Google Pixel 7 மற்றும் ஸ்மார்ட்-வாட்ச் சந்தையில் அறிமுகம்: விலை, சிறப்பம்சம் என்ன?
இந்த புதிய சாதனங்கள் இந்தியாவிலும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிக்சல் 7 (Pixel 7) சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் மற்றும் பிக்சல் ஸ்மார்ட் வாட்ச்சை (Pixel Smartwatch) சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்துள்ளது கூகுள்.
இந்த சாதனங்களின் விலை ஸ்மார்ட்போன் விற்பனையில் உலக அளவில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஆப்பிள் நிறுவனத்தை காட்டிலும் மலிவு எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் விலை மற்றும் சிறப்பம்சங்கள் குறித்து அறிந்து கொள்வோம்.
சீரிஸ் 7 பிக்சல் போன், ஸ்மார்ட்-வாட்ச்கள் அறிமுகப்படுத்திய கூகுள்
இந்த புதிய சாதனங்கள் இந்தியாவிலும் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது கூகுள் அறிமுகம் செய்துள்ள பிக்சல் 7 சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் டிசைன் மட்டுமே மாறாமல் உள்ளது. மற்றபடி அதில் இடம்பெற்றுள்ள அம்சங்கள் அனைத்தும் முற்றிலும் மாற்றப்பட்டுள்ளது.
இந்த போன்கள் உலக அளவில் ஸ்மார்ட்போன் விற்பனையில் முன்னணியில் இருக்கும் ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்களுக்கு விற்பனையில் கடுமையான சவால் கொடுக்கும் வகையில் அமைந்துள்ளது.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்ற நிகழ்வில் இந்த சாதனங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. பிக்சல் போன்கள் கூகுளின் அண்மையை சாப்ட்வேர் மற்றும் ஆர்டிபிஷியல் இன்டலிஜென்ஸ் சார்ந்த சேவைகளை பயனர்கள் அனுபவிக்கும் வகையில் வடிவமைக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த புதிய சாதனங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
பிக்சல் 7 சீரிஸ் வரிசையில் பிக்சல் 7 மற்றும் பிக்சல் 7 புரோ என இரண்டு ஸ்மார்ட்போன்களை கூகுள் இப்போது அறிமுகம் செய்துள்ளது.
பிக்சல் 7 மற்றும் 7 புரோ: சிறப்பம்சங்கள்
இந்த இரண்டு போன்களும் 5ஜி நெட்வொர்கில் இயங்கும் வகையில் வெளிவந்துள்ளது. பன்ச்-ஹோல் டிஸ்பிளே டிசைனை இந்த சாதனம் கொண்டுள்ளது. இரண்டு போன்களுக்கும் இடையில் உள்ள பிரதான வித்தியாசமே அதன் டிஸ்பிளேவும், திரை அளவும் தான்.
பிக்சல் 7 போன் 6.32 இன்ச் திரையும், 7 புரோ போன் 6.7 இன்ச் திரையும் கொண்டுள்ளது. ஆண்ட்ராய்டு 13 இயங்குதளம், டென்சர் ஜி2 சிப்செட் மற்றும் ஐபி 68 வாட்டர்-ரெஸிஸ்டன்ட் ரேட்டிங்கும் கொண்டுள்ளது.
புரோ மாடல் போனில் பின்பக்கத்தில் மூன்று கேமரா இடம் பெற்றுள்ளது. அதுவே பிக்சல் 7 போனில் பின்பக்கத்தில் இரண்டு கேமரா மட்டுமே இடம் பெற்றுள்ளது. முன்பக்கத்தில் இரண்டு போன்களும் 10.8 மெகாபிக்சல் கொண்ட கேமராவை கொண்டுள்ளன. அதே போல பிக்சல் 7 போனில் 4,355mAh திறன் கொண்ட பேட்டரி உள்ளது. 7 புரோவில் 5,000mAh பேட்டரி உள்ளது.
இந்த போன்கள் வயர்லெஸ் சார்ஜிங் சப்போர்ட்டையும் கொண்டுள்ளன. பிக்சல் 7 மாடலில் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் வசதி உள்ளது. அதுவே 7 புரோ மடலில் 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் வசதி உள்ளது.
இந்தியாவில் பிக்சல் 7 போன் ரூ.59,999-கக்கும், பிக்சல் 7 புரோ போன் ரூ.84,999-க்கும் விற்பனை செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் அதில் அறிமுகம் சலுகையும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் வெளியான ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 14 சீரிஸ் போன்களின் தொடக்க விலை ரூ.79,900 என அதன் வலைதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிக்சல் ஸ்மார்ட் வாட்ச்
வட்ட வடிவில் பிக்சல் ஸ்மார்ட் வாட்ச் வெளிவந்துள்ளது. இரண்டு வேரியண்ட்டுகளில் இது கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் விலை இந்திய ரூபாய் மதிப்பு சுமார் ரூ.28,600 இருக்கும் எனத் தெரிகிறது. இந்த வாட்ச், பிக்சல் போன்கள் மட்டுமல்லாது ஆண்ட்ராய்டு போன்களிலும் இயங்கும் என கூகுள் தெரிவித்துள்ளது. மாறாக ஆப்பிள் நிறுவனத்தின் வாட்ச் சீரிஸ் 8 இந்தியாவில் ரூ.45,900-க்கு கிடைக்கிறது.
iphone14 மற்றும் ஆப்பிள் அறிமுகம் செய்துள்ள புதிய கேட்ஜெட்கள்: Price & Specifications - ஒரு பார்வை!
Edited by Induja Raghunathan