Brands
YSTV
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Yourstory
search

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

Videos

ADVERTISEMENT
Advertise with us

ஆன்லைனில் ஆர்டர், பில்லிங், டெலிவரி செய்ய சில்லறைக் கடைகளுக்கு உதவும் GoFrugal!

சில்லறைக் கடைகள் ஆன்லைனில் ஆர்டர்கள் பெற்று நேரடியாக வாடிக்கையாளர்களுக்கு பொருட்களை டெலிவர் செய்ய உதவும் இரண்டு ஆப்’களை வரும் செப்டம்பர் மாதம் வரை 6 மாதங்களுக்கு இலவசமாக வழங்குகிறது இந்நிறுவனம்.

ஆன்லைனில் ஆர்டர், பில்லிங், டெலிவரி செய்ய சில்லறைக் கடைகளுக்கு உதவும்  GoFrugal!

Friday May 22, 2020 , 4 min Read

கோவிட்-19 காரணமாக பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டதால் பொதுமக்களின் அத்தியாவசியத் தேவைகளை சில்லறை வர்த்தகக் கடைகள். அதாவது நம் வீட்டு அருகில் உள்ள சின்ன கடைகள் தான் நம் தேவையை பூர்த்தி செய்து வருகிறது.


இந்த நோய் தொற்று எளிதாக ஒருவரிடம் இருந்து மற்றவர்களுக்குப் பரவி விடுவதால் அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்குக் கடைகளுக்குச் செல்லும் மக்கள் சமூக இடைவெளியைப் பின்பற்றவேண்டும். எனவே சில்லறை வர்த்தகக் கடைகள் விற்பனையில் மட்டுமல்லாமல் வாடிக்கையாளர்களின் பாதுகாப்பை உறுதிசெய்வதிலும் கவனம் செலுத்தவேண்டியுள்ளது.


இந்தச் சூழலில் சில்லறைக் கடைகளுக்கு தொழில்நுட்பம் கொண்டு தீர்வளிக்கிறது ‘கோஃப்ரூகல்’ (GoFrugal) நிறுவனம். இந்நிறுவனம் இந்தியாவில் உள்ள 5,000-க்கும் அதிகமான சில்லறை வர்த்தகக் கடைகள் டிஜிட்டலில் செயல்பட உதவியுள்ளது.


இன்று கோவிட் காரணமாக வர்த்தகம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் கோஃப்ரூகல் நிறுவனம் சில்லறை வர்த்தகக் கடைகளுக்கு உதவுவதில் தீவிர முனைப்புடன் உள்ளது. இக்கடைகள் 2020-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 30-ம் தேதி வரை ஆறு மாதங்களுக்கு இலவசமாகப் பயன்படுத்திக்கொள்ளும் வகையில் இரண்டு செயலிகளை வழங்கியுள்ளது.


பொதுமுடக்க காலத்தில் சில்லறைக் கடைகள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வணிகத்தை மேம்படுத்திக்கொள்ள உதவுவதற்காக கோஃப்ரூகல் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்து யுவர்ஸோரியுடன் பகிர்ந்துகொண்டார் கோஃப்ரூகல் சிஇஓ மற்றும் நிறுவனர் குமார் வேம்பு.

1

கோஃப்ரூகல் சிஇஓ மற்றும் நிறுவனர் குமார் வேம்பு.

அவருடனான உரையாடலின் தொகுப்பு இதோ:


யுவர்ஸ்டோரி: Gofrugal சில்லறை வர்த்தகக் கடைகளுடன் எத்தகைய தொழில்நுட்பச் சேவைகள் வழங்குகிறது?


குமார் வேம்பு: 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சில்லறை வர்த்தகக் கடைகள் எங்களது சேவைகளைப் பயன்படுத்தி வருகிறது.

