தொழில் முனைவோர் நிதி திரட்டுவது எப்படி? யுவர்ஸ்டோரி ’Funding Masterclass’ கருத்தரங்கில் விளக்கம்!
நிதித் திரட்டுவது குறித்து ’Funding Masterclass’ என்னும் கருத்தரங்கு நிகழ்ச்சியை யுவர் ஸ்டோரி கடந்த சனிக்கிழமை (20 ஜூலை) சென்னையில் நடத்தியது. வி.ஆர். மாலில் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் இணைந்து செயல்படும் இடமான ’The Hive’-ல் இந்த சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.
சென்னையைச் சேர்ந்த 'Pick your trail’ ஸ்டார்ட்-அப் நிறுவனம் சமீபத்தில் நிதி திரட்டியது. பிரெஷ் வொர்க்ஸ் நிறுவனத்தின் கிரீஷ், கோ ஃபுருகல் நிறுவனத்தின் குமார் வேம்பு மற்றும் ’ஐ தாட்’ நிறுவனத்தின் ஷியாம் சேகர் ஆகியோர் கூட்டாக ரூ.21 கோடியை ’பிக் யுவர் டிரெய்ல்’ நிறுவனத்தில் (சீரியஸ் ஏ) முதலீடாகச் செய்திருந்தனர்.
நிறுவனம் எப்படித் தொடங்கினோம், நிதித் திரட்டுவது குறித்த சாதக பாதகங்களை அதன் நிறுவனர் ஹரி கணபதி நிகழ்ச்சிக்கு வந்திருந்த தொழில்முனைவோர்களிடம் பகிர்ந்து கொண்டார்.
நானும் என்னுடைய இணை நிறுவனரும் ஐந்தாண்டுகளுக்கு மேலாக எங்களுடைய சொந்த நிதி மற்றும் நிறுவனத்தின் லாபத்தையே மீண்டும் முதலீடு செய்து நிறுவனத்தை நடத்தி வந்தோம்.
“இந்த 5 ஆண்டுகளில் நிலையான பிஸினஸ் மாடலை உருவாக்கினோம். இந்த நிலையில் இருந்து அடுத்த கட்டத்துக்கு எடுத்துச்செல்ல வேண்டும் என்றால் நிதி தேவை என்பதால், நிதி திரட்டுவது குறித்து முடிவெடுத்தோம். ஆனால் அதற்கு முன்பு எங்களுக்கான பிஸினஸ் மாடல், எங்களுக்கு முன் இருந்த வாய்ப்புகள் என அனைத்தையும் ஆராய்ந்துவிட்டோம்,” என்றார்.
மேலும், சுற்றுலாப் பிரிவில் உள்ள ஸ்டேஜில்லா உள்ளிட்ட சில நிறுவனங்கள் மூடப்பட்டன. தாமஸ் குக் உள்ளிட்ட நிறுவனங்கள் பல ஸ்டோர்களை திறந்தன. சுற்றுலாத் துறை இதுபோன்ற நிச்சயமற்ற சூழலில் இருக்கும் போதுதான் நாங்கள் நிதி திரட்ட முடிவெடுத்தோம். நாங்கள் முடிவெடுத்ததில் இருந்து ஐந்து மாதங்களில் நிதி திரட்டும் பணியை முடித்துவிட்டோம்.
”நிறுவனத்தை தனி நபராக நடத்துவது என்பது சிக்கலானது. பல தனிநபர் தொழில் முனைவோர் சிரமப்படுவதை நாங்கள் பார்க்கிறோம். அதே சமயத்தில் நண்பர்கள் இணைந்து தொழில் புரிந்தாலும் அவர்களுக்குள் நல்ல புரிதல் இருக்க வேண்டும். அதே புரிதல் முதலீட்டாளர்களுக்கும் நிறுவனர்களுக்கும் இருக்க வேண்டும். அந்த புரிதல் தேவை என்றால் நம்முடைய திட்டமும் இலக்குகளும் முன்கூட்டியே திட்டமிடப் பட்டிருக்க வேண்டும்,” என்றார் ஹரி.
