Google Trends 2023: கூகுள் தேடலில் இந்தியாவில் இடம் பிடித்த டாப் 10 செய்திகள் எவை?
கூகுள் 2023ம் ஆண்டுக்கான தேடல் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் இந்தியர்களால் அதிக அளவில் தேடப்பட்ட செய்திகள், விளையாட்டு வீரர்கள், பிரபலங்கள், திரைப்படங்கள் உள்ளிட்டவை வெளியிடப்பட்டுள்ளன. இதில் நாட்டையே உலுக்கிய டாப் 10 செய்திகள் குறித்து தற்போது பார்க்கலாம்...
கூகுள் 2023ம் ஆண்டுக்கான தேடல் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் இந்தியர்களால் அதிக அளவில் தேடப்பட்ட செய்திகள், விளையாட்டு வீரர்கள், பிரபலங்கள், திரைப்படங்கள் உள்ளிட்டவை வெளியிடப்பட்டுள்ளன. இதில் நாட்டையே உலுக்கிய டாப் 10 செய்திகள் குறித்து தற்போது பார்க்கலாம்...
இந்தியாவிற்கான ஒரு திருப்புமுனையான ஆண்டில், 2023 உலகளாவிய முன்னணியில் முக்கிய இடத்தைப் பிடித்தது. சந்திரயான் -3 மற்றும் ஜி 20 உச்சிமாநாடு போன்ற முக்கிய நிகழ்வுகள் கூகிளின் பிரபலமான தேடல்களின் பட்டியலில் இடம்பிடித்துள்ளன.
1. சந்திரயான்:
நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக உலகிலேயே முதன் முறையாக இந்தியா Chandrayaan 3 விண்கலத்தை ஏவியது. சந்திரயான் -3 விண்கலன் பூமியை 6 முறை சுற்றி 41 நாட்கள் பயணத்திற்கு பின்னர் நிலவின் தென் துருவத்தில் இறங்கி வரலாற்று சாதனையை படைத்தது.
அமெரிக்கா, ரஷ்யா, சீனாவிற்கு பிறகு 4வதாக நிலவில் விண்கலத்தை தரையிறங்கிய நாடு என்ற பெருமை இந்தியாவிற்கு கிட்டியது. இது உலக நாடுகளின் பார்வையை இந்தியா பக்கம் திரும்பியது. இதனை இந்தியர்கள் சோசியல் மீடியாக்களில் கொண்டாடி தீர்த்தனர். இதனால் சில மாதங்களுக்கு இணையத்தில் சந்திரயான் 3 பற்றிய செய்திகள் அதிக அளவில் தேடப்பட்டன.
சந்திரயான்-3 இன் வரலாற்று வெற்றியானது உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் தலைப்புச் செய்திகளை உருவாக்கியது, நாட்டின் விண்வெளி முயற்சிகளை ஆன்லைன் தேடல்களில் முன்னணியில் வைத்தது.
2. கர்நாடகா தேர்தல் முடிவுகள்:
கடந்த மே மாதம் 10ம் தேதி கர்நாடகா சட்டமன்ற தேர்தல் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. அடுத்து வர உள்ள மக்களவை தேர்தலுக்கான திருப்புமுனை என்பதால், கர்நாடகா சட்டமன்ற தேர்தல் முடிவுகள் மீது அனைவரது கவனமும் திரும்பியது. ஏனெனில், ஆளும் பாஜக மீண்டும் வெற்றியை தக்க வேண்டும் என்ற கட்டாயத்திலும், எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்க கர்நாடக தேர்தல் வெற்றி முக்கியம் என்ற நிலைப்பாட்டுடன் காங்கிரஸும் களம் கண்டன.
விஐபி வேட்பாளர்கள், பிரதமர் மோடி, சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி என தேசிய தலைவர்கள் களமிறங்கி பிரச்சாரம் செய்ததால் இந்த தேர்தலி களைக்கட்டியது. பாஜகவிற்கும், காங்கிரஸுக்கும் இடையே நீடித்த பலத்த போட்டி கர்நாடகா தேர்தல் முடிவுகளை கூகுள் ட்ரண்டிங்கில் 2வது இடம் பிடிக்கும் அளவிற்கு தலைப்புச் செய்தியாக மாற்றியுள்ளது.
3. இஸ்ரேல் போர்:
ரஷ்யா - உக்ரைன் போருக்கு அடுத்தபடியாக இஸ்ரேல் -ஹமாஸ் போர் உலக நாடுகளை அதிர்ச்சி அடைய வைத்தது. 2 மாதங்களை கடந்தும் போர் நீடித்து வருகிறது. இதுவரை 17,700க்கும் மேற்பட்ட மக்கள் இஸ்ரேல் ராணுவத்தால் கொல்லப்பட்டுள்ளனர். பாலஸ்தீனத்தின் பள்ளிகள், மருத்துவமனைகள் மீதும் இஸ்ரேல் ராணுவம் தாக்குதலை நடத்தியதாக வெளியான செய்திகள் உலக மக்களை அதிர்ச்சியின் உச்சியில் ஆழ்த்தியுள்ளன.
