காலி பிளாஸ்டிக் பாட்டில் கொடுத்தால் ஒரு டம்பளர் தண்ணீர் இலவசம்...!
சேலத்தை தொடர்ந்து திருச்சியிலும் காலியான பிளாஸ்டிக் பாட்டிலை கொடுத்தால், ஒரு கப் தண்ணீர், இலவசமாக செல்போன் சார்ஜ், மேலும் பல சலுகைகள் தரும் நவீன இயந்திரம் பொறுத்தப்பட்டுள்ளது.
நவீனம், நாகரீகம் என தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மனிதயினம் புதுபுது கண்டுபிடிப்புகளை உருவாக்கி வருகிறது. அவ்வாக்கங்கள் மனிதனின் வாழ்வினை மேம்படுத்திய அதேவேளையில், இயற்கையை சீரழிக்கவும் மறக்கவில்லை. ஆம், ஒவ்வொரு கண்டுபிடிப்பின் பயன்பாட்டுக்கு பின்பு, மனிதஇனம் கொடுந்தீயவிளைவை இப்பூவுலகிற்கு கொடுத்து வருகிறது. அவ்வகையில், அன்றாடவாழ்வில் பல்வேறு அவதாரங்களில் அத்தியாவசிய தேவைகளுள் ஒன்றாகிப் போன பிளாஸ்டிக், சூழலுக்கு ஏற்படுத்தும் கேடு அலப்பரியது.
அதனால், மனிதன் அதே டெக்னாலஜியை கொண்டு அதற்கு தீர்வும் காண பல கண்டுபிடிப்புகளையும் கண்டுப்பிடித்து வருகிறான். அப்படி, தூக்கியெறியும் தண்ணீர் பாட்டில்களை சேகரிப்பதற்காக கண்டுபிடிக்கப்பட்ட ‘பிளாஸ்டிக் பாட்டில் அரவை இயந்திரம்’ தமிழகத்தில் முதன் முறையாக சேலம் புதிய பேருந்துநிலையத்தில் வைக்கப்பட்டு வரவேற்பு பெற்ற நிலையில், திருச்சியிலும் நிறுவப்பட்டுள்ளது.
சேலத்தைச் சேர்ந்த ’குப்பைக்காரன்’ அமைப்பின் நிறுவனர்களுள் ஒருவரான பரணீதரன் மற்றும் அவருடைய நண்பர்கள் ரஞ்சித், தாம்சன் மார்ட்டின் ஆகிய மூவரின் முயற்சியில் உருவாகியதே இந்த அரவை இயந்திரம்.
சேலம் மாநகராட்சியின் துணையோடு, கண்டுபிடிக்கப்பட்டுள்ள இயந்திரத்தினுள், ஒரு முறை பயன்படுத்திவிட்டு தூக்கியெறியும் காலியான பிளாஸ்டிக் பாட்டில்களை உள்ளிட்டு பட்டனை அமுக்கவேண்டும். உள்ளே செல்லும் பாட்டிலானது இயந்திரத்தினுள் மறுசுழற்சிக்கு ஏற்றவாறு சுக்கு நூறாக உடைக்கப்படும். இயந்திரத்திற்குள் 250 மில்லி முதல் 2.25 லிட்டர் வரையிலான காலியான பிளாஸ்டிக் பாட்டில்களை உள்ளிடலாம். மேலும், காலியான பிளாஸ்டிக் பாட்டிலை போட்டவுடன், இயந்திரத்தில் கொடுக்கப்பட்டுள்ள பட்டன்களை அழுத்தி 5 வகையான சலுகைகளை இலவசமாக பெற முடியும். அதன்படி,
5 நிமிடம் இலவசமாக, மொபைல் போன்களுக்கு வேகமாக சார்ஜ் செய்துகொள்ளும் வசதி, 5 நிமிட ஸ்லோ சார்ஜிங், 300 மில்லி சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், தானமாகக் கொடுத்தல் மற்றும் தள்ளுபடி கூப்பன்களைப் பெறும் வசதி என ஐந்து ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதில், ஏதாவது ஒரு பட்டனை அழுத்தி, ஐந்து இலவச வசதிகளில் ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
சேலம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ள இயந்திரத்தின் உருவாக்கலுக்குப்பின் மூன்று நபர்களின் ஒன்றரை ஆண்டு உழைப்பு இருக்கிறது. பள்ளி மாணவர்களான தாம்சன், ரஞ்சித் மற்றும் பரணீ ஆகிய மூவருக்குமே சூழல் சார்ந்து தொழில் செய்ய வேண்டும் என்ற நீண்டநாள் கனவை ‘ட்ராப் அண்ட் ட்ரா’ என்ற நிறுவனத்தை அமைத்து நினைவாக்கிக் கொண்டனர்.
“என் பெயர் ரஞ்சித். நான் தாம்சன், பரணீ எல்லோரும் ஸ்கூல் ப்ரெண்ட்ஸ். இரண்டு வருஷத்துக்கு முன்பு சேலத்தில் அதிகப்படியான மக்கள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். அதற்கு சாலைகளில் உள்ள கழிவுநீர் தொட்டிகளில் தண்ணீர் தேங்கியது மிகப் பெரிய காரணமாக இருந்தது. என்னனு பாத்தா... கழிவுநீர் குழாய்களில் பிளாஸ்டிக் பாட்டில்கள் சிக்கியதே அடைப்புக்குக் காரணமாக இருந்தது. சுற்றுசூழலுக்கு நன்மை அளிக்கும் தொழில் செய்யனும் தான் எங்களுடைய எண்ணமும். முதல் படியாய், பிளாஸ்டிக் பாட்டில்களை மறுசுழற்சிக்கு அனுப்பும் விதமாக இந்த இயந்திரத்தை வடிவமைத்தோம்” என்கிறார்.
