குப்பையில் தொலைத்த 1.3 லட்சம் மதிப்பு தங்கச்சங்கிலி: மாற்றுத் திறனாளி பெண்ணின் கண்ணீரைத் துடைத்த துப்புறவு ஊழியர்!
மாற்றுத்திறனாளிப் பெண் ஒருவர் குப்பையில் தவறவிட்ட, ரூ. 1.3 லட்சம் மதிப்புள்ள தங்கச் சங்கிலியை தேடித் தந்து பாராட்டுகளைப் பெற்று வருகிறார் உர்பேசர் சுமீத் ஊழியரான பொம்மாதேவி.
சமீபகாலமாக தங்கப் பொருட்களை பொதுமக்கள் குப்பையில் தவற விடுவதும், அதைத் துப்புரவு பணியாளர்கள் பொறுப்பாகத் தேடித் தரும் சம்பவங்களும் சென்னையில் அதிகரித்து வருகின்றன.
‘நீங்கள் பொறுப்பில்லாமல் தங்கத்தைத் தொலைத்துவிட்டு, எங்களை மீண்டும் குப்பையில் தேடச் சொல்கிறீர்களே’ என்ற சலிப்புணர்வு எதுவும் இல்லாமல், பாதிக்கப்பட்டவர்களின் மனக்கவலையைத் தீர்க்க, மீண்டும் குப்பையில் சல்லடைப் போட்டுத் தேடிப் பொருளை மீட்டுத் தரும் அந்த பணியாளர்கள் சமூகவலைதளப் பக்கங்களில் ஹீரோக்கள் ஆகி விடுகின்றனர்.
அந்தவகையில், தற்போது சென்னை ஸ்ரீனிவாசபுரத்தில் மாற்றுத்திறனாளிப் பெண் ஒருவர் குப்பையில் தவறவிட்ட, ரூ.1.3 லட்சம் மதிப்புள்ள தங்கச் சங்கிலியை தேடித் தந்து பாராட்டுகளைப் பெற்று வருகிறார் உர்பேசர் சுமீத் ஊழியரான பொம்மாதேவி.
ஸ்ரீனிவாசபுரம் 13வது ஜோனில் வசித்து வருபவர் காஞ்சனா என்ற மாற்றுத் திறனாளி. இவர் தனது தங்கச் சங்கிலியை வீட்டுக் குப்பையில் தவற விட்டு விட்டார். தங்கச் சங்கிலி இருப்பது தெரியாமல் அந்தக் குப்பையை, குப்பை சேகரிக்க வந்த வாகனத்தில் கொட்டி விட்டார். பின்னர், வீட்டில் தனது தங்கச் சங்கிலியைத் தேடியபோது தான், அது காணாமல் போனது காஞ்சனாவிற்குத் தெரிய வந்தது.
தேடுதலைத் தொடங்கிய ஊழியர்
நிச்சயம் அது குப்பையோடு குப்பையாகத்தான் வெளியில் சென்றிருக்கும் என நம்பிய காஞ்சனா, உடனடியாக தனது பகுதியில் குப்பை சேகரிக்கும் துப்புரவு பணியாளரான, உர்பேசர் சுமீத்தின் கீழ் இயங்கும், ஆபரேஷன் கிளீன் ஸ்வீப் குழுவின் உறுப்பினரான பொம்மாதேவியிடம் இதுபற்றி சொல்லியிருக்கிறார்.
உடனடியாக களத்தில் இறங்கிய பொம்மாதேவி, சம்பந்தப்பட்ட அந்தத் தெருவில் சேகரிக்கப்பட்ட குப்பைகளில் காஞ்சனாவின் தங்கச் சங்கிலி இருக்கிறதா எனத் தேடியிருக்கிறார். பொம்மாதேவியின் பொறுமை மற்றும் தீவிரமான தேடுதலுக்குப் பின், காஞ்சனாவின் தங்கச் சங்கிலி அந்தக் குப்பையில் இருந்து பத்திரமாக மீட்கப்பட்டது.
காணாமல் போன தனது தங்கச் சங்கிலி மீண்டும் கிடைக்குமோ, கிடைக்காதோ என்ற கவலையில் இருந்த காஞ்சனாவிடம், அந்தத் தங்கச் சங்கிலியை பத்திரமாக ஒப்படைத்துள்ளார் பொம்மாதேவி. இதனால் மகிழ்ச்சி அடைந்த காஞ்சனா, தனது நன்றிகளை பொம்மாதேவியிடம் தெரிவித்துள்ளார்.
சாலையில் கிடந்த பை
சமீபத்தில் இதேபோல், அடையாறு தவறுதலாக குப்பையில் தவறவிட்ட ரூ.1.65 லட்சம் மதிப்புள்ள தங்க நகையை, பத்திரமாக மீட்டு, உர்பேசர் ஊழியரான சி.பாலு அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்தார். அதேநாளில், நீலாங்கரை பகுதியில் பத்மநாபன் என்பவர் சாலையில் தவறவிட்ட பை ஒன்றை, அப்பகுதியில் துப்புரவு பணியில் ஈடுபட்டிருந்த உர்பேசர் ஊழியரான விஜய் என்பவர் கண்டெடுத்து, அதில் இருந்த செல்போன் மூலம் பதம்நாபனைத் தொடர்பு கொண்டு, அவரிடம் பையை பத்திரமாக ஒப்படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
குப்பையில் கிடந்த ரூ.1.65 லட்சம் மதிப்பு தங்கசங்கிலி: உரிமையாளரிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளர்!