1 மாத்திரை ரூ.103; இந்தியாவின் முதல் கொரோனா மருந்து அறிமுகம்!
இந்தியாவில் கோவிட்-19 சிகிச்சைக்காக அனுமதியளிக்கப்பட்டுள்ள முதல் வாய்வழி மருந்து FabiFlu என்கிற பிராண்டின்கீழ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள Favipiravir.
க்ளென்மார்க் மருந்து நிறுவனம் கோவிட்-19 வைரஸின் லேசான முதல் மிதமான பாதிப்பு கொண்ட நோயாளிகளின் சிகிச்சைக்காக FabiFlu என்கிற பிராண்டின்கீழ் Favipiravir என்கிற மருந்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த மாத்திரை ஒன்றின் விலை 103 ரூபாய்.
200 கிராம் என்கிற அளவில் கிடைக்கக்கூடிய இந்த மருந்து 34 மாத்திரைகள் கொண்ட அட்டையாக கிடைக்கும். இதன் விலை 3,500 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று க்ளென்மார்க் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கோவிட்-19 சிகிச்சைக்காக அனுமதியளிக்கப்பட்டுள்ள முதல் வாய்வழி மாத்திரை FabiFlu என்கிற பிராண்டின்கீழ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள Favipiravir மட்டுமே என்று இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது மருத்துவரின் பரிந்துரைச் சீட்டின்படி கொடுக்கப்படும். முதல் நாள் 1,800 மில்லி கிராம் அளவை இரண்டு முறையாக எடுத்துக்கொள்ளவும் அதன் பிறகு 14 நாட்கள் வரை 800 மில்லி கிராம் அளவை இரண்டு முறையாக எடுத்துக்கொள்ளவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இந்த மருந்தினை இமாச்சலப்பிரதேசத்தின் பட்டி பகுதியில் உள்ள தொழிற்சாலையில் இந்நிறுவனம் தயாரித்து வருகிறது. வருங்காலத்தில் மருத்துவமனைகளிலும் சில்லறை வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள மருந்து கடைகளிலும் கிடைக்கும் என்று க்ளென்மார்க் தெரிவித்துள்ளது.
இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு கழகம் மும்பையைச் சேர்ந்த இந்நிறுவனத்திற்கு அனுமதியளித்துள்ளது.
“இந்தியாவில் இதுவரை இல்லாத கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வரும் சூழலில் இந்த அனுமதி கிடைத்துள்ளது,” என்று க்ளென்மார்க் மருந்து நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் க்ளென் சல்தான்ஹா அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதுள்ள அழுத்தம் நிறைந்த சூழல் தணியவும் இந்தியாவில் உள்ள நோயாளிக்குச் சிகிச்சையளிக்கவும் FabiFlu உதவும் என்று இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
“நாடு முழுவதும் உள்ள நோயாளிகளுக்கு விரைவாக கிடைப்பதற்காக க்ளென்மார்க் நிறுவனம் அரசாங்கத்துடனும் மருத்துவச் சமூகத்துடனும் இணைந்து பணியாற்றும்,” என்று அவர் குறிப்பிட்டார்.
“இந்த மருந்து கோவிட்-19 தொற்றுக்கு காரணமான SARS-CoV 2 வைரஸுக்கு எதிராக இன்-விட்ரோ சோதனைகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக மருந்தின் அளவு பாதுகாப்பானது. எனவே Favipiravir பணிகளைத் தொடங்க தீர்மானித்தோம்,” என்று க்ளென்மார்க் நிறுவனத்தின் மத்திய கிழக்கு மற்றும் ஆப்ரிக்க செயல்பாடுகளின் தலைவர் சுஜேஷ் வாசுதேவன் ஆன்லைன் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
மேலும் இது வாய்வழியாக கொடுக்கப்படும் மருந்து என்பதால் கூடுதல் பலன் கிடைக்கும்.
இந்தியாவில் தற்போதுள்ள அவசரச் சூழலைக் கருத்தில் கொண்டு உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்துதலுக்கான அனுமதி விரைவாக வழங்கப்பட்டுள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே சிகிச்சைக்கு முன்பு ஒவ்வொரு நோயாளியிடமும் இந்த மருந்து குறித்து விவரித்து அவர்களது சம்மத்தை பெற்ற பின்னரே இந்த மருந்து பயன்படுத்தப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நீரிழிவு, இருதய நோய் போன்ற இணை நோய்கள் உள்ள கோவிட்-19 நோயாளிகளுக்கு லேசான முதல் மிதமான அறிகுறிகள் தென்பட்டால் Favipiravir பயன்படுத்தலாம் என்று க்ளென்மார்க் தெரிவித்துள்ளது.
இதனால் வைரஸ் சுமை நான்கு நாட்களில் குறையும் என்றும் கூறப்படுகிறது.
Favipiravir காரணமாக லேசான முதல் மிதமான கோவிட்-19 அறிகுறிகள் கொண்ட நோயாளிகளிடம் 88 சதவீத முன்னேற்றம் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. ஜப்பானில் 2014-ம் ஆண்டு முதல் இன்ஃப்ளுயென்சா வைரஸ் தொற்று சிகிச்சைக்கு Favipiravir பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
தகவல்: பிடிஐ