iphone14 மற்றும் ஆப்பிள் அறிமுகம் செய்துள்ள புதிய கேட்ஜெட்கள்: Price & Specifications - ஒரு பார்வை!
Price & Specifications
சர்வதேச அளவில் ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 14 உட்பட சில ப்ரீமியம் கேட்ஜெட்களை ஆப்பிள் ஈவென்ட் 2022-ல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன் விலை மற்றும் சிறப்பம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.
ஆப்பிள் அறிமுகத்திய புதிய கேட்ஜெட்கள்
ஆப்பிள் நிறுவனம்: 1976 வாக்கில் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நிறுவப்பட்டது ஆப்பிள் நிறுவனம். ஸ்டீவ் ஜாப்ஸ், ஸ்டீவ் வோஸ்னியாக் மற்றும் ரொனால்ட் வெய்ன் ஆகியோர் வணிக ரீதியாக இணைந்து இந்த முயற்சியை முன்னெடுத்தனர். ஆப்பிள் நிறுவனத்தின் முதல் தயாரிப்பு ஆப்பிள் 1 கணினி. இதனை வோஸ்னியாக் வடிவமைத்திருந்தார். அடிப்படை கணினி கிட்டாக இது விற்பனை செய்யப்பட்டது.
தொடர்ந்து கணினி மட்டுமல்லாது மொபைல் டிவைஸான ஐபோன், ஐபாட், Wearables அக்சஸரீஸ் என பலவற்றை ஆப்பிள் அறிமுகம் செய்தது. அதன் பின்னால் பல பொறியாளர்களின் உழைப்பு அடங்கியுள்ளது.
ஆப்பிள் நிறுவனம் சர்வதேச அளவில் தனக்கென ஒரு பெயரை நிலை நிறுத்திக் கொண்டது. இதற்குக் காரணம் அதன் தரம் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் எனவும் சொல்லலாம். இன்றும் ஆப்பிள் ஐடி இல்லாமல் ஐபோன்களை அன்லாக் செய்ய முடியாது. அந்த லாக்கை உடைக்க முயன்றாலும் மொபைல் போன் பழுது நீக்கும் சர்வீஸ் வல்லுநர்கள் ஆப்பிள் ஸ்டோரை அணுகச் சொல்வார்கள். இது அதன் பாதுகாப்பு குறித்த ஒரு உதாரணம்.
அதன் காரணமாகவே தனது வாடிக்கையாளர்களை கவரும் வகையில் புதுப்புது மாடல் சாதனங்களை ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் இப்போது சில சாதனங்களை ஆப்பிள் ஈவென்ட் 2022 நிகழ்வில் அறிமுகம் செய்துள்ளது அந்நிறுவனம்.
ஆப்பிள் ஈவென்ட் 2022
கலிபோர்னியாவில் இந்த நிகழ்வு நடைபெற்றது. கடந்த 2019க்கு பிறகு மக்களின் பங்கேற்புடன் இந்த நிகழ்வு நடந்தது. அதற்கு முன்னர் வெர்ச்சுவல் முறையில் கூட்டம் நடந்திருந்தது. இந்தாண்டு விழாவில், ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 8, ஆப்பிள் வாட்ச் SE, ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா, ஏர்பாட்ஸ் புரோ செகண்ட் ஜெனரேஷன், ஐபோன் 14 பிளஸ், ஐபோன் 14, ஐபோன் 14 புரோ, ஐபோன் 14 புரோ மேக்ஸ் போன்ற போன்கள் அறிமுகம் செய்யப்பட்டன. அதோடு, ஆப்பிள் A16 சிப்செட்டும் அறிமுகம் செய்யப்பட்டது.
இந்த சாதனங்கள் அனைத்தும் முந்தைய மாடலுடன் ஒப்பிடும் போது சில மாற்றங்களை பெற்றுள்ளது.
