‘கிரிக்கெட்டை ஆளப்போகும் தொழில்நுட்பம்’ - எதிர்காலத்தை கணிக்கும் கிரேக் சேப்பல்!

By புதுவை புதல்வன்
January 25, 2023, Updated on : Wed Jan 25 2023 06:44:40 GMT+0000
‘கிரிக்கெட்டை ஆளப்போகும் தொழில்நுட்பம்’ - எதிர்காலத்தை கணிக்கும் கிரேக் சேப்பல்!
சர்வதேச அளவில் சுமார் 140 ஆண்டுகளுக்கும் மேலாக கிரிக்கெட் பல்வேறு நாடுகளுக்கு இடையே விளையாடப்படுகிறது. இந்த சூழலில் கிரிக்கெட்டின் எதிர்காலம் இந்த டெக் யுகத்தில் எப்படி இருக்கும் என்பதை கணித்துள்ளார் முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் கிரேக் சேப்பல்.
  • +0
    Clap Icon
Share on
close
  • +0
    Clap Icon
Share on
close
Share on
close

கிரிக்கெட் விளையாட்டு கடந்த 16ம் நூற்றாண்டில் இருந்தே விளையாடப்பட்டு வருகிறது. இங்கிலாந்தின் தென் கிழக்கு பகுதியில் உதயமான இந்த விளையாட்டு இப்போது உலக அளவில் பிரசித்தி பெற்றுள்ளது. சர்வதேச அளவில் சுமார் 140 ஆண்டுகளுக்கும் மேலாக கிரிக்கெட் பல்வேறு நாடுகளுக்கு இடையே விளையாடப்படுகிறது.


இந்தச் சூழலில் கிரிக்கெட்டின் எதிர்காலம் இந்த டெக் யுகத்தில் எப்படி இருக்கும் என்பதை கணித்துள்ளார் முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் கிரேக் சேப்பல். 


இதனை அண்மையில் ‘தி சிட்னி மார்னிங் ஹெரால்டு’ பத்திரிகையில் கட்டுரையாக அவர் எழுதி இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராகவும் சேப்பல் பணியாற்றி உள்ளார். ஆஸ்திரேலிய அணியை கேப்டனாகவும் வழிநடத்தி உள்ளார். அவர் தனது கட்டுரையில் தெரிவித்துள்ளது.. 

cummins

டெக் யுகத்தில் கிரிக்கெட்

‘மாற்றம் வாழ்வின் சட்டங்களில் ஒன்று. கடந்த காலத்தையும், நிகழ்காலத்தையும் மட்டுமே பார்த்து கொண்டிருப்பவர்கள் எதிர்காலத்தை இழக்க நேரிடும்,’ என முன்னாள் அமெரிக்க அதிபர் ஜான் எஃப் கென்னடியின் மேற்கோளுடன் இந்த கட்டுரையை சேப்பல் ஆரம்பிக்கிறார். 


கிரிக்கெட் விளையாட்டு அறிமுகமான காலத்திலிருந்து தற்போது வரையில் எண்ணில் அடங்கா பல மாற்றங்களை கண்டுள்ளது. அதில் முக்கியமானது லிமிடெட் ஓவர் பார்மெட் கிரிக்கெட்.


பிற விளையாட்டுகளில் இப்படி மூன்று பார்மெட்டுகள் இருக்க முடியுமா என்ன? கிரிக்கெட்டின் இந்த வேரியண்ட் நிச்சயம் பிற விளையாட்டுகளுக்கு பொறாமையை ஏற்படுத்தலாம். 


தொழில்நுட்பம் இந்த விளையாட்டில் ஏற்படுத்த உள்ள தாக்கங்கள் என்ன? 


ட்ரோன், ரோபோ, ஏஐ (செயற்கை நுண்ணறிவு), ரியல் டைம் என தொழில்நுட்பம் சார்ந்த உறவு இந்த விளையாட்டில் வரும் நாட்களில் இணைய உள்ளது. ஏற்கனவே ஹாக்-ஐ, ஹாட் ஸ்பாட், ஸ்னிக்கோ போன்றவை நடுவர்களின் முடிவில் துல்லியத்தை சேர்ந்துள்ளன. இதற்கு 4கே மற்றும் 5கே கேமராக்களின் வரவு பலம் சேர்க்க உள்ளன. இப்படியாக பல தொழில்நுட்பத்தின் தகவமைப்பு இதனை அடுத்த கட்டம் நோக்கி நகர்த்திக் கொண்டு செல்ல உள்ளது. 


குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் தொழில்நுட்ப வரவு என்பது மேலும் சுவாரசியத்தை சேர்க்கும் என நம்புகிறேன். அங்கொன்றும் இங்கொன்றுமாக உருவாகி வரும் இன்றைய இ-ஸ்போர்ட்ஸ் யுகத்தில் கிரிக்கெட் விளையாட்டு முன் எப்போதும் இல்லாத அளவுக்கு அதிவேகமாக மாற்றம் கண்டு வருவதை பார்க்க முடிகிறது. 


தொழில்நுட்ப ரீதியாக மேம்படுத்தப்பட்ட ஸ்மார்ட் பந்துகள், பேட்டில் வைக்கப்பட்டுள்ள சென்சார்கள் மூலம் சேகரிக்கப்படும் தரவுகள் நிச்சயம் வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு நிகழ் நேர செயல்பாட்டை கவனிக்க உதவும். இதோடு ட்ரோன்களும் கைகோர்க்கலாம். 

greg

எதிரணி வீரர்கள் திறனை பிரதிபலிக்கும் வகையில் ரோபோக்கள் பயன்படுத்தப்படலாம். வீரர்கள் புதிய யுக்திகளை வகுக்கவும், தங்கள் ஆட்டத்திறனை மேம்படுத்தவும் வெர்ச்சுவல் ரியாலிட்டி பயன்பாட்டுக்கு வரலாம். 


மேலும், செயற்கை நுண்ணறிவு பயன்பாடு ஒரு அணியின் மற்றும் வீரர்களின் பலம், பலவீனங்களை அறிந்து கொள்ள உதவலாம். பந்து மற்றும் பேட்டின் தரத்தை மேம்படுத்த தொழில்நுட்பம் பெரிதும் உதவலாம். அடுத்த 20 ஆண்டுகளில் செயற்கை Turf பயன்பாடு பொதுவாகலாம்.


அது முதலில் டி20 கிரிக்கெட்டில் இருந்து தொடங்க வாய்ப்புள்ளது. இது இந்த விளையாட்டை பல்வேறு இடங்களில் விளையாட உதவும். குறிப்பாக இதன் மூலம் கிரிக்கெட் பிரபலமில்லாத நாடுகளில் இதற்கு புதிய சந்தை வாய்ப்பு உருவாகலாம். 

ஒளிபரப்பில் புதுமை: பார்வையாளர்களுக்கு விருந்து

கிரிக்கெட் விளையாட்டின் ஒளிபரப்பில் புதுமை ஏற்படும். மைதானத்தில் கிடைக்கும் தொழில்நுட்ப வசதிகளின் வழியே பார்வையாளர்களுக்கு புதுவித அனுபவம் கிடைக்கலாம். அது குறிப்பிட்ட வீரரை பின்தொடர்வதில் தொடங்கி கேமரா ஆங்கிளை தேர்வு செய்வது, வெர்ச்சுவல் ரியாலிட்டி மூலம் தங்கள் மனம் கவர்ந்த கிரிக்கெட் வீரர்களுடன் ஒப்பீடு செய்வது என நீளும். 

women cricket

தொழில்நுட்பத்தில் மகளிர் கிரிக்கெட் முன்னோடி

மகளிர் கிரிக்கெட்டின் வளர்ச்சியை வைத்து பார்க்கும் போது முதலில் இந்த தொழில்நுட்பத்தை ஏற்றுக் கொண்டு, பயன்படுத்துவதில் மகளிர் கிரிக்கெட் முன்னோடியாக இருக்கும் என என்னால் கணிக்க முடிகிறது. மகளிர் ஐபிஎல், சம ஊதியம் போன்றவை அதற்கு வலு சேர்க்கிறது.


இதில் சில வந்த வேகத்தில் செல்லலாம். இந்த மாற்றங்கள் எல்லாம் கிரிக்கெட்டில் சுவாரசியத்தை சேர்க்கலாம். இப்படியாக கிரிக்கெட்டில் தொழில்நுட்பத்தின் தாக்கம் இருந்தாலும் இதில் நேருக்கு நேர் பலப்பரீட்சை செய்வது மனிதர்கள்தான் என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். அவர்கள் ஆட்டத்தில் ஏற்படுகின்ற அழுத்தம்தான் இந்த விளையாட்டின் அழகு. 


அவர் சொல்வது போல கிரிக்கெட் உலகம் காண உள்ள தொழில்நுட்ப மாற்றத்தை வரும் நாட்களில் பார்க்கலாம். அதுவரை காத்திருப்போம்.  


Edited by Induja Raghunathan