பாடநூல் முதல் முகநூல் வரை: அரசு பள்ளி மாணவர்களுக்காக அர்ப்பணிப்புடன் இயங்கும் ஆசிரியை கிருஷ்ணவேணி
சரளமாக ஆங்கிலம்… மிடுக்கான யூனிபார்ம்… மாணவர்களை அதிக மதிப்பெண்கள் எடுக்க ஊக்கப்படுத்தும் ஆசிரியர்கள்! இது தனியார் பள்ளிகளின் அடையாளம்!
வகுப்புகள் நடத்தாமல் பொழுதைப்போக்கும் ஆசிரியர்கள், மாணவர்கள் மீது ஏளனப் பார்வை... இது அரசு பள்ளிகளின் மீதான பலரது அடையாளம்!
ஆனால் அரசு பள்ளியாக இருந்தாலும் தங்களாலும் ஒரு மாற்றத்தை கொண்டுவர முடியும் என்பதை இவ்வுலகிற்கு தங்களின் ஃபேஸ்புக் பக்கம் மூலம் வெளிப்படுத்தி, யாருக்கும் தாங்கள் சளைத்தவர்கள் இல்லையென காண்பித்திருக்கிறார் கிருஷ்ணவேணி டீச்சர்.
யார் இந்த கிருஷ்ணவேணி டீச்சர்? அப்படி என்ன செய்தார் இவர்?
'நல்லம்பாக்கம் பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப் பள்ளி'யின் ஃபேஸ்புக் பக்கம். 5 ஆண்டுகளுக்கு முன் இதை ஆரம்பித்தார் இப்பள்ளியின் ஆங்கில ஆசிரியர் கிருஷ்ணவேணி. ஃபேஸ்புக் இன்றைய அளவு பிரபலமாக இல்லாத போதே ஒரு பக்கத்தைத் தொடங்கி அதில் தங்கள் பள்ளியில் நடக்கும் வகுப்புகள் பற்றியும், மாணவ-மாணவிகளின் திறன்களை வெளிப்படுத்தும் வீடியோக்களையும் பதிவிடத்தொடங்கினார். இவரது பதிவுகள் மெல்ல மெல்ல பிரபலமடைய இந்த பக்கத்திற்கு லைக்குகளும் பாராட்டுகளும் குவியத்தொடங்கியது.
இந்த முயற்சியைப் பற்றியும் தனது ஆசிரியர் பணி அனுபவத்தை பற்றியும் பகிர்ந்து பேசிய கிருஷ்ணவேணி,
“நான் கடந்த 20 ஆண்டுகளாக பள்ளி ஆசிரியராக இருக்கிறேன். முதலில் மெட்ரிகுலேஷன் பள்ளியில் ஆசிரியராக இருந்து பின்னர் 2004 ஆம் ஆண்டு அரசு பள்ளியில் பணியில் சேர்ந்தேன்”, என்றார்.
முதல் பணியாக விழுப்புரம் மாவட்டத்திலுள்ள அரசுப் பள்ளியில் சேர்ந்த கிருஷ்ணவேணிக்கு அங்கு படிக்கும் மாணவர்களின் நிலையைக்கண்டு அதிர்ச்சியும், வருத்தமும் ஏற்பட்டது. மிகவும் ஏழ்மை நிலையிலிருந்த வந்த அந்த மாணவர்களை, படிப்பில் ஈடுபடவைக்க கூடுதல் முயற்சி தேவை என அவர் அப்போது உணர்ந்தார்.
