Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

மூங்கில்-ஆர்கானிக் பருத்திக் கலவையில் உள்ளாடைகள்: திருப்பூர் தொழில் முனைவரின் அசத்தல் ப்ராண்ட்!

ஆண்டிற்கு 2 கோடி ரூபாய் வருவாய் ஈட்டும் திருப்பூரில் இருந்து வெளிவரும் இந்த ப்ராண்ட் உள்ளாடைகள் ஆன்லைன் மற்றும் கடைகளில் கிடைக்கிறது.

மூங்கில்-ஆர்கானிக் பருத்திக் கலவையில் உள்ளாடைகள்: திருப்பூர் தொழில் முனைவரின் அசத்தல் ப்ராண்ட்!

Thursday December 12, 2019 , 4 min Read

இந்திய ஃபேஷன் துறையில் உடற்பயிற்சி செய்யும்போதும் கேஷுவலாகவும் அணியக்கூடிய ’அத்லீஷர்’ ஆடை வகைகள் முக்கிய இடம்பெற்றுள்ளது.


1994-ம் ஆண்டு திருப்பூரைச் சேர்ந்த தொழில்முனைவரான விஜயராகவன், ஜவுளி மற்றும் பின்னலாடை நிறுவனமான BS Apparels தொடங்கியபோது இத்தகைய ஆடை வகைகளின் தேவை இருக்கவில்லை. அமெரிக்காவில் இந்த வகை ஆடைகளுக்கான தேவை அதிகம் இருந்ததால் அவர் துணியையும் ஆடைகளையும் ஏற்றுமதி செய்தார்.

1

தமிழகத்தைச் சேர்ந்த இந்தத் தொழில்முனைவர் தனது தொழிற்சாலையை சூரிய ஒளி மின் தகடுகள், ஜெனரேட்டர்கள், காற்றாலை ஆகியவற்றுடன் நிறுவியுள்ளார். இதன் மூலம் இவரது வணிகத்திற்குத் தேவையான மின் ஆற்றலைக் காட்டிலும் 261 மடங்கு அதிகம் உற்பத்தி செய்யப்படுகிறது.


BS Apparels தொழிற்சாலையில் மாதத்திற்கு 20,000 யூனிட் உற்பத்தி செய்யக்கூடிய 180 kW சூரிய ஒளி மின் தகடுகள் உள்ளது.

”நாள் ஒன்றிற்கு 10,000 யூனிட் உற்பத்தி செய்யக்கூடிய 2.4 MW சோலார் பவர் ஜெனரேட்டர் உள்ளது. முழுமையாக எல்ஈடி சார்ந்து இயங்கும் எங்களது தொழிற்சாலையில் ஒரு மாதத்திற்கு 3,500 யூனிட் வரை சேமிக்கப்படுகிறது. மேலும் 5 MW உற்பத்தி செய்யக்கூடிய இரண்டு காற்றாலைகளும் எங்களிடம் உள்ளது,” என்றார்.

சூரிய ஆற்றல் உள்கட்டமைப்பின் மூலம் தொழிற்சாலைக்குத் தேவையான மின்சக்தியைக் காட்டிலும் கூடுதலாக மின் உற்பத்தி செய்யப்படுவதால் உபரி மின்சக்தி உள்ளூர் மின்சார வாரியத்திற்கு விற்பனை செய்யப்படுவதாக அவர் விவரித்தார்.

2

தனித்துவமான கலவை

விஜயராகவன் 2004, 2006-ம் ஆண்டுகளுக்கிடையே அத்லீஷர் ஏற்றுமதிக்காக மூங்கில் மற்றும் ஆர்கானிக் பருத்தி கொண்டு துணியை உருவாக்கினார். இதுவே தனித்துவமான அம்சமாக மாறியது.

”மூங்கிலில் இயற்கையாகவே நெகிழ்திறன், நீடித்திருக்கும் திறன், வியர்வையை உறிஞ்சும் திறன் ஆகியவை உள்ளது. இந்தத் துணிக்கு சாயமிட குறைந்த அளவிலான தண்ணீர் மட்டுமே தேவைப்படும். இந்த வகையானது பருத்தியைக் காட்டிலும் இயற்கையாகவே மூன்று டிகிரி குளிர்ச்சியானது. பாக்டீரியாக்களை எதிர்க்கும் தன்மை கொண்டது,” என விவரித்தார்.

