார்கள். அப்படிப்பட்ட சமயங்களில் சக்கர நாற்காலிகளுடன் சலூனுக்குள் நுழையுமாறு கேட்டுக் கொள்கிறேன். மனநலப் பிரச்சனைகள் உள்ள குழந்தைகள் முடி வெட்டும் போது, அவர்களை ஒரே இடத்தில் அமர வைப்பது சவாலானது. இருப்பினும், எனது ஊழியர்கள் மற்றும் எனது மகளின் உதவியுடன் இதுபோன்ற சூழ்நிலைகளை என்னால் கையாள முடிகிறது.”
கடைசி ஞாயிற்றுக்கிழமை:
ராஜாவின் சலூன் ஞாயிற்றுக்கிழமைகள் உட்பட வாரம் முழுவதும் இயங்குகிறது, மேலும், அவர் எப்போதும் ஊனமுற்ற வாடிக்கையாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கிறார். இருப்பினும், கடைகளில் வேறு வாடிக்கையாளர்கள் இருந்தால், மாற்றுத்திறனாளிகள் சத்தமின்றி கடையை கடந்து சென்றுவிடுவது உண்டு.
இதனை பலமுறை கவனித்த ராஜா, மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டுமே இலவசமாக முடிவெட்டுவது எனத் தீர்மானித்துள்ளார். அவர் அதை ‘சேவை நாள்’ என்று அழைக்கிறார். ராஜாவால் பயன்பெறும் மாற்றுத்திறனாளி ஒருவர் கூறுகையில்,
“எங்களில் பலருக்கும் முடி திருத்துவதற்கு பணம் கொடுப்பது என்பது பெரிய காரியமல்ல. ஆனால் இங்குள்ள கடைகளில் சக்கர நாற்காலியில் செல்லும் எங்களை உள்ளே அழைத்துச் செல்லவே சிரமப்படுகிறார்கள். இதன் காரணமாக, சலூன்கள் போன்ற இடங்களுக்குச் செல்வதைத் தவிர்க்கிறோம். ராஜா எங்களுக்கு இலவச ஹேர்கட் வழங்குவதோடு மட்டுமல்லாமல், நாங்கள் உள்ளே வரும் ஒவ்வொரு முறையும் உதவிக்கரம் நீட்டுவதற்கு நாங்கள் உண்மையிலேயே நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்,” என்கிறார்.
வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் 50% வாடகைக் குறைப்புடன் ஒரு கடையை தனக்கு ஒதுக்க வேண்டும் என்று அதிகாரிகளிடம் ராஜா நீண்ட காலமாக கோரிக்கை வைத்துள்ளார். இந்த வேண்டுகோள் திருப்பத்தூர் போன்ற அருகிலுள்ள மாவட்டங்களில் இருந்து அவரது சலூனுக்கு வரும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொற்கோயிலுக்குச் செல்லும் ஊனமுற்ற சுற்றுலாப் பயணிகளுக்கு வசதியாக இருக்கும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தகவல் உதவி - நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்
ஆட்டிசம், பார்வையற்ற மாற்றுத் திறனாளி சிறுவர்களை மேடைப் பாடகர்கள் ஆக்கும் பின்னணிப் பாடக நண்பர்கள்!