12 மாதங்களில் ரூ.7 கோடிக்கு விற்பனை: மூங்கில் டவல் தயாரித்து கலக்கும் நண்பர்கள்!
நீடித்த நிலையான தன்மை கொண்ட புதுமையான மூங்கில் டவல்களை ஆன்லைனில் விற்பனை செய்வதன் மூலம் ஓராண்டில் ரூ. 7 கோடி விற்பனை ஈட்டியுள்ள நண்பர்களின் வெற்றிக்கதை.
பொறியியல் கல்லூரியில் ஒன்றாகப் படித்த ஆயுஷ் அகர்வால் மற்றும் நிஹார் கோஸ்லியா எப்போதும் வர்த்தக ஐடியாக்கள் பற்றி பேசுவதில் ஆர்வம் கொண்டிருந்தனர். அமேசான் மற்றும் டி.சி.எஸ் நிறுவனங்களில் வேலை கிடைத்த நிலையிலும் இருவரும் சொந்த நிறுவனத்தை துவக்குவதில் ஆர்வம் கொண்டிருந்தனர்.
நிஹாரின் குடும்பம் பி2பி ஜவுளி வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்தது. இந்தியாவில் மூங்கில் இழை துணிகள் அதிகம் பயன்படுத்தப்படுவில்லை என நிஹார் நினைத்தார். இது பற்றி ஆயுஷிடம் பேசிய போது, அமேசானில் வாடிக்கையாளர்களிடம் இதை நேரடியாக விற்பனை செய்ய மூங்கில் இழை ஏற்றதாக இருக்கும் எனத் தெரிவித்தார்.
2018ல், வேலையை ராஜினாமா செய்து விட்டு, அகமதாபாத்தில் முஷ் டெக்ஸ்டைல் நிறுவனத்தைத் துவக்கி, மூங்கில் இழை தயாரிப்புகளை சந்தைக்குக் கொண்டு வரும் எண்ணத்தை செயலுக்கு கொண்டு வந்தோம். குளியல் டவல்கள், முகம் துடைக்கும் டவல்கள், சாக்ஸ்கள் போன்றவற்றை அமேசான், ஃபிளிப்கார்ட், மிந்த்ரா மற்றும் டாடா கிலிக் ஆகிய தளங்களில் விற்பனை செய்தோம், என்கிறார் ஆயுஷ்.
“கடந்த நிதியாண்டில் ரூ.4 கோடி வருவாய் ஈட்டினோம். கடந்த 12 மாதங்களில் ரூ.7 கோடி ஈட்டினோம். இந்த ஆண்டு ரூ.12 கோடி திட்டமிட்டுள்ளோம்,” என்கிறார்.
ஏன் மூங்கில்?
மூங்கில் இழைகளால் தயாரிக்கப்படும் துணிகள் தண்ணீரை எளிதாக உறிஞ்சும் தன்மையோடு, கிருமி எதிர்ப்பு மற்றும் துர்நாற்றம் எதிர்ப்பு தன்மை கொண்டிருக்கிறது.
நிறுவன தயாரிப்புகள் மூங்கில் இழை மற்றும் பருத்தி இழைகளை 70- 30 எனும் விகிதத்தில் பயன்படுத்துவதாகவும், பெரிய பேஷன் பிராண்ட்கள் மிகவும் குறைவான விகிதத்தில் மூங்கில் இழைகளை பயன்படுத்துவதாகவும் நிறுவனர்கள் கூறுகின்றனர்.
“பேஷன் துறை இழைகள் கலவை விகிதத்தில் கவனம் செலுத்துவதில்லை. ஒரு சில பிராண்ட்கள் தங்கள் தயாரிப்பு மூங்கில் இழை சார்ந்தது என்றாலும், உண்மையில் அவை மூங்கில் சாம்பலால் டை செய்யப்பட்டவை. எங்கள் தயாரிப்பு 40-60 மூங்கில் – பருத்தியை கொண்டுள்ளது,” என்கிறார் ஆயுஷ்.
நீடித்த நிலையான தன்மை கொண்ட பேஷன் துறையில் மூங்கில் கலப்பு இழைகள், பருத்து மற்றும் பாலியிஸ்டருக்கு மாற்றாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் மூங்கில் விளைய குறைவான தண்ணீரே தேவை. பூச்சிக்கொல்லிகளும் அவசியம் இல்லை.
ஆரம்ப காலம்
மூங்கிலில் எதிர்காலம் இருப்பது என நம்பிய நண்பர்கள் துவக்கத்தில் ஆயுஷ் தந்தை அலுவலகத்தில் தங்கள் நிறுவனத்தைத் துவக்கினர்.