விஜயராகவன் சீனாவில் இருந்து மூங்கில் இழைகளை இறக்குமதி செய்யத் தொடங்கினார். ஆர்கானிக் காட்டனை இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளில் இருந்தும் வாங்கினார்.

3
”இறக்குமதி செய்யப்பட்ட மூங்கிலுடன் இந்திய ஆர்கானிக் பருத்தியை இழையாக இருக்கும் நிலையிலேயே ஒன்றாக இணைத்து நூலாக நூர்த்தேன். அத்துடன் எலாஸ்டீன் சேர்க்கப்பட்டு தொழிற்சாலையில் பின்னப்பட்டது,” என்றார்.

ஆனால் இது எளிதாக இருக்கவில்லை. இழையை ப்ராசஸ் செய்வது கடினமாக இருந்தது. இதில் வெற்றியடைய விஜயராகவனுக்கு சுமார் இரண்டாண்டுகள் ஆனது. இவ்வாறு இழைகளை இணைப்பது பயனுள்ளதாக இருப்பினும் உற்பத்தி செலவு அதிகரிப்பது மற்றுமொரு சவாலாக இருந்தது.


உற்பத்தி செலவு அதிகம் என்பதாலும் க்ளீன் எனர்ஜி கட்டமைப்புகளில் முதலீடு செய்ய வேண்டியிருப்பதாலும் லாபமோ நஷ்டமோ இல்லாத நிலையை எட்ட சிறிது அவகாசம் தேவைப்படும் என்பதை விஜயராகவன் அறிந்திருந்தார்.

4

இந்தியாவிற்கான தயாரிப்பு

ஏற்றுமதி வணிகத்தில் லாபம் ஈட்டத் தொடங்கினார். ஒரே ஒரு இயந்திரத்துடன் தொடங்கப்பட்ட இவரது பின்னலாடை தொழிற்சாலை 430 இயந்திரங்களுடன் செயல்படும் அளவிற்கு வளர்ச்சியடைந்தது.


ஜவுளி வணிகத்திற்கு திருப்பூர் சரியான இடம் என்பதைத் தெரிந்துகொண்டார். திருப்பூர் இந்தியாவின் பின்னலாடை தலைநகரம் என்றே அழைக்கப்படுகிறது. அத்துடன் இதன் ஜவுளி உற்பத்தி சுற்றுச்சூழலானது இந்தியாவின் பருத்தி பின்னலாடை ஏற்றுமதியில் 90 சதவீதம் பங்களிக்கிறது.


எனினும் விஜயராகவன் இந்தியாவிற்குத் தேவையான தயாரிப்புகளை தனது மூங்கில்-ஆர்கானிக் கலவையைக் கொண்டு உற்பத்தி செய்ய விரும்பினார். ஆனால் அத்லீஷருக்கான தேவை அதிகம் இருக்கவில்லை.

”வணிகம் சிறப்பாக வளர்ச்சியடைந்தது. உள்ளூர் சந்தைக்கான தயாரிப்பை உருவாக்க விரும்பினேன். வசதியாகவும் துர்நாற்றமின்றியும் இருப்பினும் எங்களது மூங்கில்-ஆர்கானிக் கலவையை பயன்படுத்தி தயாரிக்கும் ஆத்லீஷருக்கான தேவை அதிகம் இல்லை,” என்றார்.
5

இந்த மூங்கில்-ஆர்கானிக் கலவையைக் கொண்டு இந்தியாவில் தேவை அதிகம் உள்ள வேறொரு பிரிவில் தயாரிப்பை உருவாக்கலாம் என்கிற எண்ணம் அவருக்குத் தோன்றியது.


