அந்த மனசு தான் சார் கடவுள்...! கொடையுள்ளம் கொண்ட கோவை தம்பதியின் உதவி!
அரசு மருத்துவமனைக்கு தக்க நேரத்தில் உதவிய கோவை தம்பதி!
சில நாட்களுக்கு முன் கோயம்புத்தூர் ராம்நகர் பகுதியைச் சேர்ந்த 45 வயதுக்கும் மேற்பட்ட ஒரு தம்பதியினர் சிங்காநல்லூரில் உள்ள இஎஸ்ஐ மருத்துவமனைக்கு தடுப்பூசி எடுத்துக்கொள்ள சென்றுள்ளனர். அங்கு சென்றபோது, மருத்துவமனையில் வெயிலின் கொடுமையால் கொரோனா நோயாளிகள் சந்திக்கும் சிரமங்களை பார்த்திருக்கின்றனர்.
இதைப் பார்த்த உடனே வீட்டிற்கு சென்ற தம்பதியினர் தங்களிடம் இருந்த நகைகளை எடுத்துக்கொண்டு அதை அடகு கடையில் 2.20 லட்சம் ரூபாய்க்கு அடகு வைத்த அவர்கள், அந்த பணத்தில் 100 மின் விசிறிகளை வாங்கிக்கொண்டு மீண்டும் சிங்காநல்லூரில் உள்ள இஎஸ்ஐ மருத்துவமனைக்கு வந்துள்ளனர்.
இந்த முறை மருத்துவமனை டீன் ரவீந்திரனை சந்தித்த தம்பதியினர் கொரோனா நோயாளிகளின் படும் கஷ்டத்தை பார்த்ததாகவும், அவர்களுக்கு உதவும் வகையில் மின்விசிறிகள் வாங்கியதாகவும் கூறியுள்ளனர்.
மேலும், இந்த உதவிக்காக தங்களைப் பற்றிய விவரங்களை வெளியிடவேண்டாம் என்றும் கோரிக்கை விடுத்து தம்பதியினர், மின்விசிறிகளை மருத்துவமனை டீனிடம் கொடுத்துள்ளனர். தம்பதியினர், நகைகளை அடகு வைத்து மின்விசிறிகளை வாங்கியிருப்பதை அறிந்த டீன் ரவீந்திரன், மருத்துவமனையின் தேவைக்கேற்ப, மின்விசிறியை மட்டும் எடுத்துக்கொண்டு மீதமுள்ளவற்றை தம்பதியினடரிமே கொடுத்து கொஞ்ச நகைகளையாவது திருப்பிக்கொள்ளுங்கள் என அறிவுறுத்தியுள்ளார்.
ஆனால், அதனை தம்பதியினர் வாங்க மறுத்துள்ளனர். தாங்கள் வாங்கிவந்த மின்விசிறிகள் நோயாளிகளுக்கு பயன்படவேண்டும் என்பதில் இருவரும் உறுதியாக இருந்துள்ளனர். பின்னர், இந்த விவகாரம் கலெக்டர் கவனத்துக்கு எடுத்துச் செல்லப்பட, அவரும் தம்பதியினரிடம் பேசியிருக்கிறார்.
ஆனால் இருவரும் தங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக இருக்க, அவர்களின் அன்பை புரிந்துகொண்ட அரசு அதிகாரிகள், தம்பதியிடமிருந்து மின்விசிறிகள் பெற்றுக்கொண்டனர். சக மனிதனின் துன்பத்தை கண்டு உதவிய தம்பதியினர் குறித்து செய்தி வெளியாக, அவர்களை பலரும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
டிஎஸ்பி அர்ஜுன் சரவணன், தம்பதி இருவரையும் வெகுவாக பாராட்டிய இருக்கிறார். அவர் வெளியிட்டுள்ள பதிவில்,
“அந்த மனசு தாங்க கடவுள்... நகைகளை அடகு வைத்து அரசு மருத்துவமனைக்கு உதவிய கோவை தம்பதியினர். நோயாளிகள் காற்று வசதி பெற ஏதுவாக ரூ.2 இலட்சத்து 20 ஆயிரம் ரூபாய் மதிப்பில் 100 மின் விசிறி வாங்கிக் கொடுத்த கொடையுள்ளம். #அன்புசூழ்உலகு," என்று பதிவிட்டுள்ளார்.