இந்தக் கடைகள் பில்லிங் முதல் இருப்புநிலை வரை அனைத்து தேவைகளுக்கும் எங்களது தீர்வுகளை பயன்படுத்துகின்றனர். அத்துடன் அவர்களது இருப்புக் கணக்கு, கொள்முதல்கள், வாடிக்கையாளர்களை வகைப்படுத்துதல், சலுகைகள் வழங்குவது போன்ற செயல்பாடுகளை நிர்வகிக்கவும் இந்த மென்பொருள் உதவியுள்ளது.

கோவிட்-19 தொற்று பரவுவதற்கு முன்பு சில்லறை வர்த்தகக் கடைகளுக்காக நாங்கள் 2 செயலிகளை அறிமுகப்படுத்தினோம். முதலாவது ஆப்; ஆன்லைன் ஆர்டர்களைப் பெறுவதற்காக அவர்களுக்கான பிரத்யேக செயலி. புதிய வாடிக்கையாளர்களைக் கொண்டு வர இந்தச் ஆப் உதவும். வாடிக்கையாளர்களிடம் பெறப்பட்ட ஆர்டர்களை முறையாக டெலிவர் செய்ய இரண்டாவது ஆப் உதவும்.


யுவர்ஸ்டோரி: பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்ட பிறகு சில்லறை வர்த்தகக் கடைகளின் பிரச்சனைகளுக்கு தீர்வுகாண என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது?


குமார் வேம்பு: பொதுமுடக்கம் அறிவிக்கப்படுவதற்கு முன்பே எங்கள் வாடிக்கையாளர்களுக்கு 24X7 சேவையளிக்க எங்களது செயல்பாடுகள் அனைத்தையும் டிஜிட்டல்மயமாக்கிவிட்டோம். மக்கள்தொகை அதிகமுள்ள இந்தியா போன்ற நாடுகளின் மூலை முடுக்குகளை மின் வணிகம் சென்றடைவது சாத்தியமில்லை. இதனால் சில்லறை வர்த்தகங்களில் ஈடுபடும் சிறு கடைகள் அத்தியாவசியமானதாகிறது.


மளிகை மற்றும் உணவுப் பிரிவின் ஒட்டுமொத்த வர்த்தகங்களுடன் ஒப்பிடுகையில் மின் வணிகங்களின் அளவு மிகவும் குறைவு. பெரும்பாலான மின் வணிக விற்பனைகள் பெங்களூரு, டெல்லி, சென்னை, மும்பை, கொல்கத்தா, ஹைதராபாத் ஆகிய ஆறு மெட்ரோ நகரங்களிலேயே மேற்கொள்ளப்படுகிறது. எனவே சில்லறை வர்த்தகக் கடைகளின் திறன் மேம்பட உதவவேண்டும் என்று எண்ணினேன்.

இந்தக் கடைகள் ஆன்லைனில் ஆர்டர்கள் பெறவும் நேரடியாகத் தொடர்புகொள்ளாமல் வாடிக்கையாளர்களுக்கு பொருட்களை டெலிவர் செய்யவும் உதவும் வகையில் இரண்டு ஆப்’களை 2020 செப்டம்பர் மாதம் வரை ஆறு மாதங்களுக்கு இலவசமாக வழங்கத் தீர்மானித்தோம்.

யுவர்ஸ்டோரி: சில்லறை வர்த்தகக் கடைகளுக்கு எதற்காக இலவசமாக சேவைகளை வழங்கத் தீர்மானித்தீர்கள்?


குமார் வேம்பு: எத்தனையோ நவீன மின் வணிக நிறுவனங்கள் செயல்பட்டாலும் ஊரடங்கு அமலில் உள்ள இன்றைய சூழலில் சிறு கடைகளே விற்பனையில் முக்கிய பங்கு வகிக்கிறது. இ-காமர்ஸ் நிறுவனங்களால் பல்வேறு பகுதிகளைச் சென்றடைய முடியவில்லை. கோவிட்-19 தொற்று பரவுவதற்கு முன்பேகூட பெரிய மின் வணிக நிறுவனங்கள் சில்லறை வர்த்தக நிறுவனங்களில் முதலீடு செய்வதைக் கவனித்தோம்.