உதாரணத்துக்கு நாங்கள் உள்நாட்டு சுற்றுலாவை கவனிப்பவதில்லை. ஆனால் முதலீட்டாளர்கள் உள்நாட்டு பிரிவை கவனிக்க வேண்டும் என வற்புறுத்தலாம். இவை முன்கூட்டியே விளக்கப்பட்டதால் இதுபோன்ற சிக்கல் வருவதை தவிர்க்கலாம், என்றார்.
ஜூவல்லரி விற்கும் ஆன்லைன் நிறுவனங்களின் சராசரி விற்பனை 25,000 ரூபாயாக இருக்கும் பட்சத்தில் எங்களின் ஒரு பில் மதிப்பு சராசரியாக ரூ.2.5 லட்சமாக இருக்கிறது. கடந்த ஐந்தாண்டுகளாக இதற்கு உழைத்தோம். டெக்னாலஜி, புராடக்ட் உள்ளிட்ட பல விஷயங்களில் கவனம் செலுத்தினோம். இவற்றை முதலீட்டாளர்களுக்கு விளக்கினோம். தவிர முதலீட்டாளர்கள் என்பவர்கள் உங்களுடைய வரவு செலவு கணக்குகளை பார்ப்பவராக இருக்கக் கூடாது. உங்களது வாடிக்கையாளர்களிடம் உரையாடி, அவர்களின் கருத்துகளை கேட்டறிந்து ஆலோசனை வழங்குபவராக இருக்கவேண்டும்.
”நிதி கிடைப்பதற்கு முன்பு நாங்கள் குறைந்த ஊழியர்களை வைத்தே நிறுவனத்தை நடத்தினோம். கடந்த டிசம்பரில் 80 பேர் மட்டுமே இருந்தார்கள். தற்போது 180 பேர் உள்ளனர். இந்த நிதி ஆண்டில் 100 கோடி வருமானத்தை ஈட்டுவோம் என நம்புகிறோம். நிதித் திரட்டுவது முக்கியமல்ல, அந்த நிதியை எதற்காக திரட்டுகிறோம், எப்படி பயன்படுத்துகிறோம் என்பதில்தான் வெற்றி இருக்கிறது,” என ஹரி கூறினார்.
இதனைத் தொடர்ந்து நிதி திரட்டுவது குறித்த விவாதம் நடந்தது. இதில் சென்னை ஏஞ்சல் பல்ராம் நாயர், Evren asset advisors நிறுவனத்தின் சமீர் அத்வை கேபிட்டல் அட்வைசர்ஸ் நிறுவனத்தின் காவ்யா நாயர் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த விவாதத்தை Wassup நிறுவனத்தின் இணை நிறுவனர் பாலசந்தர் தொகுத்து வழங்கினார்.
இந்த உலகில் ஆரம்பம் முதல் வியாபாரம் நடந்து வந்தாலும் 90களில்தான் இது போல ஏஞ்சல் ஃபண்டிங் பிரபலமானது. அதனால் நிதித் திரட்டிய நிறுவனம்தான் வெற்றி அடைந்த நிறுவனம் என எடுத்துக்கொள்ளத் தேவையில்லை. சந்தையின் சூழ்நிலையை பயன்படுத்தி வளர்ச்சி அடைவதற்கு நிதி முக்கியமானது என்பதையும் மறுக்க முடியாது என தன்னுடைய தொடக்க உரையை கூறிய பாலசந்தர், தொழில் முனைவோர்களிடம் நீங்கள் எதிர்பார்க்கும் விஷயம் எது என பல்ராமிடம் கேட்டார்.
சென்னை ஏஞ்சல் மூன்று விஷயங்களை எதிர்பார்க்கிறது.