“ஒரு நாள், 8 ஆம் வகுப்பு மாணவர்களை நான் நடத்திய பாடத்தின் கேள்விகளுக்கான பதில்களை எழுதச்சொன்னேன். அதிர்ச்சி என்னவென்றால் ஒரே ஒரு மாணவனைத் தவிர பிற எவருக்கும் ஆங்கிலத்தில் எழுதத் தெரியவில்லை. எழுதிய அந்த மாணவனை பதிலை படிக்கச்சொன்னபோது மற்றொமொரு அதிர்ச்சி… அவனால் அதை படிக்க இயலவில்லை. கேள்விக்கான பதிலை அவன் ஒவ்வொரு எழுத்தாக மனப்பாடம் செய்து எழுதியுள்ளான் என்று பின்னர் தெரிந்து கொண்டேன்…”
இந்த சம்பவமே கிருஷ்ணவேணி டீச்சருக்கு அரசுப் பள்ளி மாணவர்களின் தேவை மற்றும் தகுதி பற்றி புரிய வாய்ப்பாக அமைந்தது என்றார். அன்றிலிருந்து தான் கற்பிக்கும் முறைகளில் மாற்றங்களும் புதுமைகளையும் புகுத்தி ஆங்கிலத்தை சுலபமாக அந்த மாணவர்களுக்கு கற்பித்தார். படிக்கத் திணறிய அந்த மாணவனுக்கு அடுத்த ஓராண்டில் பயிற்சி அளித்தார். அவன் இன்று எம்.பி.ஏ முடித்துவிட்டு பணியில் இருக்கிறான் என்றும் இன்றும் அவன் தன்னிடம் தொடர்பில் இருப்பது உத்வேகத்தை அளிப்பதாகக் கூறினார்.
2005 ஆம் ஆண்டு சென்னை வண்டலூரில் அருகில் உள்ள 'நல்லம்பாக்கம் நடுநிலைப் பள்ளியில் பணிமாற்றம் கிடைத்து. அந்த பள்ளியும் மிகவும் மோசமான நிலையில் இருந்தது, மாணவர்கள் மிகவும் ஏழ்மைநிலை குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக இருந்ததால் படிப்பின் மீது பெரிய ஆர்வமில்லாமல் இருப்பதைக் கண்டார் கிருஷ்ணவேணி...
அரசுப் பள்ளி ஆசிரியர்கள் வேலை செய்யாமல் ஓபி அடிப்போர் என்ற பலரது அவமானச்சொற்களை பொய்யாக்க முடிவெடுத்த கிருஷ்ணவேணி, தன்னை மேலும் மேம்படுத்திக்கொண்டு, முழு ஈடுபாட்டுடன் அரசுப்பள்ளி மாணவர்களையும் நல்ல நிலைக்கு கொண்டுவருவதே தனது வாழ்க்கை லட்சியமாக இலக்கை நிர்ணயித்தார்.
2008 ஆம் ஆண்டு பிரிடிஷ் கவுன்சில் நடத்திய ஆங்கில ஆசிரியர்களுக்கான பயிற்சியில் கலந்துகொண்டு கற்பிக்கும் முறையில் பல புதிய யுக்திகளையும், செயல்முறைகளை கற்றுக்கொண்டார் அவர். அந்த முறைகளை தனது பள்ளி மாணவர்களுக்கு கற்பித்து, அவர்களை ஈடுபடுத்தி பாடங்களை நடத்தியதால் ஆங்கிலம் என்றாலே பயந்து ஒதுங்கிய மாணவர்கள் ஆர்வத்துடன் கற்றுக்கொள்ள முன்வந்தனர் என்றார்.
“வகுப்பில் கிராமர், ஆங்கிலச் சொற்களை விளையாட்டு முறையில் கற்றுக் கொடுத்தேன். சிலசமயம் பாடக் கதைகளை ட்ராமா போல் மாணவர்களைக்கொண்டு நடிக்கச்செய்து அதனை வீடியோ பதிவுசெய்து, வகுப்பில் கணினி மூலம் இணைத்து திரையில் பார்க்கும் வசதியை ஏற்படுத்தினேன். இது மாணவர்களை பெரிதும் ஊக்கப்படுத்தியது, அவர்களுக்கு ஆங்கில மொழி மீதான் ஆர்வத்தை பெருக்கியது,” என்றார்.
வகுப்பில் தான் செய்த புதிய அனுகுமுறைகளையும், மாணவர்களின் படைப்புகளையும் வெளியிட முடிவு எடுத்து ஃபேஸ்புக் பக்கம் ஒன்றை தொடங்கினேன்.
