ஒரு லட்டு ரூ.1.5 லட்சம்; விநாயக சதுர்த்தி விழாவில் நடந்த 'ஓ மை கடவுளே' சம்பவம்!
விநாயகர் சதுர்த்தி நாடு முழுவதும் கொண்டாட்டப்பட்ட நிலையில், மதுரையிலுள்ள உசிலம்பட்டி பகுதியில் விநாயகர் சதுர்த்தி அன்று விநாயகருக்கு படைக்கப்பட்ட லட்டு ஒன்று ரூ.1 லட்சத்து 51 ஆயிரத்துக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளது.
சுற்றுசூழலுக்கு ஏற்ற விநாயகர் சிலை, விலையுயர்ந்த விநாயகர் சிலை, விநாயகருக்கு பிரம்மாண்ட லட்டு, மெக சைஸ் கொலுக்கட்டை என இந்தாண்டு விநாயகர் சதுர்த்தி நாடு முழுவதும் கொண்டாட்டம், குதுாகலம் என கோலாகலமாக பல சிறப்பான சம்பவங்களுடன் நிறைவடைந்தது. அந்த வரிசையில், மதுரையிலுள்ள உசிலம்பட்டி பகுதியில் விநாயகர் சதுர்த்தி அன்று விநாயகருக்கு படைக்கப்பட்ட லட்டு ஒன்று ரூ.1 லட்சத்து 51 ஆயிரத்துக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டு ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
நாடு முழுவதும் கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தி விழாவில், விநாயகருக்கு படைக்கப்படும் லட்டு ஏலத்தில் விடப்படுவது வழக்கம். இந்த லட்டினை ஏலத்தில் எடுப்பதற்கு மக்கள் பெரும் ஆவலுடன் போட்டா போட்டி போடுகின்றனர். ஏனெனில், லட்டினை ஏலத்தில் பெறுபவருக்கு அந்த ஆண்டு செல்வ செழிப்போடு வளமாக இருக்கும் என்பது மக்களின் நம்பிக்கை.
அதனாலே, ஆங்காங்கே விநாயகர் சதுர்த்தியில் படைக்கப்பட்ட லட்டின் ஏலம் பிரபலமாக உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பல மாநிலங்களில் விநாயகர் சதுர்த்தி முடிந்தவுடன் இந்த ஏலம் விடப்படுகிறது.
அந்த வகையில், மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள மலைப்பட்டி கிராமத்தில் விநாயக சதுர்த்தி விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. விநாயகருக்கு பிரசாதமாக படைக்கப்பட்ட லட்டினை, சிலையின் கையிலே வைத்து வழிப்பட்டுள்ளனர். விநாயக சதுர்த்தி கொண்டாட்டம் முடிந்தநிலையில், சிலையினை அருகில் உள்ள கண்மாயில் கரைப்பதற்கு முன்னதாக, விநாயகரின் கையிலிருந்த லட்டினை ஏலம் விட்டுள்ளனர்.
பலரும் போட்டிக் கொண்டு ஏலம் கேட்டநிலையில், அப்பகுதியை சேர்ந்த மூக்கன் என்பவர் ரூ1 லட்சத்து 51 ஆயிரத்துக்கு லட்டினை ஏலத்தில் எடுத்து ஆச்சரியப்படுத்தியுள்ளார். ஏலத்தில் எடுக்கப்பட்ட லட்டு பொதுமக்கள் அனைவருக்கும் வழங்கப்பட்டுள்ளது.
இதே போல், ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தி அன்று படைக்கப்படும் லட்டு ஏலத்தில் விடப்படும் என்று ஊர் பெரியவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், இந்தாண்டு ஏலத்தில் வெற்றிப் பெற்ற மூக்கனுக்கு அடுத்தாண்டு விநாயகர் சதுர்த்தியின் போது 1 பவுன் தங்க மோதிரம், 10 வேட்டி, 5 புடவைகள் பரிசாக வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.
இதென்ன பிரமாதம், இதைவிட 'ஓ மை காட்' என சொல்ல வைத்தது கடந்தாண்டு ஏலம். ஏனெனில், ஏலத்தின் மதிப்பு ரூ.1 கோடியே 26 லட்சம். ஆனால், இங்கில்லை தெலுங்கானாவின் பந்தலகுடா ஜாகிர் பகுதியிலுள்ள ரிச்மண்ட் வில்லாஸ் குடியிருப்பில் விநாயகர் சதுர்த்தி பண்டிகையின் ஒரு பகுதியாக லட்டுக்கான ஏலம் விடப்படுகிறது.
கடந்தாண்டு ஏலத்தில் லட்டு ஆனது மலைக்க வைக்கும் வகையில் ரூ.1 கோடியே 26 லட்சத்துக்கு ஏலம் போனது. இதன்மூலம், அதற்கு முன்னதாக ரூ.65 லட்சத்துக்கு எடுக்கப்பட்ட ஏல சாதனையை முறியடித்தது. ஏலத்தில் இருந்து திரட்டப்பட்ட பணம் முழுமையாக பள்ளிகள், சுகாதாரம் மற்றும் அரசு சாரா நிறுவனங்களுக்கு உள்ளிட்ட தொண்டு நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படுவதாக விழாவின் ஏற்பட்டாளர்கள் தெரிவிக்கின்றனர். 5 கிலோ எடைக் கொண்ட லட்டினை குடியிருப்பில் வசிக்கும் பெண்கள் குழு ஒன்று சேர்ந்து நிதி சேர்த்து ஏலத்தில் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.