“என் தந்தை பங்குத் தரகராக இருக்கிறார். எங்கள் வர்த்தகத்திற்கு இடம் ஒதுக்கி வந்தார். மாதம் ரூ.25,000 வாடகை கொடுத்தோம். அலுவலகத்தை இலவசமாக பயன்படுத்தினால், வர்த்தகத்தில் வாடகை முக்கியப் பங்கு என்பதை உணராமல் போய்விடுவோம் என தந்தை கூறுவது வழக்கம்,” என்கிறார் ஆயுஷ்.
நிறுவனத்தை ரூ.5 லட்சம் சேமிப்பில் துவக்கியதாகவும், லாபத்தை மீண்டும் முதலீடு செய்ததாகவும் கூறுகிறார்.
தற்காலிக அலுவலகத்தில், முதலில் மூங்கில் டவல்களில் இருந்து வர்த்தகத்தை துவக்க திட்டமிட்டனர். நிஹார் குடும்ப வர்த்தகம் ஜவுளி உற்பத்தியில் ஈடுபட்டிருந்தாலும், அந்த இயந்திரங்களை டவல் தயாரிப்புக்கு பயன்படுத்த முடியவில்லை.
“உயர் தரமான தயாரிப்பில் கவனம் செலுத்த விரும்பினோம். எனவே, எந்த சமரசமும் செய்து கொள்ளாமல் இருக்க முழு உற்பத்தியிலும் எங்கள் கட்டுப்பாடு இருப்பதை விரும்பினோம். உள்ளூர் சப்ளையர்களிடம் இருந்து இழைகள் கொள்முதல் செய்து, எந்த மாதிரியான டவல்கள் தேவை எனும் தெளிவான விளக்கத்துடன் உற்பத்தி ஆலைகளுக்கு அனுப்பி வைத்தோம்,” என்கிறார் நிஹார்.
ஆரம்ப காலத்தில் ஆயுஷ் மற்றும் நிஹார் தங்கள் காரில் இழைகளை நிரப்பிக்கொண்டு, உள்ளூர் ஆலைகளுக்கு சென்று, அங்கிருந்து தயாரிப்புகளை எடுத்துச்செல்வார்கள். முதலில் உற்பத்தியான 110 டவல்களை அமேசானில் விற்பனைக்கு பட்டியலிட்டனர். இந்த கையிருப்பு நான்கு முதல் ஐந்து மாதங்கள் தாங்கும் என நினைத்தனர்.
ஆப்லைன் விற்பனை
நிஹார் அருகாமையில் இருந்த கடையை அணுகி அதன் மூலமும் டவலை விற்பனை செய்ய முயற்சித்தார்.
“கடைக்காரருக்கு எங்கள் தயாரிப்பு பிடித்திருந்தாலும், விநியோகிஸ்தரிடம் இருந்து மட்டுமே வாங்குவோம் என மறுத்துவிட்டார். அடுத்ததாக விநியோகிஸ்தரை தொடர்பு கொண்டோம்,” என்கிறார் ஆயுஷ்.
விநியோகிஸ்தர் அலுவலகத்தை அடைந்ததும், நிறுவனர்களிடம் எவ்வளவு டவல்கள் இருக்கின்றன எனக் கேட்கப்பட்டது.
“போதுமான இருப்பு உள்ளது எனக் கூறியதும், விநியோகிஸ்தர் எல்லாவற்றையும் வாங்கிக் கொள்ள விரும்பினார். இதை எதிர்பார்க்கவில்லை என்றாலும், கடனில் வாங்கிக் கொள்ள விரும்பியதால் இதை நிறைவேற்றாமல் விட்டுவிட்டோம்,” என்கிறார் ஆயுஷ்.
அதன் பிறகு விநியோகிஸ்தர் கடைகளில் ஒரு சில பிரிமியம் டவல்கள் மட்டும் விற்கத் தீர்மானித்தனர். நடைமுறையில் விற்பனை நிகழும் முறை பற்றிய பாடத்தை இந்த அனுபவம் அவர்களுக்கு கற்றுக்கொடுத்தது.
ஆன்லைன் மாடல்
“அமேசான் விற்பனையில் கவனம் செலுத்தி, எங்கள் தயாரிப்பை பிரிமியம் விலையில் அளித்தோம். ஏனெனில், மக்கள் இவற்றை இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே வாங்கும் வழக்கம் கொண்டிருந்தனர்,” என்கிறார் அவர்.