வாடிக்கையாளர்களை எளிதாகச் சென்றடைய முடிவது, தனிப்பட்ட முறையில் நேரடியாக அணுக முடிவது, கடன் வசதி போன்றவை சில்லறை வர்த்தகத்தில் ஈடுபடும் கடைகள் சிறப்பாகச் செயல்படுவதற்கு முக்கியக் காரணங்களாகக் கருதப்படுகிறது.

சில்லறை க் கடைகளுக்கு முறையான மாற்ற மேலாண்மையில் நிபுணத்துவம் இருப்பதில்லை. அதிக நேரமும் உழைப்பும் இல்லாமல் மாற்றங்களுக்கேற்ப தகவமைத்துக்கொள்ள எளிமையான தொழில்நுட்பம் அவசியமாகிறது.


இந்தக் கடைகளின் உரிமையாளர்கள் நுகர்வோர்களின் தேவைகளைச் சிறப்பாக பூர்த்தி செய்வதில் கவனம் செலுத்துகின்றனர். இதற்கு தொழில்நுட்பத் தீர்வுகளை ஏற்றுக்கொண்டு தங்களை மேம்படுத்திக்கொள்ள விரும்புகின்றனர். கோவிட்-19 பரவும் இன்றைய சூழலில் இந்தக் கடைகள் ஆன்லைன் மூலமாக ஆர்டர்கள் பெறவும் டெலிவர் செய்யவும் நாங்கள் உதவ விரும்பினோம்.


எங்களது செயலி மூலம் சில்லறை வர்த்தகக் கடைகள் 40 முதல் 50 சதவீதம் அதிக ஆர்டர் தேவைகளைப் பூர்த்திசெய்து சிறப்பாக சேவையளிக்க முடியும். அதேபோல் டெலிவரி செயலியானது இந்த வணிகங்கள் புதிய பகுதிகளில் தங்களது சேவைகளை விரிவடையச் செய்ய உதவுகிறது. அதுமட்டுமின்றி டெலிவரி செய்யும் திறன் இரட்டிப்பாகவும் உதவுகிறது. ஆர்டர் மற்றும் டெலிவரிகளை நிகழ்நேரத்தில் கண்காணிக்க முடிவதால் டெலிவர் செய்யும் திறன் மேம்படுகிறது.

2


ஆப் குறித்த தகவல்கள்:


(i)      OrderEasy ஆப்: ஆன்லைன் சில்லறை வர்த்தக ஆர்டர்களுக்கானது. வாடிக்கையாளர்களின் ஆர்டர்கள் தானாகவே ஈஆர்பி-க்கு அனுப்பப்படும். இதனால் சேவை மேம்படும்.

(ii)     GoDeliver ஆப்: டெலிவரி மேலாண்மைக்கான செயலி. டெலிவரிகளை சீரமைப்பது, டெலிவர் செய்யும் ஊழியர்களுக்கு சரியான பாதையைப் பகிர்ந்துகொள்வது, டெலிவரிகளை கண்காணிப்பது, டெலிவரிகளை மாற்றிமைப்பது அல்லது கேன்சல் செய்வது என்பன போன்ற நடவடிக்கைகளை திறம்பட நிர்வகிக்க இது உதவுகிறது.


யுவர்ஸ்டோரி: ஊரடங்கு காரணமாக மிகப்பெரிய ஸ்டோர்கள் தொடர்ந்து மூடப்பட்டுள்ள நிலையில் இந்தியாவில் சில்லறை வர்த்தகக் கடைகளின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்று நினைக்கிறீர்கள்?


குமார் வேம்பு: லாக்டவுன் வாடிக்கையாளர்களை சில்லறை வர்த்தகக் கடைகளுடன் மீண்டும் இணைத்துள்ளது. இதனால் சின்ன கடைகளின் வணிகம் அதிகரித்துள்ளது. இந்தக் கடைகளின் தனிப்பட்ட சேவையை வாடிக்கையாளர்கள் விரும்பத் தொடங்கியுள்ளனர்.

