இந்தியாவில் கோவிட் தடுப்பூசி மருந்து பரிசோதனை அக்டோபரில் வாய்ப்பு!
இந்தியாவில் தடுப்பூசி கண்டுபிடிக்கும் ஆய்வுகள் முடிந்து அக்டோபர் மாதம் மனிதர்கள் மீது பரிசோதனை செய்யப்படும், என இந்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக செயல்படும் தடுப்பூசி இந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் மனிதர்கள் மீது பரிசோதனை செய்து பார்க்கப்பட வாய்ப்புள்ளதாக இந்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் விஜயராகவன் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தடுப்பூசிகளை மனிதர்கள் மீது பரிசோதனை செய்வதற்கு முன்பு ஆரம்பக்கட்ட ஆய்வுகள் முடிக்கப்படவேண்டியுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தடுப்பூசி தொடர்பான ஆய்வுகளில் ஒரு குழு ஈடுபட்டுள்ளது. அக்டோபர் மாதத்தில் ஆரம்பக்கட்ட ஆய்வுகள் நிறைவு பெறும் என எதிர்பார்க்கிறோம். அதன் பிறகு மனிதர்கள் மீது பரிசோதனை செய்யப்படும்,” என்று அவர் தெரிவித்துள்ளார்.
இந்தத் தடுப்பூசி கண்டுபிடிக்கும் ஆய்வில் ஈடுபட்டுள்ள நிறுவனம் அல்லது குழுவின் பெயரை அவர் குறிப்பிடவில்லை. அதேபோல் மற்றொரு குழுவினரும் புரதம் சார்ந்த கண்டுபிடிப்பிலும் ஈடுபட்டுள்ளனர். இது பிப்ரவரி மாதம் சோதனைக்குத் தயாராகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணிகள் உள்நாட்டில் மட்டுமல்லாது வெளிநாடுகளுடன் இணைந்தும் மேற்கொள்ளப்படும் என விஜயராகவன் தெரிவித்துள்ளார்.
சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியா, ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்துடன் இணைந்து கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடத் தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. இந்தத் தடுப்பூசி குரங்குகள் மீது பரிசோதனை செய்யப்பட்டது. இந்த சோதனை தோல்வியடைந்தாலும் தீவிர நோய்களைக் குறைக்க உதவுவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வு குறித்து விஜயராகவனிடம் கேள்வியெழுப்பட்டபோது இது பார்ப்பவர்களின் கண்ணோட்டத்தைப் பொறுத்தது என்று பதிலளித்தார்.
மேலும் எந்த நிறுவனம் முதலில் தடுப்பூசி கண்டுபிடிக்கிறது என்பது முக்கியமல்ல. கொரோனா வைரஸ் தொற்று தொடர்ந்து தீவிரமாக பரவிவரும் இன்றைய சூழலில் சிறந்த தடுப்பூசியைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் பல நிறுவனங்கள் ஈடுபடலாம் என்றும் குறிப்பிட்டார்.
அதுமட்டுமின்றி தடுப்பூசிகள் விலங்குகள் மீது குறைவாக செயல்படவும் மனிதர்களை அதிகம் பாதுகாக்கவும் வாய்ப்புண்டு என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கொரோனா வைரஸ் பரவலின் வீரியம் சற்றும் குறையாமல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் தடுப்பூசி விரைவில் கண்டுபிடிக்கப்படவேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
தகவல் உதவி: தி இந்து