தற்போதைய நிலவரப்படி, ஐ.நா.வின் போர் நிறுத்த பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்துள்ளதால், பாலஸ்தீன மக்களின் நிலை மற்றும் போர் நிலவரம் குறித்து மக்கள் இணையத்தில் தொடர்ந்து தேடி வருகின்றனர்.
4. சதீஷ் கௌசிக்:
புகழ்பெற்ற நடிகர், நகைச்சுவை நடிகர், திரைக்கதை எழுத்தாளர், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் சதீஷ் கௌசிக், கடந்த மார்ச் 9ம் தேதி டெல்லியில் மாரடைப்பால் காலமானார். இந்தி திரையுலகில் மறக்கமுடியாத இடம் பிடித்த இவரது இறுதிச்சடங்கு மும்பையில் நடைபெற்றது. இதில் ஏராளமான பாலிவுட் திரை நட்சத்திரங்கள், பிரபலங்கள் பங்கேற்றனர்.
5.பட்ஜெட் 2023:
கடந்த பிப்ரவரி மாதம் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் கடைசி முழு பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இந்திய மக்கள் எதிர்பார்த்தபடியே தனிநபர் வருமான வரி விலக்கு ரூ.3 லட்சமாக அதிகரிப்பு உள்ளிட்ட முக்கிய அறிவிப்புகள் கவர்ச்சிகரமானதாக அமைந்தது.
6. துருக்கி நிலநடுக்கம்:
உலக நாடுகளை உலுக்கக்கூடிய பேரழிவுகள் அவ்வப்போது ஏற்படுவது உண்டு. அந்தவகையில், கடந்த பிப்ரவரி மாதம் 6ம் தேதி அதிகாலை துருக்கி, சிரியாவில் அடுத்தடுத்து ஏற்பட்ட மோசமான நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. ரிக்டர் அளவில் 7.8 புள்ளிகளாக பதிவான இந்த நிலநடுக்கம் ஒட்டுமொத்த துருக்கியையும் உலுக்கியது.
ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் கண் இமைக்கும் நொடியில் தரைமட்டமாகின. சிரியாவையும் விட்டு வைக்காத இந்த நிலநடுக்கத்தின் தாக்கத்தால் 40 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.
7.அதிக் அகமது:
உத்தரபிரதேச முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அதிக் அகமது மற்றும் அவரது சகோதரர் அஷ்ரப் அகமது ஆகியோர் காவல்துறையின் பாதுகாப்பில் இருந்த நிலையில் கொடூரமாக சுட்டுக்கொல்லப்பட்டது பெரும் பரபரப்பை கிளப்பியது. மருத்துவ பரிசோதனைக்காக அழைத்துச்செல்லப்பட்ட நிலையில், இருவரும் சுட்டுக்கொல்லப்பட்டது. அதற்கு பின்னால் உ.பி.யை ஆளும் பாஜக இருப்பதாகவும் எழுந்த குற்றச்சாட்டுக்கள் இந்த இரட்டை கொலையை பரபரப்பான தலைப்புச் செய்தியாக மாற்றியது.
8. மேத்யூ பெர்ரி:
பிரபலமான சிட்காம் பிரண்டஸ் சீரிஸ் மூலம் பிரபலமான, மேத்யூ பெர்ரி கடந்த அக்டோபர் மாதம் 29ம் தேதி திடீரென மரணமடைந்தார். நீச்சல் குளத்தில் சடலமாக அவர் மீட்கப்பட்டதை அடுத்து மாரடைப்பால் இறந்தாரா?, போதைப் பொருள் பழக்கத்தால் மரணமடைந்தரா? என்ற சர்ச்சைகள் கிளம்பியது. இதனால் இவரது மரணம் அதிகமாக தேடப்பட்ட செய்தியாக மாறியுள்ளது.
9. மணிப்பூர்:
மணிப்பூரில் பெரும்பான்மையான மெய்தேய் - சிறுபான்மை குகி சமூக மக்களிடையே வெடித்த வன்முறை காரணமாக பல மாதங்களாக மணிப்பூர் பற்றி எரிந்தது. இத்தருணத்தில் இரண்டு குகி இன பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டு ஊர்வலமாக இழுத்துச் செல்லப்பட்ட கொடூரம் நாட்டையே உலுக்கியது. மேலும், அடுத்தடுத்து பல பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானது தொடர்பான செய்திகள் வெளியாகி பரபரப்பை கிளப்பின.
10.ஒடிசா ரயில் விபத்து:
ஜூன் 2023 இல் ஒடிசா ரயில் விபத்து நாட்டையே உலுக்கியது. பாலசோர் மாவட்டம் பாஹாநகா பஜார் பகுதியில் தண்டவாளத்தில் நின்றிருந்த சரக்கு ரயில் மீதுஷாலிமர் - சென்னை கோரமண்டல் விரைவு ரயில் மோதியது.
மேலும், எதிர் திசையில் வந்த பெங்களூரு - ஹவுரா அதிவிரைவு ரயிலின் கடைசி பெட்டிகளும் விபத்தில் சிக்கி தடம்புரண்டன. இந்த கோர விபத்தில் 295 பேர் உயிரிழந்தனர். 1,100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.