UPI பயனர்களுக்கு நற்செய்தி; ரிசர்வ் பேங்க் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!
மருத்துவமனை, கல்வி நிலையங்களில் யுபிஐ மூலம் அதிகபட்சமாக ரூ.5 லட்சம் வரை பரிவர்த்தனை செய்ய ரிசர்வ் பேங்க் அனுமதி அளித்துள்ளது.
மருத்துவமனை, கல்வி நிலையங்களில் யுபிஐ மூலம் அதிகபட்சமாக ரூ.5 லட்சம் வரை பரிவர்த்தனை செய்ய ரிசர்வ் பேங்க் அனுமதி அளித்துள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) கவர்னர் சக்திகநாத தாஸ், மருத்துவமனைகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கான யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (யுபிஐ) கட்டண வரம்பை ₹1 லட்சத்தில் இருந்து ₹5 லட்சமாக உயர்த்துவது உட்பட, யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (யுபிஐ) குறித்த பல முடிவுகளை வெள்ளிக்கிழமை அறிவித்தார்.
யுபிஐ வரம்பு அதிகரிப்பு:
நாட்டில் UPI பரிவர்த்தனைகளை மேம்படுத்துவதற்காக இந்திய ரிசர்வ் வங்கி தனது நிதிக் கொள்கை கூட்டத்தில் ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. UPI பணம் செலுத்தும் செயல்முறையை மிகவும் எளிதாக்கியுள்ளது. ஒவ்வொரு மாதமும் UPI பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதற்கு இதுவே காரணமாக அமைந்துள்ளது.
இதனையடுத்து, மருத்துவமனைகள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் UPI பரிவர்த்தனை வரம்பு ரூ.5 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக இந்த வரம்பு ஒரு லட்சம் ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
ரிசர்வ் வங்கியின் கூற்றுப்படி, UPI செலுத்துவதில் இந்தியா உலகில் முதலிடத்தில் உள்ளது. மருத்துவமனைகளில் பில் செலுத்துவதற்கு ஒரு லட்சம் ரூபாய் வரம்பு விதிக்கப்பட்டுள்ளதால், சிரமம் ஏற்படுகிறது. எனவே, வரம்பை அதிகரிக்க ரிசர்வ் வங்கி முடிவெடுத்துள்ளது. அதன்படி, தற்போது மருத்துவமனை மற்றும் கல்வி நிலையங்களுக்கு செலுத்துவதற்கான யுபிஐ பேமெண்ட் ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெரிவித்த ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ்,
“கல்வி மற்றும் சுகாதார நோக்கங்களுக்காக யுபிஐ பரிவர்த்தனையை மேற்கொள்பவர்களுக்கு அதிக அளவில் பணம் செலுத்த உதவும். மீண்டும் மீண்டும் பணம் செலுத்துவதற்கான இ-ஆணைகள் (e-mandates) வாடிக்கையாளர்களிடையே பிரபலமாகிவிட்டது,” எனத் தெரிவித்துள்ளார்.
மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு, இன்சூரன்ஸ் பிரீமியம், கிரெடிட் கார்ட் பில் ஆகியவற்றை செலுத்துவதற்கான யுபிஐ வரம்பும் உயர்ந்த்தப்பட்டுள்ளது. அதாவது, இதற்கு முன்பு ரூ.15,000 இருந்த யுபிஐ வரம்பு தற்போது ரூ.1 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த வரம்பு உயர்வின் மூலமாக வாடிக்கையாளர்கள் மிகவும் எளிதாக தங்களின் கிரெடிட் கார்ட் பில் தொகை, இன்சூரன்ஸ் பிரீமியம் ஆகியவற்றை உரிய நேரத்தில் செலுத்த முடியும். மேலும், மியூச்சுவல் முதலீடுகளை எளிதாக மேற்கொள்ள முடியும் என ஆர்பிஐ தெரிவித்துள்ளது.
வட்டி விகிதத்தில் மாற்றமில்லை:
இதற்கிடையில், இந்திய ரிசர்வ் வங்கி அதன் நிதிக் கொள்கைக் குழு (எம்பிசி) கூட்டத்தில் வட்டி விகிதங்களில் எந்த மாற்றமும் செய்ய வேண்டாம் என்று முடிவு செய்துள்ளது. இதன் காரணமாக வங்கிகளில் பெற்ற கடன் மற்றும் வங்கிகளில் டெபாசிட் செய்யும் வட்டி விகிதத்தில் மாற்றம் ஏற்பட வாய்ப்பில்லை.
ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை 6.5 சதவீதமாக நிலைநிறுத்த முடிவு செய்துள்ளதாக ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார். மேலும், SDF விகிதம் 6.25 சதவீதத்திலும், MSF விகிதம் 6.75 சதவீதத்திலும் தொடரலாம். ரிசர்வ் வங்கியின் இந்த முடிவுக்கு பிறகு, கடன் EMI அல்லது FD மீதான வட்டி விகிதம் அதிகரிக்க வாய்ப்பில்லை.
வளர்ச்சி கணிப்பு உயர்வு:
ரிசர்வ் வங்கி 2023-24 நிதியாண்டிற்கான அதன் வளர்ச்சி கணிப்பை 0.5 சதவீதம் உயர்த்தியுள்ளது. புதிய மதிப்பீட்டில், 2023-24 நிதியாண்டில் நாட்டின் ஜிடிபி வளர்ச்சி 7 சதவீதமாக இருக்கும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. முன்னதாக நடந்த நாணய கொள்கைக்குழு கூட்டத்தில், ரிசர்வ் வங்கி 6.5 சதவீத வளர்ச்சியை கணித்திருந்தது.
நடப்பு 2023-24 நிதியாண்டின் மூன்றாவது காலாண்டிற்கான வளர்ச்சி கணிப்பை 6 சதவீதத்தில் இருந்து 6.5 சதவீதமாக ரிசர்வ் வங்கி உயர்த்தியுள்ளது. நான்காவது காலாண்டிற்கான வளர்ச்சி கணிப்பை 5.7 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக உயர்த்தியது. அடுத்த 2024-25 நிதியாண்டின் முதல் காலாண்டில் 6.7 சதவீதமும், இரண்டாவது காலாண்டில் 6.5 சதவீதமும், மூன்றாம் காலாண்டில் 6.4 சதவீதமும் வளர்ச்சியடையும் என ரிசர்வ் வங்கி கணித்துள்ளது.
பணவீக்க எதிர்பார்ப்புகளில் ரிசர்வ் வங்கி எந்த மாற்றமும் செய்யவில்லை. 2023-24 நிதியாண்டில் சராசரி சில்லறை பணவீக்கம் 5.4 சதவீதமாக இருக்கும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.