'கிரேன் முதல் ரோட் ரோலர் வரை' - கனரக வாகனங்களை அநாயசமாக ஓட்டும் 71 வயது ராதாமணி அம்மா!
போர்க்லிஃப்ட், கிரேன், ரோட் ரோலர், டிராக்டர், கன்டெய்னர் டிரக், பஸ், லாரி என 11 கனரக வாகனங்களுக்கான லைசென்ஸ் பெற்று கெத்து காட்டி வருகிறார் ராதாமணி அம்மா! 'வாவ்' என வியக்க வைப்பதுடன் பல பெண்கள் ஓட்டுநர் உரிமம் பெற்று, ஓட்டுநர் துறையில் பயணிக்க வழிவகுத்து கொடுக்கும் அவரின் வாழ்க்கைப் பயணம்...
வாகனம் ஓட்டுவதில் பலருக்கும் பேரார்வம் உண்டு. ராதாமணி அவர்களில் ஒருவர். வயதோ அவருக்கு 71. ஆனால், படுக்கை நேரக் கதைகளை பேரன் பேத்திகளுக்கு சொல்லும் வழக்கமான பாட்டிமா இல்லை அவர். வியக்க வைக்கும் வகையில் 11 வகையான வாகனங்களை ஓட்ட உரிமம் பெற்றுள்ளார். போர்க்லிஃப்ட், கிரேன், ரோட் ரோலர், டிராக்டர், கன்டெய்னர் டிரக், பஸ், லாரி மற்றும் பல வாகனங்களை இயக்க உரிமம் பெற்றுள்ளார். இவை அனைத்திற்கும் ஆதிப்புள்ளி கார் தான்.
கணவரின் வற்புறுத்தலினால், 1981ம் ஆண்டு முதன் முதலில் கார் ஓட்ட கற்றுக் கொண்டுள்ளார். அப்போது அவருக்கு வயது 30.
பறக்க கற்றுக்கொண்ட பின் கால்கள் தரையில் நிற்குமா என்ன!?
ராதாமணி கார் ஓட்ட கற்றுக் கொண்ட பின் அவருக்கு வாகனங்கள் ஓட்டுவதில் அளவற்ற விருப்பம் ஏற்பட்டு, அதன் நீட்சியாய் கனரக வாகனங்களை இயக்க கற்றுக்கொண்டார்.
கேரளாவில் 11 வாகன உரிமங்களைப் பெற்ற முதல் பெண் ராதாமணி அம்மா. இன்று பல பெண்கள் ஓட்டுநர் உரிமம் பெற்று, ஓட்டுநர் துறையில் பயணிக்க வழிவகுத்து கொடுக்கும் ராதாமணியின் வாழ்க்கைப் பயணம்.
கிரேன் முதல் ரோட் ரோலர் வரை ஓட்டும் ராதாமணி
கொச்சி அருகே ஆறுக்குட்டி பகுதியை சேர்ந்த ராதாமணிக்கு மணம் முடிக்கையில் 17வயது. திருமணத்திற்கு பிறகு தான் பத்தாம் வகுப்பு ரிசல்ட்டே கிடைத்துள்ளது. அதுவரை அவருக்கு சைக்கிள் கூட ஓட்டத் தெரியாதாம். அவரது கணவர் டிவி லாலன் 1970ம் ஆண்டுகளில் தோப்பும்பட்டியில் 'ஏ டூ இசட்' எனும் கனரக வாகனங்களை இயக்க கற்றுக் கொடுக்கும் பயிற்சி மையத்தைத் தொடங்கியுள்ளார்.
டிரைவிங் ஸ்கூல் நடத்தும் உரிமையாளர்கள் அவர்கள் கற்றுக் கொடுக்க உபயோகிக்கும் வாகனங்களுக்கு உரிமம் வைத்திருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதற்காக, 1988ம் ஆண்டில் ராதாமணி பஸ் மற்றும் லாரியை இயக்குவதற்கான உரிமத்தை பெற்றுள்ளார். அதனைப் பெற வீட்டிலிருந்து 33கி.மீ தொலைவிலிருந்த கனரக வாகன உரிமம் வழங்கும் அலுவலகத்திற்கு பஸ்சை அவரே ஓட்டிச் சென்றுள்ளார்.
"பஸ்சை ஓட்டிச் சென்ற போது என் கணவரும் என்னுடன் இருந்தார். பஸ் ஓட்ட பயமாலாம் இல்லை. மற்ற வாகனங்களை கற்றுக் கொண்டு எப்படி ஓட்டினேனோ அப்படித் தான் இருந்தது. என் கணவருக்கு நான்கு சக்கர வாகனங்கள் மீது ஆர்வம் அதிகம் என்பதால், முதலில் கார் ஓட்ட கற்றுக் கொண்டேன். பின்னர், டிரைவிங் ஸ்கூல் தொடங்கிய போது, எங்களுக்கு கனரக வாகனங்களுக்கான லைசென்ஸ் தேவைப்பட்டது. அப்படித்தான் நான் கனரக வாகனங்களை இயக்க கற்றுக் கொண்டு லைசென்ஸ் பெற்றேன்.”
