‘H-1B விசா தடை: சுந்தர் பிச்சை அதிருப்தி; இந்திய ஐடி நிறுவனங்களுக்கு நஷ்டமா?

By YS TEAM TAMIL|25th Jun 2020
வெளிநாடுகளில் இருந்து வந்து அமெரிக்காவில் பணிபுரிவதற்காக வழங்கப்படும் ஹெச்1பி உள்ளிட்ட விசாக்களை நடப்பாண்டு முடியும் வரை நிறுத்திவைக்க அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உத்திரவிட்டுள்ளார்.
Clap Icon0 claps
  • +0
    Clap Icon
Share on
close
Clap Icon0 claps
  • +0
    Clap Icon
Share on
close
Share on
close

கொரோனா வைரஸ் பரவல் உலகையே ஆட்டிப்படைத்துள்ள நிலையில் இதைக் கட்டுப்படுத்துவது, தடுப்பூசி ஆராய்ச்சி, சிகிச்சை மருந்துகள் போன்ற ஆய்வுகளில் மும்முரம் காட்டப்படும் அதேசமயம் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் முயற்சிகளிலும் உலக நாடுகள் தீவிர கவனம் செலுத்தி வருகின்றன.


அந்த வகையில் வெளிநாடுகளில் இருந்து வந்து அமெரிக்காவில் பணிபுரிவதற்காக வழங்கப்படும் ஹெச்1பி உள்ளிட்ட விசாக்களை நடப்பாண்டு முடியும் வரை நிறுத்திவைக்க அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உத்திரவிட்டுள்ளார். அமெரிக்கர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படுவதை உறுதிசெய்யும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 


2019 நிதியாண்டின் ஒட்டுமொத்த 85,000 H1பி விசா விண்ணப்பங்களில் முன்னணி ஏழு இந்திய நிறுவனங்களுக்கான ஹெச்1பி விசா அனுமதி வெறும் 6 சதவீதம் மட்டுமே.

தகவல் தொழில்நுட்பச் சேவை வழங்கும் ஐந்து முன்னணி இந்திய நிறுவனங்கள் ஹெச்1பி விசாவை சார்ந்திராமல் அமெரிக்காவில் அதிகபட்சமாக 45-70 சதவீதம் அளவிற்கு உள்நாட்டு ஊழியர்களையே பணியிலமர்த்தியுள்ளதாக The Goldman Sachs அறிக்கை தெரிவிக்கிறது.


சுவாரஸ்யமாக கிட்டத்தட்ட 2.75 லட்சம் தனிப்பட்ட விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக ஏப்ரல் மாதம் அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவைகள் (USCIS) தெரிவித்துள்ளது.


40,000-க்கும் மேலான ரெஜிஸ்டிரேஷன் அக்கவுண்ட் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் சமர்ப்பிக்கப்பட்டுள்ள விண்ணப்பங்களின் அடிப்படையில் கிட்டத்தட்ட 81 சதவீத பயனாளிகள் இந்தியா (67.7 சதவீதம்) மற்றும் சீனாவைச் (13.2 சதவீதம்) சேர்ந்தவர்களாக இருக்கக்கூடும் என்றும் குறிப்பிடப்படுகிறது.


இந்த நிலையில் அதிபர் ட்ரம்பின் அறிவிப்பு குறித்து பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

“அமெரிக்க பொருளாதாரத்தின் வெற்றியிலும், அமெரிக்கா உலகளவில் தொழில்நுட்ப ரீதியாக முன்னணி வகிக்கவும், வெளிநாடுளைச் சேர்ந்த ஊழியர்கள் முக்கியப் பங்களித்துள்ளனர். அதேபோல் கூகுள் நிறுவனம் இன்றைய நிலையை எட்டவும் இவர்கள் உதவியுள்ளனர்,” என்று அதிபர் ட்ரம்பின் அறிவிப்பைத் தொடர்ந்து சுந்தர் பிச்சை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
1

வெளிநாட்டவர்களுக்கு தொடர்ந்து ஆதரவளிப்பதாக தெரிவித்துள்ள சுந்தர் பிச்சை, வாய்ப்புகள் அனைவருக்கும் பகிர்ந்து வழங்கப்படவேண்டும் என்று குறிப்பிட்டார்.

அதிபர் ட்ரம்ப்பின் நிர்வாகத்தில் எடுக்கப்பட்டுள்ள இந்த சமீபத்திய முடிவைக் கடுமையாக விமர்சித்துள்ள தி லீடர்ஷ்சிப் கான்ஃபிரன்ஸ் மனித உரிமைகள் அமைப்பின் தலைவர் மற்றும் சிஇஓ வனிதா குப்தா வெளிநாட்டினருக்கான விசாவை ரத்து செய்யும் உத்தரவு நிறவெறி, வெளிநாட்டவர்கள் மீதான வெறுப்புணர்ச்சி ஆகியவற்றையே வெளிப்படுத்துகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

கோவிட்-19 பாதிப்பை ட்ரம்ப் நிர்வாகம் முறையாகக் கையாளவில்லை. இதுபோன்ற ஏராளமான தோல்விகளை திசை திருப்பும் விதமாகவே இவ்வாறு நடந்துகொள்கிறார் என்றும் குற்றம்சாட்டியுள்ளார். வெளிநாடுகளில் இருந்து குடியேறும் மக்களுக்கு எதிரான இத்தகைய நடவடிக்கைகளை நீதிமன்றம் தடுத்து நிறுத்தும் என்றும் வனிதா குப்தா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

“திறமைமிக்கவர்களை ஹெச்1பி விசா மூலம் அனுமதிப்பது அமெரிக்கா மென்மேலும் வெற்றியடைய உதவியுள்ளது. வெளிநாட்டவர்களின் திறமையை எவ்வாறு பயன்படுத்திக்கொள்வது என்பதை அறிந்திருப்பது அமெரிக்காவின் பலம்தானே தவிர பலவீனம் அல்ல,” என்று ட்ரம்ப் நிர்வாகத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவின் தொடர்பு அதிகாரியான ஆலிஸ் ஜி வெல்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினரான ராஜா கிருஷ்ணமூர்த்தி கூறும்போது,

“விசா அனுமதியை ரத்து செய்யும் அதிபர் ட்ரம்பின் உத்தரவு எனக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது. நம் சுகாதாரப் பராமரிப்பு அமைப்பு கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக்கு எதிராக போராடுவதற்கும் பொருளாதார மீட்சிக்குத் தேவையான வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கும் உதவும் வகையில் இந்தத் தீர்மானத்தைத் திரும்பப்பெற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்,” என்று தெரிவித்துள்ளார்.

தகவல் உதவி: பிடிஐ