தலைமுடி பொருத்தும் சிகிச்சை கிளினிக் தொடங்கி ரூ.12 கோடி டர்ன்ஓவர் செய்யும் எய்ம்ஸ் மருத்துவர்கள்!
எய்ம்ஸ் டாக்டர்கள் பிரதீப் குமார் சேத்தி மற்றும் அரிகா பன்சால், 2014 ல் நிறுவிய யூஜினிக்ஸ் ஹேர் சயின்சஸ் நிறுவனம் மூலம், ஆண் வழுக்கை, தலைமுடி பொருத்தும் சிகிச்சையை 7,000 பேருக்கு மேல் அளித்துள்ளனர்.
டாக்டர்.அகிரா பன்சால் மற்றும் டாக்டர்.பிரதீப் குமார் தில்லி எய்ம்ஸ் மருத்துவமனை கல்லூரியில் டெர்மடாலஜி மற்றும் வெனிராலஜியில் முதுகலைப் பட்டம் பெற்றனர். தில்லியில் பணிபுரிய வாய்ப்பு இல்லாத நிலையில், தோல் சிகிச்சை மையங்கள் குறைவாக இருந்த ரிஷிகேஷுக்குச் சென்றனர்.
எஸ்.எம்.பி ஸ்டோரியுடன் பேசி, தலைமுடி பொருத்தும் சர்ஜனான, பிரதீப் குமார் சேத்தி, “ரிஷிகேஷ் மற்றும் சுற்றியுள்ள பத்ரிநாத், கேதார்நாத் ஆகிய இடங்களில் வசிக்கும் மக்களுக்கு சேவை அளிக்கும் தலைமுடி கிளினிக் அதிகம் இல்லை. இருவருக்கும் பொருத்தமான வேலை கிடைக்கவில்லை. சருமசிகிச்சை வல்லுனர்களுக்கு இந்த பகுதியில் இருந்த பற்றாக்குறையை கருத்தில் கொண்டு இருவரும் சொந்தமாக தொழில் துவங்க தீர்மானித்தோம்,” என்கிறார்.
இருவரும் இணைந்து 2008ல் ரிஷிகேஷ் மற்றும் டேராடூனில். நேஷனல் ஸ்கின் கிளினிக் துவக்கினர். ஓராண்டு காலத்தில் தலைமுடி பொருத்தும் சிகிச்சைக்கான வரவேற்பு அதிகரிக்கும் போக்கைக் கண்டனர்.
வெற்றிகரமான ஆய்வு மற்றும் பயிற்சிக்கு பிறகு, பிரதீப் மற்றும் அகிரா, ரிஷிகேஷ் மற்றும் டேராடூன் ஆகிய இடங்களில் உள்ளவர்களுக்கு தலைமுடி மாற்று சிகிச்சை அளிக்கத் துவங்கினர். 2014ல், அவர்கள் தங்கள் சிகிச்சை மையத்தை குருகிராம் நகருக்கு மாற்றினர்.
தற்போது, Eugenix Hair Sciences நிறுவனம் ரூ.12 கோடி விற்றுமுதல் ஈட்டுகிறது. உலகம் முழுவதும், 7,000 பேருக்கு மேல் சிகிச்சை அளித்துள்ளது.
பிரதீப் சேத்தியுடனான நேர்காணலில் இருந்து:
எஸ்.எம்.பி ஸ்டோரி: நீங்கள் யூஜினக்ஸ் நிறுவனத்தை துவக்கியது எப்படி? தலைமுடி பொருத்தும் சிகிச்சைக்கான தொழில்நுட்பம் என்ன?
பிரதீப் சேத்தி: சில ஆண்டுகளுக்கு முன் வரை தலைமுடி பொருத்துவது இந்தியாவில் அந்நிய கருத்தாக்கமாக இருந்தது. இதற்கான தொழில்நுட்பம் இருந்தாலும், மக்கள் இந்திய டாக்டர்களை நம்புவதற்கு பதிலாக அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்றனர்.
