15 வயதில் துவங்கிய நரை; இன்று அதுவே அடையாளம்: தடைகளை உடைத்த 58 வயது மாடல்!
வாழ்க்கையின் கடைசி கட்டத்தை நெருங்கி, சரும சுருக்கங்களுடன் நரை எட்டிய வயதிலானவர்கள் பலரும் 'ரிட்டையர்மென்ட் வாழ்க்கைக்குகுள் நுழைகயில், 58 வயதான முக்தா சிங்கோ புதிய பரிமாணமடைந்து, ஊராரின் கேள்விகளுக்கு செவி சாய்க்காமல் மாடல் அழகியாக வாழ்க்கையை வென்றுள்ளார்.
திருமணம், குழந்தைகள், தொழில் மைல்கற்கள் என அனைத்தும் வயதுக்கு ஏற்ப நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஒரு வேளை அந்தந்த வயதிற்கான மைல்கற்களை எட்டவில்லையெனில் நீங்கள் சமூகத்தின் முடிவில்லா கேள்விகளுக்கு ஆளாகுவீர்.
அவ்வாறு, வயதாகி முதுமையை எட்டியவுடன் ஒருவர் எவ்வாறு வாழவேண்டும் என்பதற்கு சமூகம் சில நிபந்தனைகளை கட்டமைத்துள்ளது. வாழ்க்கையின் கடைசி கட்டத்தை நெருங்கி, சரும சுருக்கங்களுடன் நரை எட்டிய வயதிலானவருக்கான நிபந்தனை 'ஓய்வு'.
ஆனால், முக்தா சிங்கோ 58 வயதில் தான் புதிய பரிமாணமடைந்து, ஊராரின் கேள்விகளுக்கு செவி சாய்க்காமல் மாடல் அழகியாக வாழ்க்கையை துவங்கியுள்ளார்.
ராஜஸ்தானின் பாரத்பூரைச் சேர்ந்த முக்தா, முதுகலை பட்டம் படித்து முடித்தவுடன் போர் விமானி ஒருவரை திருமணம் செய்து கொண்டார். ஒரு போர் விமானியை திருமணம் செய்து கொண்டதால், முக்தா சிங்கின் தொழில் மற்றும் வாழ்க்கை இலக்குகளுக்கான முன்னுரிமை பின்னுக்கு தள்ளப்பட்டது. ஏனெனில், பணியின் காரணமாக அவரது கணவர் அடிக்கடி இடமாற்றம் செய்யப்பட்டார்.
திருமணத்திற்குப் பிந்தைய அவரது வாழ்க்கையானது குழந்தைகளைப் பெற்றெடுத்தது, அவர்களைப் கவனித்துக்கொள்வது மற்றும் அவரது நோய்வாய்ப்பட்ட தாயைப் பராமரிப்பது என்றே கழிந்தோடியது.
"நான் சிறு வயதிலிருந்தே நன்கு படிக்கும் மாணவி. அப்பாவுக்கு நான் ஐஏஎஸ் ஆக வேண்டும் என்பது விருப்பம். கல்லுாரியில் படிக்கும் போது தான் கணவரை சந்தித்தேன். காதலித்து திருமணம் செய்துக் கொண்டோம். ஏர் போர்ஸில் பணிபுரிவதால், அடிக்கடி டிரான்ஸ்பரில் வெவ்வேறு ஊருகளுக்கு குடிமாறிக் கொண்டேயிருப்போம். டில்லியில் அவர் பணிபுரிந்த போது, செய்திநிறுவனம் மற்றும் மேகசின்களில் ப்ரீலான்ஸராக பணிபுரிந்தேன். முழுநேரமாக பணிபுரியும் வாய்ப்பும், சூழலும் எனக்கு அமையவில்லை.
மியூசிக் மற்றும் ஆர்ட் இவை இரண்டும் தான் என்னுடைய ஹாபி. நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஓவியம் வரைவேன். குழந்தைகளை வளர்ப்பது, உடல்நிலை சரியில்லாமலிருந்த என் அம்மாவை பார்த்து கொள்வது என்றே வாழ்க்கை ஓடியது. டை அடிப்பதைகூட நிறுத்திவிட்டேன்.