"Nallambakkam Panchayat Union Middle School“ என்று தொடங்கிய பக்கத்தில் நாங்கள் செய்ததை தினம் தினம் அப்டேட் செய்தேன். அதை பார்த்து முகம் தெரியாதவர்களும் லைக் செய்து எங்களுக்கு ஊக்கம் தரும் வார்த்தைகளையும், பள்ளிக்கும், மாணவர்களுக்கும் நிதியுதவிகளும் செய்யத் தொடங்கினர். இது எனக்கு ஒரு நம்பிக்கையையும், உத்வேகத்தையும் தந்தது…”
வெளிநாடுகளில் இருந்தும் நிதியுதவியும், மாணவர்களுக்குத் தேவையான பாடப்பொருட்களையும் பலரும் வழங்கி உற்சாகப்படுத்தியதாக கிருஷ்ணவேணி கூறினார்.
இவையெல்லாம் கொண்டு பல ப்ராஜெட்கள் செய்யத்தொடங்கினோம். பல்வேறு இடங்களில் நடக்கும் போட்டிகளில் எங்கள் பள்ளி மாணவர்கள் பங்கேற்று அங்கீகாரம் பெறத்தொடங்கினர். ஹைதராபாத், ஒரிசா என பல இடங்களில் நடந்த கருத்தரங்குகளில் பங்கேற்று, மாணவர்கள் நம்பிக்கையை வெளிப்படுத்தியது எனது பயணத்தின் அர்த்தத்தை புலப்படுத்தியது.
படிப்பு மட்டுமின்றி கலை, பேச்சுத்திறன், ஓவியம் என்று தங்களுக்குள் உள்ள ஆற்றலை வெளிப்படுத்த உதவுவதால் பள்ளியை சுமையாக நினைக்காமல் உற்சாகத்துடன் அனுகத்தொடங்கினர் மாணவர்கள். எங்களைப்போல் இன்று பல அரசுப்பள்ளி ஆசிரியர்கள் கற்பித்தலில் புதுமைகளை புகுத்தி, அரிய பணிகளை செய்யத் துவங்கியுள்ளனர், என்றும் பகிர்ந்து கொண்டார்..
என்னுடைய ஆசையெல்லாம் ஒன்றுதான், என்னிடம் பயின்ற நல்லம்பக்கம் பள்ளி மாணவர்கள் பள்ளிப்படிப்பை முடித்து, கல்லூரிக்குச் சென்று பொறியியல், மருத்துவம் என பட்டங்கள் பெற்று பணியில் சேர்ந்து, நல்ல நிலைக்கு வந்து, அந்த வெற்றிக்கதையை எங்கள் பள்ளிக்கு வந்து பகிர்ந்துகொண்டு இங்குள்ள மாணவர்களை ஊக்கமளிக்கவேண்டும் என்பதே ஆகும்.
தன்னுடைய இந்த பணிக்கு தனது குடும்பத்தின் உறுதுணை மிகமுக்கிய பங்குவகிப்பதாக கூறிய டீச்சர், தனது இலக்கை அடைய பல உதவிகளையும், தொழில்நுட்ப ஆலோசனைகளையும் அவரது மகனும் மகளும் வழங்கியதாகக் கூறி மகிழ்ந்தார்.
குரு என்பவர் தெய்வத்துக்கு சமம் என்பது வார்த்தைகளில் மட்டுமில்ல, நிதர்சனத்திலும் சாத்தியமென காட்டியிருக்கும் கிருஷ்ணவேணி டீச்சர், நல்லம்பாக்கம் பள்ளியிலேயே தனது பணியை தொடர, தனக்கு வந்த எச்.எம் பதவி உயர்வினால் பணியிட மாற்றம் வருமென்பதால் அதை மறுத்திருக்கிறார் என்ற ஒன்றே அவரின் உண்மையான ஈடுபாட்டை நமக்குக் காட்டுகிறது.