“ஆன்லைன் பிரிமியம் டவல் பிரிவில், வழக்கமான பருத்தி டவல்கள் ரூ.500 முதல் ரூ.1,000க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆப்லைனில் இவை ரூ.2,000 க்கு விற்பனை செய்யப்பட்டன. போட்டி அதிகம் இல்லை என்பதால் லாபம் அதிகம் இருந்தது. அந்த டவல்கள் சிலவற்றை வாங்கி எங்கள் டவலுடன் ஒப்பிட்ட போது, மூங்கில் டவல்கள் அதிக தரத்துடன் இருப்பதை உணர்ந்தோம்.”
இதனையடுத்து, நிறுவன மூங்கில் டவல்களை ரூ.1,899, ரூ,1,499, ரூ.1,300 என மூன்று விலைகளில் விற்க தீர்மானித்தனர்.
அவர்கள் வைத்திருந்த 110 டவல்களும் ஒரு மாதத்தில் விற்றுத்திர்ந்தன. மூங்கில் இழை டவல்களுக்கு வரவேற்பு இருப்பதை உணர்ந்து கொண்டு, மேலும் பலவித டவல்களை அறிமுகம் செய்ய முடிவு செய்தனர்.
95 சதவீத விற்பனை ஆன்லைனில் இருந்து வந்தாலும், நிறுவனர்கள் ஆப்லைன் விற்பனையை மறந்துவிடவில்லை. குஜராத் , தமிழ்நாடு, மகராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் விநியோகிஸ்தர்களை ஏற்பாடு செய்துள்ளதோடு, குவைத், யூ.ஏ.இ மற்றும் யூகேவிலும் விற்பனை செய்து வருகின்றனர்.
சவால்கள்
தற்போதைய நிலையில் டி-ஷர்ட் போன்றவற்றில் கவனம் செலுத்தவில்லை. ஏனெனில் இவற்றில் பாலியிஸ்டர் கலைவை அதிகம் என்பதால் தயாரிப்பது கடினம். ஆர்டர் அடிப்படையில் மட்டுமே மூங்கில் டி-ஷர்ட்களை விற்பனை செய்கின்றனர்.
“எங்கள் தயாரிப்பின் உற்பத்தி முறையை முழுவதும் கட்டுப்பாட்டில் வைத்திருக்க விரும்புகிறோம். இதனால் டவல்களை உற்பத்தி செய்ய மூன்று முதல் நான்கு மாதங்கள் ஆகின்றன,” என்கிறார் நிஹார். இது தவிர கொரோனா தொற்றும் கொள்முதலை பாதித்துள்ளது.
“பெரும்பாலான தயாரிப்புகளில் இருப்பு தீர்ந்துவிட்டது. உற்பத்தி இன்னமும் 100 சதவீதம் இல்லை. பொதுமுடக்கத்தில் கொஞ்சம் இருப்பு வைத்திருந்தாலும், அவை உடனே விற்று விட்டன,” என்கிறார் ஆயுஷ்.
எதிர்காலத் திட்டம்
உலக அளவில் நீடித்த நிலையான பேஷன் சந்தை ஆண்டு அடிப்படையில் 25 சதவீத வளர்ச்சி அடையும் என ஒரு அறிக்கை தெரிவிக்கிறது. கொரோனா பாதிப்பில் இருந்து நிறுவனங்கள் மீண்டு வந்து தயாரிப்பில் ஈடுபட்டுள்ளதே இதற்கு முக்கியக் காரணம்.
இந்த வளர்ச்சிக்கு ஈடு கொடுக்கும் வகையில், முஷ் நிறுவனர்கள் கொள்முதல் மற்றும் விற்பனை, தயாரிப்புக்கு இடையிலான நேரத்தை குறைக்கத் திட்டமிட்டுள்ளதோடு, படுக்கை விரிப்புகள், குழந்தைகள் டவல்களிலும் விரிவாக்கம் செய்ய உள்ளனர்.
“2018ல் நாங்கள் துவங்கிய போது, எங்களைப்போல யாரும் டவல் தயாரிக்கவில்லை. ஆனால் இப்போது ஒரு சில நிறுவனங்கள் இதே போல செய்கின்றன. மேலும் போட்டி அதிகமாகும் என எதிர்பார்க்கிறோம். இந்தத் துறை மேலும் பல புதிய நிறுவனங்களை எதிர்கொள்ளும். நாங்கள் தொடர்ந்து புதுமையாக்கத்தில் கவனம் செலுத்துவோம்,” என்கிறார் ஆயுஷ்.
ஆங்கிலத்தில்: ரிஷப் மன்சூர் | தமிழில்: மலையரசு