கேரளாவில் கனரக வாகன டிரைவிங் ஸ்கூல் முதன் முதலில் நாங்கள் தான் திறந்தோம். எனது பெயரில் ஆரம்பித்ததால், இரண்டு மற்றும் முச்சக்கர வண்டி உரிமங்களை பெறுவதற்கு முன்பாகவே கனரக வாகன உரிமம் பெற வேண்டியிருந்தது.
“ரோட் ரோலர், டிராக்டர், கிரேன் மற்றும் ஃபோர்க்லிஃப்ட் உள்ளிட்ட வாகனங்களுக்கான உரிமங்களை ஒன்றன்பின் ஒன்றாக பெற்றேன்,” என்று இந்தியா டுடேவிடம் பகிர்ந்துள்ளார் ராதாமணி அம்மா.
நான்கு தசாப்தங்களுக்கு முன்பு, அவர் காரை ஓட்டிக்கொண்டு செல்வதைக் கண்டு அக்கம் பக்கத்தினர் பலர் ஆச்சரியப்பட்டனர். பலர் கேலி செய்துள்ளனர். ஆனால், இன்று அவரது நிலையை அறிந்து பலரும் அவரைப் பார்க்க வருகிறார்கள். அவருடைய வாழ்க்கை பலருக்கும் பெரும் உத்வேகமாக மாறியுள்ளது.
2004ம் ஆண்டில் அவரது கணவர் இறந்துவிடவே, அன்று முதல் டிரைவிங் ஸ்கூலை மகன், மகள்களுடன் இணைந்து ராதாமணியே கவனித்து வருகிறார். டிரைவிங் பள்ளியில் மேற்பார்வையாளராக இருந்து வழிநடத்தி, அவ்வப்போது அவரது திறமையை மாணவர்களுக்கு பயிற்றுவிக்க பயன்படுத்தி வருகிறார்.
"வாகனம் ஓட்ட கற்றுக் கொள்வதும், லைசென்ஸ் பெறுவதும் கடினமான விஷயமில்லை. எப்படி ஓட்ட வேண்டும் என்று உங்களுக்கு கற்றுக் கொடுத்துவிடுவர். அவ்வழிமுறைகளை சரியாக பின்பற்றினாலே போதும்,” என்கிறார்.
இருப்பினும், கன்டெய்னர் லாரிகளை ஓட்டிச் செல்வது சற்று சிரமம். குறிப்பாக அவற்றை ரிவெர்ஸ் எடுப்பது சவாலானது. இதுவரை டவர் கிரேன்களை இயக்க முயற்சித்தது இல்லை. டவர் கிரேனில் ஓட்டுநர் அறை சற்று உயரமாக இருக்கும். புடவை அணிந்து ஏறுவது கடினமாக இருக்கும். இதே காரணத்தினாலே நான் சைக்கிள் ஓட்ட கற்றுக் கொள்ளவே இல்லை.
“புடவை அல்லது பாவாடையுடன் சைக்கிள் ஓட்டுவது எளிதல்ல. அன்றைய காலத்தில் லேடிஸ் சைக்கிள் அரிதாகவே இருந்தது. முன்புறம் கம்பி வைத்த சைக்கிளை ஓட்டுவது எனக்கு பிடிக்கவில்லை. டிரைவிங் துறையில் பெண்களுக்கு நிறைய வேலை வாய்ப்புகள் உள்ளன. டிரைவிங் லைசென்ஸ் எடுக்க பல பெண்கள் இன்று வருவது மகிழ்வை அளிக்கிறது," என்று பகிர்ந்தார் ராதாமணி.
கார், பஸ், லாரி என நான்கு சக்கர வாகனங்களை எல்லாம் தொடக்கத்திலே கற்றுக் கொண்ட நிலையில், இரு சக்கர வாகனத்திற்கான உரிமத்தை 1993ம் ஆண்டே பெற்றுள்ளார். ஆனால், அதுவே பின்னாளில் அவரது பேவரைட் வாகனமாகியது. யார் உதவியுமின்றி டூவிலரில் வலம் வரத் தொடங்கியுள்ளார் நம்ம ராதாமணி அம்மா.
ஓட்டுநர் துறையில் பெரும் புரட்சியை ஏற்படுத்திய ராதாமணி அம்மா தற்போது ஆட்டோமொபைல் இன்ஜினியரிங் டிப்ளமோ படிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். வாழ்க்கையின் செகன்ட் இன்னிங்ஸிலும் வெற்றி பெறலாம் என்பதற்கு ராதாமணி அம்மா ஒரு எடுத்துக்காட்டு.
தகவல் மற்றும் பட உதவி : தி இந்து
தமிழகத்தைச் சேர்ந்த இந்தியாவின் முதல் பெண் பஸ் டிரைவர் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்!