உடனே அவரது நினைவிற்கு வந்தது உள்ளாடைப் பிரிவு. பல்வேறு மிகப்பெரிய பிராண்டுகளும் சர்வதேச பிராண்டுகளும் இந்திய சந்தையில் செயல்படத் தொடங்கியதால் உள்ளாடைப் பிரிவு வளர்ச்சியடைந்து வருவதை உணர்ந்தார்.


மேலும் உள்ளாடைகளுக்கான ஒழுங்குபடுத்தப்பட்ட சந்தை அதிகரித்து வந்தது. அதேபோல் ஒழுங்குபடுத்தப்படாத சந்தை அளவு குறைந்து வந்தது. விஜயராகவனிடம் வலுவான உற்பத்தி அமைப்பும் தனித்துவமான கவலையைக் கொண்டு நெய்யப்பட்ட துணி வகையும் இருப்பதால் உள்ளாடை சந்தையில் செயல்படுவதற்கான சரியான வாய்ப்புள்ளது என கருதினார்.

”வழக்கமான உள்ளாடைகள் சௌகரியமாக இல்லை. என்னுடைய மூங்கில்-ஆர்கானிக் பருத்தி கலவையைப் பயன்படுத்தி உள்ளாடை தயாரித்தேன். அதை நானே முயற்சி செய்து பார்த்தேன். மிகவும் சௌகரியமான உணர்வு கிடைத்தது,” என்றார்.

புதிய பிராண்ட்

விஜயராகவன் உள்ளாடைகள் தயாரிக்கவேண்டும் என்கிற முனைப்புடன் 2010-ம் ஆண்டு ’லாவோஸ் பர்ஃபாமன்ஸ்’ (Lavos Performance) தொடங்கினார். குடும்ப உறுப்பினர்கள் பெயர்களின் முதலெழுத்துகளைக் கொண்டு இந்தப் பெயர் தேர்வு செய்யப்பட்டதாக அவர் தெரிவித்தார்.


விஜயராகவன் நிதி ஏதும் உயர்த்தவில்லை. தாய் நிறுவனமான BS Apparel நிறுவனத்தின் வருவாயைக் கொண்டு லாவோஸ் பிராண்ட் அறிமுகப்படுத்தினார். லாவோஸ் இந்திய சந்தைகளுக்கான உள்ளாடைகளைத் தயாரிக்க BS Apparel நிறுவனத்தின் உற்பத்தி உள்கட்டமைப்பு வசதிகள் பயன்படுத்தப்பட்டது.

6

லாவோஸ் ஆண்களுக்காக பாக்ஸர், ஸ்ட்ரெச் மற்றும் ஸ்போர்ட்ஸ், உள்ளாடைகள், டி-ஷர்ட், போலோஸ் ஆகியவற்றைத் தயாரித்தது. பெண்கள் மாதவிடாய் சமயத்திலும் மகப்பேறு சமயத்திலும் அணியக்கூடிய உள்ளாடை வகைகள் மற்றும் விளையாடும்போது அணியக்கூடிய வகைகளையும் தயாரிக்கத் தொடங்கியது.

பெண்களுக்காக ஸ்போர்ட்ஸ் பிரா, பிகினி, டி-ஷர்ட், ஷார்ட்ஸ், யோகா பேண்ட் போன்ற வகைகளும் தற்போது கிடைக்கிறது. பெண்களுக்கான ஆடை வகைகள் அதிகம் விற்பனையாகிறது. எங்களது வாடிக்கையாளர்களில் 70 சதவீதம் பேர் பெண்கள். 25 வயதிற்கும் அதிகமான பெண்களை இலக்காகக் கொண்டு செயல்படுகிறோம்,” என்றார் விஜயராகவன்.

தயாரிப்புகளுக்கான ஒட்டுமொத்த தேவையில் 40 சதவீதம், முதல் நிலை நகரங்களில் இருந்தும் மற்றவை இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் இருந்தும் வருவதாக அவர் தெரிவிக்கிறார்.