ஐபோன் 14 & 14 பிளஸ்
ஆப்பிளின் வழக்கமான வடிவமைப்பில் இந்த போன் வெளிவந்துள்ளது. நாட்ச் டிஸ்பிளே கொண்டுள்ள இந்த போன் ஐந்து வண்ணங்களில் விற்பனைக்கு வந்துள்ளது. ஐபோன் 14 மாடல் 6.1 இன்ச் திரை அளவை கொண்டுள்ளது. அதுவே ஐபோன் 14 பிளஸ் வேரியண்டை பொறுத்த வரையில் அதன் திரை அளவு 6.7 இன்ச் என்ற அளவில் உள்ளது.
OLED ஸ்க்ரீன் சப்போர்ட் கொண்டுள்ள இந்த சாதனத்தில் A15 பயோனிக் சிப் இடம் பெற்றுள்ளது. பின்பக்கத்தில் இரண்டு கேமரா இடம் பெற்றுள்ளது. அதில் பிரதான கேமரா 12 மெகாபிக்சலை கொண்டுள்ளது. இதே பிக்சல்தான் முன்பக்கத்தில் உள்ள செல்ஃபி கேமராவும் கொண்டுள்ளது. கிராஷ் டிடெக்ஷன் மற்றும் சாட்டிலைட் கனெக்ட்விட்டியை பெற்றுள்ளது இந்த போன். இந்த அம்சம் முதல் இரண்டு ஆண்டுகளுக்கு மட்டுமே என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா மற்றும் கனடாவில் இந்த போன் விரைவில் விற்பனைக்கு வர உள்ளது. படிப்படியாக உலகின் மற்ற பகுதிகளுக்கும் வரும் நவம்பர் முதல் இந்த சாதனங்கள் விற்பனைக்கு கொண்டுவ ரப்படும் என தெரிகிறது.
இந்தியாவில் ஐபோன் 14 விலை ரூ.79,990 மற்றும் ஐபோன் 14 பிளஸ் போனின் விலை 89,999 என எதிர்பார்க்கப்படுகிறது.
ஐபோன் 14 புரோ & 14 புரோ மேக்ஸ்
இந்த 2 போன்களும் சில முக்கிய அப்டேட்களை பெற்றுள்ளது. பில் வடிவிலான பன்ச் ஹோல் டிஸ்பிளே. நோட்டிபிகேஷன்களை அனிமேஷன் வடிவில் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. டிஸ்பிளேவை சுற்றிலும் மெல்லிய பெசல் உள்ளது. ஐபோன் 14 புரோ மாடல் 6.1 இன்ச் திரை அளவை கொண்டுள்ளது. அதுவே ஐபோன் 14 புரோ மேக்ஸ் போனை பொறுத்த வரையில் அதன் திரை அளவு 6.7 இன்ச் என்ற அளவில் உள்ளது.
புரோ மாடல் போனில் A16 பயோனிக் சிப் இடம் பெற்றுள்ளது. முக்கியமாக பின்பக்கத்தில் மூன்று கேமராக்களை இந்த போன் கொண்டுள்ளது. அதில், பிரதான கேமரா 48 மெகாபிக்சலை கொண்டுள்ளது. மற்றும் இரண்டு கேமராக்களும் 12 மெகாபிசலை கொண்டுள்ளன. அதில், ஒன்று சென்சார் கேமரா, மற்றொன்று அல்ட்ரா ஒயிட் கேமரா இடம் பெற்றுள்ளது.
14 புரோ மாடலின் விலை இந்தியாவில் ரூ.1,29,900 மற்றும் 14 புரோ மேக்ஸ் விலை ரூ.1,39,900 என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தவிர வாட்ச்கள் மற்றும் ஏர்பாடும் விற்பனைக்கு வர உள்ளது. இதில் சில மாடல்களுக்கு முன்பதிவும் செப்டம்பர் 9 முதல் தொடங்குகிறது. இதில் ஒவ்வொரு மாடலாக பயனர்களுக்கு ஷிப் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Edited by Induja Raghunathan