“முதலாவது தொழில் முனைவோரின் தன்மை. தொழிலில் உள்ள வாய்ப்புகள் குறித்து விவாதிப்பதை விட தொழில்முனைவோரின் தன்மை முக்கியம். தொழில்புரிய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும் பட்சத்தில் அவரை நம்பி முதலீடு செய்ய முடியும். இரண்டாவது அவர்களின் ப்ராடக்ட் அல்லது சேவை. ப்ராடக்ட் எப்படி இருக்கிறது என்பது குறித்து பார்ப்போம். அதனைத் தொடர்ந்து அந்த ப்ராடக்டுக்கான சந்தை எவ்வளவு பெரியது என்பதை கவனிப்போம். இந்த மூன்று விஷயங்களை வைத்துதான் ஏஞ்சல் முதலீடு நடக்கும் என பல்ராம் கூறினார்.
எந்த குறியீட்டை அடிப்படையாக வைத்து முதலீடு செய்வீர்கள் என்னும் கேள்வி காவ்யாவுக்கு சென்றது. அதற்கு அவர்,
”பொதுவான குறியீடு என்று வகைப்படுத்த முடியாது, எந்தத் துறையில் முதலீடு, டெக்னாலஜியின் தரம் எப்படி இருக்கிறது என்பது உள்ளிட்டவற்றை பார்ப்போம். இவை அனைத்தும் இருந்தாலும் நிதிதான் பிரதானம். நிறுவனம் எவ்வளவு வருமானம் ஈட்டுகிறது. லாபம் எவ்வளவு இருக்கிறது. லாபம் இல்லை எனில் எவ்வளவு காலத்துக்குள் லாபத்துக்கான வாய்ப்பு இருக்கிறது என்பதை பார்ப்போம்,” என்றார்.
எத்தனை சதவீத பங்குகளை விலக்கிக்கொள்ளலாம் என்னும் கேள்விக்கு சமீர் பதில் அளித்தார்.
“முதல் முறையாக நிதித் திரட்டும் போது நிறுவனர்கள் அதிக அளவிலான பங்குகளை விலக்கிக் கொள்ளக் கூடாது. இதில் இரண்டு பிரச்சினைகள் உள்ளன. முதல்முறையே அதிக சதவீத பங்குகளை விலக்கிக்கொண்டால் அடுத்த முறை நிதி திரட்டுவதில் சிக்கலாகிவிடும். அதையும் தாண்டி நிதி திரட்டினால் நிறுவனர்களின் பங்கு குறைந்துகொண்டே வரும். ஒரு கட்டத்தில் நிறுவனர்களுக்கு நிறுவனத்தில் பங்கு இல்லாமல் போய்விடும். அதனால் தொழிலில் ஆர்வம் இல்லாமல் போகும் வாய்ப்பு இருக்கிறது.
அதேப்போல தொழிலுக்கு ஆலோசகர்களின் பங்கு முக்கியமானது. முன்பை போல் அல்லாமல் வெற்றியடைந்த பலர் தொழில்முனைவோர்களுக்கு ஆலோசனை வழங்கத் தயாராக இருக்கின்றனர் என சமீர் கூறினார்.
கலந்துரையாடல் முடிந்த பிறகு தொழில்முனைவோர்களின் கேள்விகளுக்கும் சிறப்பு விருந்தினர்கள் பதில் அளித்தனர். யுவர்ஸ்டோரி, தமிழ்நாடு EDI உடன் இணைந்து நடத்திய ‘Funding Masterclass’ இனி சென்னையைத் தாண்டி தமிழகத்தில் உள்ள பிற ஊர்களிலும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
தொழில் தொடங்கும் இளைஞர்கள் மற்றும் முதல் தலைமுறை தொழில் முனைவோர்களுக்கு தொழிலை அடுத்தக்கட்டத்துக்கு கொண்டு செல்ல நிதி திரட்டல் ஒரு முக்கிய அடியாகும். அதற்கான சரியான வழிகாட்டுதலும், புரிதலும் இருந்தால் மட்டுமே முதலீட்டாளர்களை கண்டறிந்து, முதலீடுகளை பெறமுடியும். அதற்கான வழிகாட்டுதலை முன்னிறுத்தியே யுவர்ஸ்டோரி இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து நடத்தவுள்ளது.