குப்பையில் கிடந்த ரூ.1.65 லட்சம் மதிப்பு தங்கசங்கிலி: உரிமையாளரிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளர்!
தவறுதலாக குப்பையில் தவறவிட்ட ரூ.1.65 லட்சம் மதிப்புள்ள தங்க நகையை, பத்திரமாக மீட்டு, அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்த சென்னையைச் சேர்ந்த தூய்மைப் பணியாளர் பாலுவுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
தனக்குச் சொந்தமில்லாத பொருட்கள் சாலையில் அல்லது கேட்பாரற்று கிடந்தால், அதனை தனக்கென எடுத்துக் கொள்ளாமல், உரியவரிடம் ஒப்படைக்க வேண்டும் என எண்ணுபவர்களை விரல்விட்டு எண்ணி விடலாம். அதுவும் தங்கம், வைரம், பணம் உள்ளிட்ட விலையுயர்ந்த பொருட்கள் என்றால், அதனை உரியவரிடம் ஒப்படைக்க நேர்மையான மனம் வேண்டும்.
அதுவும் அப்படிப்பட்ட நேர்மையானவர்கள் ஏழ்மையான நிலையில் இருப்பவர்கள் என்றால், நிச்சயம் அவர்களது நேர்மை கொண்டாடப்பட வேண்டியதுதான். தற்போது அப்படி ஊடகங்களிலும், சமூகவலைதளங்களிலும் கொண்டாடப்பட்டு வருபவர்தான் சென்னையைச் சேர்ந்த சி.பாலு என்ற தூய்மைப்பணியாளர்.
குப்பையில் மின்னிய தங்கம்
அடையாறு பரமேஸ்வரி நகரை சேர்ந்த பாலு, மாநகராட்சியின் அடையாறு மண்டலத்துக்கு உட்பட்ட 174 வார்டில் தூய்மைப் பணியாளராக பணியாற்றி வருகிறார். கடந்த 8ம் தேதி வழக்கம் போல், தனது உர்பேசர் சுமீத் வண்டியில், அப்பகுதியில் உள்ள வீடுகளுக்குச் சென்று குப்பைகளைச் சேகரித்துள்ளார் பாலு. பின்னர் அவற்றை மக்கும் மற்றும் மக்காத குப்பையாக தரம் பிரித்துள்ளார்.
அப்போது, ஒரு வீட்டில் இருந்து பெறப்பட்ட பூக்கள் குப்பையில், தங்கச் சங்கிலி ஒன்று கிடந்ததைக் கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். ஆனால், அந்தக் குப்பை யார் வீட்டில் இருந்து பெறப்பட்டது என்பது தெரியாததால், உடனடியாக இதுகுறித்து தனது கண்காணிப்பாளருக்கு அவர் தகவல் தெரிவித்துள்ளார்.
பின்னர், கண்காணிப்பாளர் மற்றும் சகபணியாளர்களுடன் சேர்ந்து, இது குறித்து அப்பகுதியில் உள்ள வீடுகளில் பாலு விசாரித்துள்ளார். அப்போது, பரமேஸ்வரி நகர் முதல் தெருவை சேர்ந்த காமாட்சி சந்தானம் என்பவர் தனது வீட்டில் தங்கச் சங்கிலி ஒன்று தொலைந்து விட்டதாகத் தேடிக் கொண்டிருப்பது தெரிய வந்தது.
தான் கண்டெடுத்த நகை, காமாட்சிக்கு சொந்தமானது என்பதை உறுதி செய்து கொண்ட பாலு, அதனை அவர்களிடம் பத்திரமாக ஒப்படைத்தார்.
பாலு கண்டுபிடித்துக் கொடுத்த அந்த தங்கச்சங்கிலியின் மதிப்பு ரூ.1.65 லட்சம் எனக் கூறப்படுகிறது. காணாமல் போன நகை மீண்டும் கிடைத்த மகிழ்ச்சியில், பாலுவுக்கு காமாட்சிக் குடும்பத்தினர் தங்களது நன்றிகளைத் தெரிவித்தனர்.
பாலுவின் இந்த செயல் குறித்து மாநகராட்சி அதிகாரிகளுக்கும் தெரியவர, அவர்களும் தங்களது பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர். ஊடகங்கள் வாயிலாக இந்தச் செய்தி மக்களுக்கும் தெரிய வந்ததைத் தொடர்ந்து, பாலுவின் நேர்மையைப் பாராட்டு சமூகவலைதளப் பக்கங்களிலும் அவரது நேர்மையைப் பாராட்டி வருகின்றனர்.
சாலையில் தவறவிட்ட பை
இதேபோல், நீலாங்கரை பகுதியில் பத்மநாபன் என்பவர் சாலையில் தவறவிட்ட பை ஒன்றை, அப்பகுதியில் துப்புரவு பணியில் ஈடுபட்டிருந்த உர்பேசர் ஊழியரான விஜய் என்பவர் கண்டெடுத்துள்ளார். அப்பையில் செல்போன்கள், டெபிட் கார்ட் மற்றும் முக்கியமான சில ஆவணங்கள் இருப்பதைக் கண்ட அவர், அந்த செல்போன் மூலமாகவே உரியவரைக் கண்டுபிடித்து, அவரிடம் அப்பொருட்களை ஒப்படைத்துள்ளார்.
சாலையில் தவறவிட்ட தனது பை, அனைத்து ஆவணங்கள் மற்றும் செல்போனோடு திரும்பக் கிடைத்த மகிழ்ச்சியில், விஜய்க்கு தனது நன்றிகளை நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார் பத்மநாபன்.
மேயர் பாராட்டு
சமீபத்தில்கூட இதேபோல், அடையாறு அருகே வேலாயுதராஜா தெரு, மண்டலம் 13, வார்டு 171-ல் தூய்மைப் பணியாளராக உள்ள ரவி என்பவர் ரூ.2 லட்சத்து 60 ஆயிரம் மதிப்புள்ள 5 சவரன் தங்கச் சங்கிலியைக் குப்பையில் இருந்து மீட்டு, அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்தார். அப்போது அவரை மேயர் பிரியா நேரில் அழைத்து பாராட்டினார்.
அதே போல், அண்மையில், சென்னை விருகம்பாக்கம், ராஜமன்னார் சாலையில் அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வரும் தேவராஜ் என்பவர், தவறுதலாக தொலைத்த ரூ.5 லட்சம் மதிப்புள்ள வைர நெக்லஸை ஓட்டுநரான அந்தோணிசாமி மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
குப்பையில் தொலைத்த வைர நகை; ரெண்டே மணி நேரத்தில் கண்டுபிடித்துக் கொடுத்த துப்புரவுத் தொழிலாளர்!