நானும் அகிராவும், வெளிநாடுகளில் உள்ள சிகிச்சை மையங்களுக்கு சென்று பார்த்தோம், சர்வதேச மாநாடுகளில் பங்கேற்று ஆய்வு செய்தோம். தலைமுடி பொருத்தும் கிளினிக் அமைப்பதற்கு முன் இது தொடர்பான ஆலோசனைகளை வழங்கி வந்தோம். பின்னர் 2014 ல் குருகிராமுக்கு மாறினோம். இந்தியாவில் தரமான தலைமுடி பொருத்தும் சிகிச்சை அளிக்கும் நோக்கத்துடன் நிறுவனத்தை துவக்கினோம். 2017ல் மும்பையில் கிளை அமைத்துள்ளோம்,
எஸ்.எம்.பி.எஸ்: தலைமுடி பொருத்த நீங்கள் பயன்படுத்தும் தொழில்நுட்பம் என்ன?
பிரதீப்: இந்தியாவில் 4,000 பேருக்கு மேல் சிகிச்சை அளித்துள்ளோம். 900 கிரேட்- 6/7 வழுக்கை பிரச்சனைகளுக்கு தீர்வு அளித்துள்ளோம். மேலும், 1,25,00,000 கிராப்ட்களை பொருத்தியுள்ளோம்.
யூஜினிக்ஸ் நிறுவனம், இந்திய டெர்மடாலாஜிஸ்ட் மற்றும் வெனிரலாஜிஸ்ட் சங்கத்தின் அங்கீகாரம் பெற்றுள்ளது. அதிநவீன சிகிச்சை முறைகளை பயன்படுத்துகிறோம். பலவிதமான நுட்பங்களை ஒரே இடத்தில் பெற முடியும்.
ஆண் வழுக்கை, பெண் வழுக்கை, பிறப்புக்கு பின் தலைமுடி உதிர்வு உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு ஆலோசனை வழங்குகிறோம்.
எஸ்.எம்.பி.எஸ்: வாடிக்கையாளர்கள் மற்றும் சமூகத்தின் மீதான உங்கள் சேவையின் தாக்கம் என்ன?
பிரதீப்: யூஜினிக்ஸ் நிறுவனம், உலக அளவில், 7,0000 பேருக்கு மேல் சிகிச்சை அளித்துள்ளது. ஆஸ்திரேலியா, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளைச்சேர்ந்தவர்களும் இதில் அடங்கும்.
தலைமுடி சிகிச்சை பொருத்த சிகிச்சையை நாடும் வாடிக்கையாளர்கள் வெளிப்படை தன்மையை எதிர்பார்க்கின்றனர். டிஜிட்டல் ஊடகம் வாயிலாக, இந்த செயல்முறை குறித்த விழிப்புணர்வை அளிக்கிறோம்.
எஸ்.எம்.பி.எஸ்: இதில் உள்ள சவால்கள் என்ன? போட்டியை எப்படி எதிர்கொள்கிறீர்கள்?
பிரதீப்: தலைமுடி பொருத்த சிகிச்சையில் விழிப்புணர்வு மிகவும் முக்கியம். பெரும்பாலான இந்தியர்கள் தரத்தில் அதிக அக்கரை காட்டுவதில்லை. அனுபவம் இல்லாதவர்களிடம் இருந்து மோசமான சிகிச்சை பெறுகின்றனர். வாடிக்கையாளர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவது மிகப்பெரிய சவால்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக, வாடிக்கையாளர்கள் சரியான முடிவை எடுக்க வழிகாட்டுவதில் கவனம் செலுத்துகிறோம். யூடியூப்பில் தகவல் வீடியோக்களை உருவாக்கி பகிர்கிறோம்.
தலைமுடி பொருத்துவது என்பது ஒரு கலை. இதில் தினமும் எங்கள் திறனை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துகிறோம். ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்காவில் விரிவாக்கம் செய்ய உள்ளோம்.
ஆங்கில கட்டுரையாளர்: பாலக் அகர்வால் | தமிழில்-சைபர்சிம்மன்