பேமிலி டைமில் அதிகம் கவனம் செலுத்துவதை கவனித்த என் பொண்ணு, உங்களை நீங்கள் கவனித்து கொள்வதேயில்லை என்று வருத்தப்பட்டாள். இனிமேல் என்மேல் கவனம் செலுத்துவேன் என உறுதியளித்தேன்" என்று ஹெர்சிந்தகி பத்திரிக்கையிடம் தெரிவித்துள்ளார் அவர்.
முக்தாவிற்கு 15வயதிருக்கும் போதே நரைக்க துவங்கி விட்டது. வயது முப்பதை கடக்கையில் மொத்த முடியும் நரைத்து விட்டது. தொடக்கத்தில் நரைத்த முடிக்கு மருதாணி பூசி மறைத்து வந்தார். பின் டை அடிக்கும் முறை. பின்னாளில் அதுவே அவரது அன்றாட வாழ்க்கையின் ஒரு அங்கமாக மாறியது. அவ்வப்போது சலுானுக்கு சென்று ஹேர் கலரிங் செய்து வந்துள்ளார்.
ஆரஞ்சு நிறத்தில் இருந்து அடர் பழுப்பு, அடர் பழுப்பிலிருந்து கருப்பு நிறம் என ஒரு நிறத்தில் இருந்து மற்றொரு நிறத்திற்கு கூந்தலின் தோற்றம் மாறிக் கொண்டேயிருந்துள்ளது. புதிதாகமுடி வளரும்போது, இந்த சுழற்சி மீண்டும் தொடங்கும்.
இனிமேலும் நரையை மறைக்க வேண்டாம் என்று தோன்றிய போது தான், நரையுடன் இருந்தாலும், வயதைக் காரணம் காட்டி அழகு சார்ந்து உங்களை கவனித்து கொள்வதை ஒதுக்கி வைத்துவிடக் கூடாது என்று மகள் அறிவுறுத்தியுள்ளார். மகளின் அறிவுரையை ஏற்றுக்கொண்ட முக்தா நரை வந்தபின்னும் ஒளிந்துள்ள அழகை வெளியே கொண்டு வரத் துவங்கியுள்ளார்.
உறவினர் ஒருவரின் வீட்டு விசேஷத்திற்கு முக்தா, பிரபலமான பிராண்ட் ஆன அகாரோவிலிருந்து வாங்கிய புடவையை அணிந்து அழகூட்டி சென்றுள்ளார். காம்பிளிமென்ட் அதிகம் கிடைத்ததில், அன்று எடுக்கப்பட்ட புகைப்படங்களை 9 ஆண்டுகளுக்கு முன்பு துவங்கிய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
நரை முடியில் கொட்டிக்கிடந்த அழகால் அப்புகைப்படத்திற்கு லைக்குகள் குவிந்தது. புடவையை விற்றவர்களின் இன்ஸ்டாகிராம் பக்கத்துக்கும் சென்றடைந்தது அப்புகைப்படம். முக்தாவின் பதிவால் அமோகமான வரவேற்பை பெற்றது அகோரோ. வாவ் என்று வியந்த அவர்கள், அவர்களின் தயாரிப்பிற்கு முக்தா சிறந்த மாடலாக இருப்பார் என எண்ணி அவரை அணுகியுள்ளனர். அங்கிருந்து துவங்கியது முக்தாவின் மாடல் பயணம்.
"எனது மருமகள் அகோராவின் புடவைகளில் ஒன்றை அணிந்திருந்தால், அந்த புடவை அவ்வளவு அழகாக இருந்தது. நானும் அந்த புடவையை வாங்கி உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சிற்கு அணிய முடிவு செய்தேன். அன்று, நான் பெற்ற பாராட்டுக்களின் எண்ணிக்கை, அப்புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட என்னை துாண்டியது. அந்த பதிவிற்கு அப்படியொரு நிகழ்வு நடக்குமென எதிர்பார்க்கவில்லை.
"விளம்பர மாடலாக அகாரோ என்னை அணுகிய போது நானெடுத்த முடிவு என் வாழ்க்கையையே மாற்றி போட்ட ஒன்று. இத்தனை ஆண்டுக்கால வாழ்க்கையில் வேறு எங்கும் கிடைத்திராத அன்பையும், ஆதரவையும் பேஷன் துறை எனக்கு அளித்தது," என்கிறார் முக்தா.