ஊரடங்கின் காரணமாக சில்லறை வர்த்தகக் கடைகள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பாக சேவையளிக்கவும் தங்கள் செயல்பாடுகளை சிறப்பாக நிர்வகிக்கவும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளன.

முக்கியமாக உள்ளூர் வணிகங்களை ஊக்குவிக்கவேண்டும் என்கிற பிரச்சாரம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இதனால் சில்லறை வர்த்தகங்கள் பலனடையும். இந்தியாவில் சில்லறை வர்த்தகக் கடைகளுக்கு சிறப்பான எதிர்காலம் இருப்பதைப் உணரமுடிகிறது.


யுவர்ஸ்டோரி: தற்சமயம் தமிழகத்தில் எத்தனை சில்லறைக் கடைகளுடன் இணைந்து செயல்படுகிறீர்கள்?


குமார் வேம்பு: தற்சமயம் தமிழகத்தில் உள்ள 1500-க்கும் அதிகமான சில்லறை வர்த்தகக் கடைகளுடன் இணைந்து சேவையளித்து வருகிறோம். இதுதவிர நாங்கள் அறிமுகப்படுத்தும் புதிய திட்டங்களில் பலர் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

யுவர்ஸ்டோரி: சில்லறை வர்த்தகக் கடைகள் மக்களை எளிதாகச் சென்றடைய தொழில்நுட்பத் தீர்வுகளை தேடும் போக்கு அதிகரித்துள்ளதா?


குமார் வேம்பு: சில்லறை வர்த்தகக் கடைகள் பல்வேறு வகைகளில் மக்களைச் சென்றடைவதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றன. ஆன்லைன் ஆர்டர்களுக்கான செயலியைப் பயன்படுத்துவது அவர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்துகிறது. இதை எளிதாகப் பயன்படுத்த முடிகிறது. விரைவாக வாடிக்கையாளர்களிடம் பொருட்களைக் கொண்டு சேர்க்கமுடிகிறது. இந்த காரணங்களால் இவர்கள் செயலியை விரும்பி ஏற்றுக்கொள்கின்றனர்.

கோஃப்ரூகல்-ன் 250-க்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் செயலியைப் பயன்படுத்துகின்றனர். ஒவ்வொரு நாளும் 30 முதல் 40% ஆர்டர் அளவு அதிகரித்து வருவதைப் பார்க்கமுடிகிறது. 

யுவர்ஸ்டோரி: நோய் தொற்று வேகமாகப் பரவி பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சூழலில் ஒரு தொழில்முனைவராக என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?


குமார் வேம்பு: கோவிட்-19 மனிதகுல வரலாற்றிலேயே ஒரு முக்கியத் தருணம். கோவிட்-19 தொற்று பரவலுக்குப் பிறகு வர்த்தகமும் வாழ்க்கையும் மிகப்பெரிய அளவில் மாற்றத்தை சந்திக்கும்.


டிஜிட்டல் செயல்பாடுகள், செயற்கை நுண்ணறிவு, கம்ப்யூட்டர் விஷன் போன்ற புரட்சிகள் நமது வாழ்க்கையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவிட்-19 பாதிப்பானது அனைத்துத் துறைகளிலும் தொழில்நுட்பப் பயன்பாட்டை அதிகரிக்கச் செய்யும். இது தற்போதுள்ள வணிகங்களுக்கு மிகப்பெரிய சவாலாக இருப்பினும் தொழில்முனைவோர் வணிகத்தையும் வாழ்க்கையையும் மாறுபட்ட கண்ணோட்டத்தில் பார்ப்பதற்கான மிகப்பெரிய வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. இந்தப் போக்கை விரைவாக ஏற்றுக்கொண்டு அதற்கேற்ப தீர்வளிப்பவர்கள் சந்தையில் சிறப்பாக வெற்றியடைவார்கள்.

வலைதளம்: GoFrugal


கட்டுரையாளர்கள்: இந்துஜா மற்றும் ஸ்ரீவித்யா