முதலில் பிளாஸ்டிக் பாட்டில்களை மட்டும் சேகரிக்கும் மிஷினாக வடிவமைத்தவர்கள், பின் அரவை இயந்திரமாக மாற்றியுள்ளனர். அதே போல், இயந்திரத்தில் இணைக்க பல ஆப்ஷன்களை இணைத்தல், பின் நீக்கல் என ஒன்றரை ஆண்டுகள் உழைத்து இந்த இயந்திரத்தை வடிமைத்துள்ளனர்.
“நோ புட் வேஸ்ட்’ அமைப்பின் நிறுவனரும் எங்க ஸ்கூல் ப்ரெண்ட் தான். அந்த அமைப்பு சம்பந்தமாக சேலம் கமிஷனரை சந்தித்து பேசியபோது, கமிஷனர் வழங்கிய யோசனை தான் இது. மும்பையில் இதே போன்று இயந்திரம் நிறுவப்பட்டுள்ளதாகவும், அதே இயந்திரத்தை நம் மக்களுக்கு பயன்படும் வகையில் வடிவமைக்குமாறு கூறினார். மும்பையில் வாட்டர் பாட்டில்கள் உட்செலுத்தினால், பேடிஎம் கூப்பன்கள் கிடைக்கும் வண்ணத்தில் இயந்திரம் அமைக்கப்பட்டுள்ளது. நம்மூர் மக்கள் எல்லோருக்கும் பேடிஎம் கூப்பன்கள் பயனுள்ளதாக இருக்காது.
இயந்திரத்தால் மண்ணுக்கு பலன் சேர்வதைக் காட்டிலும், மக்களை பிளாஸ்டிக் பாட்டில்களை தூக்கிவீசக்கூடாது, இப்படி தான் பயன்படுத்த வேண்டும் என்ற பழக்கத்துக்கு கொண்டுவர என்னசெய்ய வேண்டும் என்பதில் அதிக கவனம் செலுத்தினோம். இதற்காக சேலம் பஸ் ஸ்டாண்டில நாலஞ்சு நாள் நைட், பகலா பேருந்து நிலையத்தில் தங்கியிருந்து மக்களின் அதிகப்பட்ச தேவை என்ன என்று ஆராய்ந்தோம். குடிநீரும், செல்போன் சார்ஜும் மக்களுக்கு அதிகம் தேவைப்படுகிறது என்பதை உணர்ந்து, அந்த ஆப்ஷன்களை இணைத்தோம்,”
என்று இயந்திரம் உருவாக்கம் பற்றி பகிர்ந்தார் பரணீ. மக்கள் மத்தியில் நன்வரவேற்பு பெற்ற இயந்திரத்தை நிறுவ தனியார் கல்லூரிகளும், சில நிறுவனங்களும் முன்வந்து ஆர்டர் கொடுத்துள்ளனர் என்றார் அவர்.
“பாட்டில்கள் மட்டும் சேகரிக்கும் மிஷினின் விலை1.5 லட்ச ரூபாய், உடைத்து தூளாக்கும் இயந்திரத்தின் விலை ரூ2 லட்சம். இயந்திரத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததில், திருச்சி மாநகராட்சி 5 மிஷின்களையும், வி-கார்டு நிறுவனம் மற்றும் ஓசூரில் இருந்தும் ஆர்டர்கள் வந்துள்ளன. சேலம் பேருந்து நிலையத்தில் இயந்திரம் வைக்கப்பட்ட முதல் நாளே 80பாட்டில்கள் கலெக்ட் ஆகியது. இப்போது 15 நாட்கள் ஆகிறது. 1,400பாட்டில்கள் தூளக்கப்பட்டு மறுசுழற்சிக்கு அனுப்பப்பட்டு குடமாக மறுஉருவமும் பெறவுள்ளன,” என்றார் ரஞ்சித்.
பிளாஸ்டிக் பாட்டில் அரவை இயந்திர உருவாக்கலுக்கு முன்னதாக அவர்களது ‘ட்ராப் அண்ட் ட்ரா’ நிறுவனம், டாய்லெட் பின்னூட்டம் அளிக்கும் இயந்திரத்தையும், மாசு கண்காணிப்பு கருவியையும் உருவாக்கி உள்ளனர்.
நாம் அவசரத்தேவைக்கு காசுக் கொடுத்து வாங்கி குடிக்கும் தண்ணீர்பாட்டிலின் அதிகப்பட்சம் நம்கைகளில் இருக்கும் காலம் ஒரு நாளோ, இரண்டு நாளோ தான். ஆனால், அதை மண்ணுக்கு தூக்கியெறிந்தால் அடுத்த நான்கு தலைமுறையினரின் சுற்றுச்சூழலையும் பாதிக்கும். மண்ணில் மட்குவதற்கு 450ஆண்டுகளாகக் கூடிய பிளாஸ்டிக் பாட்டிலை மறுசுழற்சி செய்வதற்கான சரியான இயந்திரத்தை உருவாக்கிய மூவருக்கும் வாழ்த்துகள்!