அவரது முதல் விளம்பர மாடல் பணியைத் தொடந்து பிரபல ஆடைநிறுவனமான நிக்கோபார், ஆடை வடிவமைப்பாளர் ஸ்வேதா கபூர் மற்றும் ஃபேஷன் பத்திரிக்கையான ஹார்பர்ஸ் பஜார் போன்றவற்றுக்கு மாடலாக மாறினார். முக்தாவுடன் இணைந்து பணியாற்றியுள்ள டெல்லி வடிவமைப்பாளரான அமித் ஹன்ஸ்ராஜ்,
இந்திய பேஷன் துறையில் உள்ள வழக்கத்தைவிட வயது முதிர்ந்த மூத்த மாடல்கள் இடம்பெறுவது விதிவிலக்கான ஒன்றாகும். பொதுவாக 40 அல்லது 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஃபேஷன் துறையில் நுழைவதை நம்மால் காண இயலாது. தனிப்பட்ட முறையில், முக்தா அவரது வயதை அவர் அழகாகவும், அலட்சியமாகவும் கையாண்டிருந்ததுதான் என்னை ஈர்தத்து.
40வது வயதில் ஒரு வடிவமைப்பாளராக மாறிய ஒருவர் என்ற முறையில் நான், அவருடைய கனவுகளைப் பின்தொடர அவருக்கு ஆதரவு அளித்தேன், என்று கூறினார் அவர்.
வாழ்க்கையின் இரண்டாம் இன்னிங்ஸில் ஸ்கோர் செய்து கொண்டிருக்கும் முக்தா, சர்வதேச ஃபேஷன் உலகில் ஜொலிப்பதற்கான வாய்ப்புகளை தேடத் தொடங்கியுள்ளார். இந்தியாவில் உள்ள முதியவர்கள் மாடலிங் செய்வதற்கான வாய்ப்புகளைக் கண்டறிந்தாலும், அவர்களுக்கு பெரும்பாலும் உடல்நலம், காப்பீடு மற்றும் வீட்டு தயாரிப்பு நிறுவனங்களின் விளம்பரப் படங்களுக்கு நடிப்பதற்கான வாய்ப்பு மட்டுமே அளிக்கப்படுகிறது.
58 வயதான கலை ஆர்வலரும், தொழிலதிபராக மாறிய மாடலான ஃபெரோஸ் குஜ்ரால், 57 வயதில் ஃபேஷன் உலகில் நுழைந்த 67 வயதான மருத்துவரும் மாடலுமான கீதா பிரகாஷ் என விரல்விட்டு எண்ணுமளிவிலே மூத்த மாடல்கள் இருக்கிறார்கள்.
"வயதை ரசித்து அனுபவிக்க வேண்டும். உங்கள் கனவை நீங்கள் வாழவில்லையெனில், கண்ணாடியில் நீங்கள் உங்களைப் பார்க்க விரும்பும் விதத்தில் நீங்கள் வாழவில்லையெனில், உங்கள் உரிமையை நீங்கள் இழக்கிறீர்கள்."
ஒரு பெண் அழகாக இருந்தால், அது மோசமானதல்ல. ஒரு பெண் அழகாகவும், பாராட்டப்படுகிறவளாகவும் உணர்ந்தால், அவள் மகிழ்ச்சியாக இருப்பாள். அவள் உள்ளார்ந்து மகிழ்ச்சியாக இருப்பதாலும், மற்றவர்களுக்கு நல்லது செய்ய விரும்புவதாலும் அவள் சமூகத்திற்கும் மக்களுக்கும் நிறைய செய்ய முடியும். பெண் என்பவள் மரியாதையுடன் நடத்தப்பட வேண்டும்" என்று கூறி முடித்தார் அவர்.
ஆங்கிலத்தில்: ரேகா | தமிழில்: ஜெயஸ்ரீ
'கிரேன் முதல் ரோட் ரோலர் வரை' - கனரக வாகனங்களை அநாயசமாக ஓட்டும் 71 வயது ராதாமணி அம்மா!