Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

கலை மூலம் மாணவர்களுக்கு கல்வி ஆர்வத்தை தூண்டும் அரசுப் பள்ளி ஆசிரியர் ஹேமலதா!

பனை, தென்னை, விவசாயக் கழிவுகளைக் கொண்டு கலைப் பொருட்கள் தயாரித்து மாணவர்களிடையே கல்வி மீதான ஆர்வத்தை தூண்டி அவர்களை பள்ளிக்கு வரவழைக்கிறார் அரசுப் பள்ளி ஆசிரியர் ஹேமலதா.

கலை மூலம் மாணவர்களுக்கு கல்வி ஆர்வத்தை தூண்டும் அரசுப் பள்ளி ஆசிரியர் ஹேமலதா!

Wednesday November 30, 2022 , 2 min Read

மன அழுத்தத்தில் இருந்து மாணவர்களை விடுவிக்கவும் தற்கொலை எண்ணத்தை மாற்றி அமைக்கவும் கலைப்பொருள் ஆர்வம் தேவைப்படுகிறது. பாடம் மட்டுமல்லாமல் பாடத்தோடு சேர்த்து கலை ஆர்வமும் இருந்தால் சிறந்த மாணவர்களாக விளங்குவார்கள்.

இதை நன்கு புரிந்து கொண்டதால், பனை, தென்னை, விவசாயக் கழிவுகளைக் கொண்டு கலைப் பொருட்கள் தயாரித்து மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார் அரசுப் பள்ளி ஆசிரியை ஹேமலதா.

Teacher hemalatha

ஆசிரியர் ஹேமலதாவின் முன்னெடுப்புகள்

கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக அரசுப் பள்ளியில் ஆசிரியர் பணி செய்து வருபவர் ஹேமலதா. பல ஆண்டுகளாக தொடர்ந்து மாணவர்களிடையே கல்வித் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த நடனம், ஓவியம் என பல வழிகளில் மாணவர்களோடு தொடர்பில் இருப்பவர்.

கொரோனா பெருந்தொற்று காரணமாக பள்ளி இடைநிற்றல் மாணவர்கள் மற்றும் கல்வியின் மீது அக்கறையை செலுத்தாத மாணவர்கள் இடையே கல்வி ஆர்வத்தை தூண்டும் விதமாக பல முன்னெடுப்புகளை செய்து வருகிறார்.

நெகிழி அல்லாமல் இயற்கை கழிவுப் பொருட்களைக் கொண்டு கலைப்பொருட்கள் செய்து மாணவர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி வருகிறார் ஹேமலதா. கடந்த கொரோனா பெருந்தொற்று காலத்தில் மாணவர்கள் பள்ளிக்கு வர முடியாத சூழ்நிலை இருந்தபோது, அவர்களுக்கான தமிழ் பாடத்தை முழுமையாக வரை ஓவியமாக தீட்டி பென்டிரைவுகளில் மாணவர்களுக்கு இலவசமாக வழங்கியுள்ளார் ஆசிரியர் ஹேமலதா.

10 ஆண்டுகளாக தொடர்ந்து தான் பணியாற்றும் பள்ளியில் தன்னுடைய பாடம் மட்டுமல்லாமல் வகுப்பறையையும் பொதுத் தேர்வுகளில் முழு தேர்ச்சி விகிதத்தை பெற்று வருகிறார் ஹேமலதா.

இவருடைய இந்த பணியை பாராட்டி தமிழக அரசு ’நல்லாசிரியர் விருது’ வழங்கியுள்ளது. மத்திய அரசு பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி மூலமாக பேசும் தொடரில் ஆசிரியை ஹேமலதாவை குறிப்பிட்டு பேசினார்.

crafts

இது பற்றி ஆசிரியை ஹேமலதா கூறும் போது,

”30 ஆண்டுகளாக நான் ஆசிரியர் பணி செய்து வருவகிறேன், தற்போது செஞ்சி அருகே செ.குன்னத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியராக பணியாற்றி வருகிறேன். மாணவர்களிடையே கலை ஆர்வத்தை தூண்டுவதோடு கல்வியிலும் அவர்களுக்கு அதிக நாட்டத்தை ஏற்படுத்தும் முயற்சியிலும் நான் ஈடுபட்டு வருகிறேன். பள்ளியில் இடை நிற்றல் மாணவர்கள், மதிப்பெண் குறைவாக எடுக்கும் மாணவர்களை வீட்டிலிருந்து அழைத்து வந்து பள்ளியில் கல்வி கற்க செய்யும் பெரும்பணியை செய்து வருகிறேன்,” எனத் தெரிவிக்கிறார் ஆசிரியர் ஹேமலதா.

ஒவ்வொரு மாணவனும் ஆசிரியர் வரும்போது கையில் என்ன கொண்டு வருகிறார் என்று எதிர்பார்ப்போடு இருக்கிறார்கள். அப்படி மாணவர்களை ஏமாற்ற நினைக்காமல் தினமும் ஏதாவது ஒரு கலைப் பொருட்களைக் கொண்டு வந்து மாணவர்களிடம் விளக்கி அதை பாடத்தின் ஊடாக மதிப்பீடு செய்கிறேன்.

crafts

தான் மட்டுமல்லாமல் சுற்றி இருக்கிற பகுதியில் உள்ள ஆசிரியர்களும் இதுபோன்று இருக்க வேண்டும் என்று விரும்புகிறார் ஆசிரியர் ஹேமலதா.

மன அழுத்தம் காரணமாக மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வதாகவும் அப்படி தற்கொலை செய்து கொள்கிறவர்களை இது போன்ற கலை ஆர்வத்தினால் ஈர்த்து அந்த முடிவில் இருந்து அவர்களை மாற்றி அமைக்க முடியும் என்று உறுதிபடக் கூறுகிறார் இந்த தன்னலமற்ற ஆசிரியர்.

கட்டுரை: ஜோதி நரசிம்மன்