இணையத்தில் பெண் பயனர்கள் அதிக்கரிக்க பிராந்திய மொழி உள்ளடக்கமே காரணம்!
இந்தியாவில் இணைய பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில் உள்ளூர் மொழிகளில் உள்ளடக்கம் உருவாக்கப்படுவது அதிகரித்துள்ளதாக உள்ளடக்க தளம் ‘Momspresso' ஆய்வில் தெரிய வந்துள்ளது.
தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளில் 65 சதவீத உள்ளடக்கம் உருவாக்கப்படுவதாகவும், இந்த உள்ளடக்கம் 85 சதவீத பார்வைகளுக்குக் காரணமாக இருப்பதாகவும், பெண்களுக்கான உள்ளடக்க மேடையான மாம்ஸ்பரஸோ (Momspresso.com) தெரிவித்துள்ளது.
இந்தியாவில் இணைய பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், பிராந்திய மொழிகளில் உருவாக்கப்படும் உள்ளடக்கமும் அதிகரித்து வருகிறது. இந்திய உள்ளூர் மொழி இணைய பயனாலிகள் எண்ணிக்கை 2021ம் ஆண்டு வாக்கில் 18 சதவீதம் வளர்ச்சி அடைந்து, 536 மில்லியனாக உயரும் என கூகுள் கேபிஎம்ஜி அறிக்கை தெரிவிக்கிறது.
இந்நிலையில், தனது மேடையில் பிராந்திய மொழிகளில் உருவாக்கப்படும் உள்ளடக்கம் 65 சதவீதமாக இருப்பதாக பெண்களுக்கான உள்ளடக்க உருவாக்க மேடையான மாம்ஸ்பரஸோ (Momspresso.com) தெரிவித்துள்ளது. உள்ளூர் மொழி உள்ளடக்கம் 85 சதவீத பார்வைகளை பெறுவதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆங்கிலம், இந்தி, தமிழ் உள்ளிட்ட 10 மொழிகளில் பயனாளிகள் தங்கள் உள்ளடக்கத்தை உருவாக்கி பகிர்ந்து கொள்ள மாம்ஸ்பரஸோ (Momspresso.com) வழி செய்கிறது. வரி வடிவம், ஆடியோ மற்றும் வீடியோ வடிவில் இந்தத் தளத்தில் உள்ளடக்கத்தை உருவாக்கிப் பகிர்ந்து கொள்ளலாம்.
மாம்ஸ்பிரஸோ நிறுவனம் அண்மையில் நடத்திய ஆய்வில், பிராந்திய மொழிகளில் உருவாக்கப்படும் உள்ளடக்கம் அதிகரித்திருப்பதாக தெரிவித்துள்ளது. இந்த மேடையில், 43 சதவீத பயனாளிகள் இந்தியில் உள்ளடக்கத்தை உருவாக்குவதாகவும், குறிப்பாக பிராந்திய மொழிகளில் உள்ளடக்கம் கணிசமாக அதிகரித்திருப்பதாகவும் இந்த ஆய்வு தெரிவிக்கிறது.
கடந்த 12 மாதங்களில், மராத்தி மொழியில் 7 மடங்கும், இந்தி மொழியில் 3 மடங்கும், தமிழில் 5 மடங்கும் உள்ளடக்க உருவாக்கம் அதிகரித்துள்ளது. இதே காலத்தில், இந்திய மொழி உள்ளடக்கம் 38 சதவீதத்தில் இருந்து 62 சதவீதமாக வளர்ந்துள்ளது.
மேலும், இந்தத் தளத்தில் வலைப்பதிவாளர்கள் பலவித தலைப்புகளில் உள்ளடக்கத்தை உருவாக்கினாலும், உறவுகள், குழந்தை வளர்ப்பு மற்றும் பணி வாழ்க்கை தேர்வுகள் சார்ந்த அம்மாக்களின் வாழ்க்கைப் பதிவுகள் மிகவும் பிரபலமாக இருப்பதாகவும் ஆய்வு தெரிவிக்கிறது.
வீடியோ சார்ந்த உள்ளடக்கம்மும் பிராந்திய மொழிகளில் கணிசமாக அதிகரித்துள்ளது. ஸ்மார்ட்போன்களின் வீச்சு மற்றும் இணைய பயன்பாடு இதற்கு முக்கியக் காரணமாக அமைந்துள்ளது. இந்தத் தளத்தின் மொபைல் செயலி வழியிலான உள்ளடக்கம், 2018ல் 70ம் சதவீத வளர்ச்சி கண்ட நிலையில் 2019ம் ஆண்டில் 94 சதவீத வளர்ச்சி அடைந்துள்ளது.
’பிராந்திய மொழி உள்ளடக்க போக்கை துவக்கத்திலேயே பின்பற்றிய நிறுவனங்களில் ஒன்றாக மாம்ஸ்பிரஸோ திகழ்கிறது. 2017ல் இந்தி மொழி சேவையை அறிமுகம் செய்த பிறகு 8 இந்திய மொழிகளில் சேவையை அறிமுகம் செய்தோம். இந்தியாவில் உள்ளூர் மொழியின் பார்வையாளர்கள் பிரிவில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது,” என்று நிறுவன இணை நிறுவனர் மற்றும் சி.இ.ஓ விஷால் குப்தா கூறியுள்ளார்.
“ 2012ல் வாக்கில் இந்திய மொழி பயனாளிகள் இந்திய இணையப் பயனாளிகளில் 75 சதவீதம் இருப்பார்கள் என எதிர்பார்க்கப்படும் நிலையில் பிராந்திய மொழி உள்ளடக்கத்திற்கான எதிர்கால வாய்ப்பு பிரகாசமாக உள்ளது,” என்றும் அவர் கூறியுள்ளார்.
மாம்ஸ்பிரஸோ ஆய்வில் தெரிய வந்துள்ள மற்ற சுவாரஸ்யமான அம்சங்கள் வருமாறு:
- பிராந்திய மொழிகளுக்கான பார்வைகள் 180 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்தி மொழி உள்ளடக்கம் 65 சதவீத பார்வைகள் கொண்டுள்ளது. தமிழ் மொழி உள்ளடக்கம் 7 சதவீத பார்வைகள் கொண்டுள்ளது.
- ஜெய்பூர், லக்னோ, பாட்னா மற்றும் ஆக்ரா ஆகிய நகரங்களில் பிராந்திய மொழியில் உள்ளடக்க நுகர்வு அதிகமாக இருக்கிறது.
- உள்ளடக்க உருவாக்கத்தில் உத்தரபிரதேசம், மேற்கு வங்கம், தில்லி ஆகியவை முன்னிலையில் உள்ளன.
- 60 சதவீத உள்ளடக்கம் 22 முதல் 35 வயது வரையான பார்வையாளர்கள் நுகரப்படுகிறது.
- வருவாய் உருவாக்கத்திலும் பிராந்திய மொழி உள்ளடக்கத்தின் பங்கு அதிகரித்துள்ளது.
தொகுப்பு : சைபர்சிம்மன்