”நாங்கள் அமேசான், ஃப்ளிப்கார்ட், ஜிவாமே போன்ற தளங்களில் ஆன்லைனில் விற்பனை செய்கிறோம். விரைவில் மிந்த்ரா மூலம் விற்பனை செய்ய உள்ளோம். தயாரிப்புகள் உற்பத்தி விலையிலேயே விற்பனை செய்யப்படுவதால் அதிக தள்ளுபடிகள் வழங்கப்படுவதில்லை. குறிப்பிட்ட காலங்களில் சில தயாரிப்புகளுக்கு மட்டும் 10 முதல் 30 சதவீதம் தள்ளுபடி வழங்குகிறோம்,” என்றார்.


லாவோஸ் ஸ்டோர்கள் மூலமாகவும் ஆஃப்லைனிலும் விற்பனை செய்கிறது. தென்னிந்திய நகரங்களிலும் மும்பையிலும் 15 முதல் 20 முன்னணி சில்லறை வர்த்தக ஸ்டோர்களில் செயல்படுகிறது.

லாவோஸ் லாபமோ நஷ்டமோ இல்லாத நிலையை எட்டியுள்ளதாகவும் ஆண்டிற்கு 2 கோடி ரூபாய் வருவாய் ஈட்டுவதாகவும் அவர் தெரிவித்தார்.

தனித்துவமான தொழிற்சாலை

க்ளீன் எனர்ஜி உள்கட்டமைப்பின் நன்மைகள் மட்டுமின்றி இந்த தொழிற்சாலை 900 பேரை பணியிலமர்த்தியுள்ளது. இதில் பெரும்பாலானோர் பெண்கள் என்கிறார் விஜயராகவன்.

”எங்களது தொழிற்சாலையில் 20 மாற்றுத்திறனாளிகள் பணியிலமர்த்தப்பட்டுள்ளனர். லாவோஸ் குழுவில் முக்கிய அலுவலகத்தில் 10 நபர்களும் விற்பனை குழுவில் 12 பேரும் உள்ளனர்,” என்றார்.

மூங்கில்-ஆர்கானிக் பருத்தி கலவையின் நன்மை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த லாவோஸ் குழு ஃபேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றைப் பயன்படுத்துகிறது. இவை நேரடியாக விற்பனையாக மாறிவிடாது என்பதை விஜயராகவன் ஒப்புக்கொண்டாலும் இதன் மூலம் ஏற்படும் தாக்கம் திருப்தியளிப்பதாக அவர் தெரிவிக்கிறார்.

7

நேரடியாக போட்டி அதிகம் இல்லாததும் இதற்குக் காரணம் என்கிறார். ”இதன் செலவும் விலையும் அதிகம் என்பதால் மக்கள் இதுபோன்ற பிரிவில் செயல்பட விரும்புவதில்லை. உற்பத்தி அளவும் விற்பனையும் குறைவாகவே இருக்கும்,” என்றார்.


லாவோஸ் அதன் தனித்துவமான சிறப்பம்சத்தைப் பயன்படுத்தி இந்த நிதியாண்டில் விற்பனையை இரட்டிப்பாக்கவும் அடுத்த ஆண்டு மீண்டும் அதை இரட்டிப்பாக்கவும் திட்டமிட்டுள்ளது. அதன் தயாரிப்பு தொகுப்பை அதிகப்படுத்த புதிய வடிவமைப்புகளை உருவாக்க வடிவமைப்பாளர்களை இந்நிறுவனம் நியமித்துள்ளது. தானியங்கி கட்டிங் இயந்திரம், 3டி டிசைன் மென்பொருள் ஆகியவற்றை இணைத்துக்கொண்டு அதன் அமைப்பை மேம்படுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

”எங்களது தயாரிப்புகளில் கூடுதல் ஸ்டைல்களை இணைக்க விரும்புகிறோம். அளவு அதிகரிக்கையில் செலவையும் குறைக்கமுடியும்,” என்றார்.

BS Apparel செயல்பாடுகள், ஜவுளி பிரிவில் இவரது அணுகுமுறை ஆகியவற்றிற்காக 2017-ம் ஆண்டு CII விஜயராகவனுக்கு வளர்ந்து வரும் தொழில்முனைவோர் விருது வழங்கியது.


ஆங்கில கட்டுரையாளர்: ரிஷப் மன்சூர் | தமிழில்: ஸ்ரீவித்யா