'என் முதல் அமெரிக்க பயண டிக்கெட்; என் தந்தையின் ஒரு வருட சம்பளம்’ - சுந்தர் பிச்சை
‘அன்புள்ள வகுப்பு 2020’ என்ற யூட்யூப் நிகழ்ச்சியில், கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை தன் வாழ்க்கைக் கதையை பகிர்ந்து கொண்டார்.
உலகில் உள்ள சாதனையாளர்களின் வெற்றிக்கதைகளை அறிய நாம் எல்லாருக்கும் எப்பொழுதும் ஆர்வம் அதிகமாக இருக்கும். அப்படி அந்த கதையை அவர்களே சொல்லிப் பகிரும் ஒரு நிகழ்ச்சியை யூட்யூப் தொடங்கியுள்ளது.
‘அன்புள்ள வகுப்பு 2020’ (Dear class of 2020) என்ற அந்த நிகழ்ச்சியானது, உலகின் சாதனையாளர்கள் தங்களின் வெற்றிக்கதைகளை அவர்கள் மூலமாகவே கூறவைக்கிறது. இந்த நிகழ்ச்சியில் கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை பேசினார்.
கொரோனா வைரஸ் பாண்டமிக் சமயத்தில், கூகுள் சிஇஒ, சுந்தர் பிச்சை 2020ல் பட்டம் பெறும் இளைஞர்களுக்கு ஒரு சிறப்பு மெசேஜை இந்த நிகழ்ச்சியின் வாயிலாக பகிர்ந்தார்.
“வெளிப்படையாக இருங்கள்... பொறுமை இழக்காது இருங்கள்... நம்பிக்கையுடன் இருங்கள்...” என்றார்.
தன்னுடைய உரையில், தன் வாழ்க்கை அனுபவங்கள் மற்றும் பல விஷயங்களைப் பகிர்ந்தார் சுந்தர் பிச்சை. வாழ்க்கையில் நேர்மறையாக இருப்பது, வளர்ந்த விதத்தை நினைத்துப் பார்ப்பது, சிறு வயதில் சந்தித்த சவால்கள் போன்றவற்றை மறக்காமல் நினைவுக்கூர்ந்தார் பிச்சை.
தமிழகத்தில் பிறந்து, வளர்ந்த சுந்தர் பிச்சை இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் தனது பொறியியல் படிப்பை முடித்து ஸ்டான்போரர்ட் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றார். தற்போது 47 வயதாகும் சுந்தர் பிச்சை, பட்டப்படிப்பை முடித்து தான் அமெரிக்கா சென்றது பற்றி பகிர்கையில்,
“என் அப்பா, தன்னுடைய ஓர் ஆண்டு சம்பளத்தில் என் அமெரிக்க பயணத்துக்கான ப்ளேன் டிக்கெட் வாங்கச் செலவிட்டார். ஸ்டான்போரர்ட் பல்கலையில் படிக்க எனக்குக் கிடைத்த வாய்ப்பிற்கு நான் இப்படித்தான் சென்றேன். அதுவே என் முதல் விமானப் பயணம்,” என்றார்.
அமெரிக்கா சென்றடைந்த தன்னால் அங்கிருந்த செலவுகளுக்கு ஈடு கொடுக்க முடியவில்லை என்றும், ஒவ்வொரு செலவுக்கும் தான் கஷ்டப்பட்டதாக கூறினார்.
“யூஎஸ்-லிருந்து என் வீட்டுக்கு போன் செய்து ஒரு நிமிடம் பேச 2 டாலர் செலவாகும். கல்லூரிக்கு எடுத்துச் செல்ல பை வாங்க நினைத்தேன். அது இந்தியாவில் என் அப்பாவின் ஒரு மாதச் சம்பளத்துக்கு இணையாக இருந்தது,” என்றார்.
தான் சிறு வயதில் தொழில்நுட்பத்தின் அதிக ஆதிக்கம் இல்லாமல் வளர்ந்ததை நினைவுகூர்ந்த சுந்தர், தற்காலக் குழந்தைகள், கணினிகளின் பலவகைகள், அளவுகளில் பயன்படுத்துவதை குறிப்பிட்டார்.
“நான் தொழில்நுட்பத்துடன் வளரவில்லை. 10 வயது வரை போன் பயன்படுத்தவில்லை, நான் அமெரிக்கா வந்தடைந்தே கணினியை தினமும் பயன்படுத்துவதற்கு வாய்ப்பு கிடைத்தது. என் வீட்டில் அப்போது டிவி பெட்டி வந்தபோது வெறும் ஒரு சேனல் மட்டுமே இருந்தது,” என்றார்.
இப்படி தான் பல சூழ்நிலைகளைக் கடந்து இந்த நிலைக்கு வந்திருக்கிறேன் என்றால் அது அதிர்ஷ்டம் என்பதையும் கடந்து தொழில்நுட்பத்தில் தனக்கு இருந்த ஆழ்ந்த ஆர்வமும், தீறா ஆசையும் எனக் கூறினார்.
2004 ஆம் ஆண்டு கூகுள் நிறுவனத்தில் சேர்ந்து, கூகுள் டூல்பார் மற்றும் கூகுள் குரோம் ஆகியவையின் உருவாக்கத்திற்கும் முன்னேற்றத்துக்கும் பெரும் பங்கு வகித்தார் சுந்தர் பிச்சை. அப்படியே படிப்படியாக முன்னேறி 2015 ஆம் ஆண்டு கூகுள் நிறுவனத்தின் சிஇஓ என்ற பதவியை அடைந்தார். 2017 ஆம் ஆண்டு கூகுள் தாய் நிறுவனமாக ஆல்பபெட்டின் இயக்குநர் குழு உறுப்பினராக சேர்ந்து தற்போது அதற்கு சிஇஓ-வாக பொறுப்பேற்றுள்ளார் சுந்தர் பிச்சை என்பது குறிப்பிடத்தக்கது.