TikTok செயலியை நீக்கியது ஆப்பிள் மற்றும் கூகுள்...
மத்திய அரசின் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் உத்தரவின் பேரில், கூகுள் ப்ளேஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் இருந்து Tiktok ஆப் நீக்கப்பட்டது!
ஆபாசமான உள்ளடக்கத்தை கொண்டிருப்பதாக விமர்சனத்திற்கு உள்ளான சர்ச்சைக்குறிய டிக்டாக் (TikTok) செயலியை பிளே ஸ்டோர் மற்றும் ஆப் ஸ்டோரில் இருந்து நீக்குமாறு அரசு உத்தரவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
டிட்டோக் தடை செய்ய வேண்டும் எனும் சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த தடைக்கு உச்சநீதிமன்றம் தடை விதிக்க மறுத்த நிலையில் அரசு சார்பில், மின்னணு மற்றும் தகவல் தொடர்பு அமைச்சகம் இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சீனாவின் பைட்டான்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான டிக்டாக் செயலி பதின்பருவத்தினர் மற்றும் இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ளது. 15 நொடி அளவிலான வீடியோக்களை இசை பின்னணியுடன் எளிதாக உருவாக்க வழி செய்யும் இந்த செயலி, இந்திய இளசுகள் மத்தியிலும் வெகு வேகமாக பிரபலமாகியிருக்கிறது.
எனினும் இந்த செயலி ஏற்படுத்தியுள்ள தாக்கம் குறித்து பலரும் கவலை தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக இந்த செயலி ஆபாச வீடியோக்களை உருவாக்கி பகிர வழி செய்வதாக விமர்சனம் எழுந்துள்ளது. இதனால் இளம் உள்ளங்கள் பாதிக்கப்படும் எனும் குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
இது தொடர்பான மனு ஒன்றை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை, கடந்த 3 ம் தேதி, இந்த செயலிக்கு தடை விதித்தது. இது தொடர்பாக அரசுக்கும் உத்தரவிட்டது. மேலும், இந்த வீடியோக்களை வெளியிடக்கூடாது என ஊடகங்களுக்கு தடை விதித்தது.
இந்த உத்தரவை எதிர்த்து பைட்டான்ஸ் நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்தது. தனது மேடையில் மூன்றாம் தரப்பினரால் பகிரப்படும் வீடியோக்களுக்கு தாங்கள் பொறுப்பு அல்ல என்று நிறுவனம் வாதிட்டது. மற்ற சமூக ஊடகங்கள் போலவே தாங்களும் செயல்படுவதாகவும், இந்த தடை பாரபட்சமானது என்றும் நிறுவனம் வாதிட்டது.
எனினும் உச்சநீதிமன்றம் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்துவிட்டது. இந்த வழக்கு 22ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
இதனிடையே டிக்டாக் செயலியை பிளே ஸ்டோர் மற்றும் ஆப் ஸ்டோரில் இருந்து நீக்குமாறு கூகுள் மற்றும் ஆப்பிள் ஆகிய நிறுவனங்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து டிக்டாக் செயலியை டவுன்லோடு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே டவுன்லோடு செய்தவர்கள் தொடர்ந்து பயன்படுத்தலாம் என்று கூறப்படுகிறது.
டிக்டாக் செயலி தரவிறக்கம் செய்யப்படுவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் விதித்துள்ள தடையை அடுத்து அரசு; கூகுள் மற்றும் ஆப்பிள் ஆகிய நிறுவனங்களுக்கு இந்த செயலியை நீக்க உத்தரவிட்டுள்ளதாக அரசுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிப்பதாக இது தொடர்பான எக்கனாமிக் டைம்ஸ் செய்தி தெரிவிக்கிறது.
சர்ச்சை மற்றும் விமர்சனத்தை அடுத்து டிக்டாக்கில் இருந்து லட்சக்கணக்கான வீடியோக்கள் நீக்க பைட்டான்ஸ் நிறுவனத்தால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.