இந்தியர்கள் கொரோனா வைரஸ் பற்றி சரியாக புரிந்து கொண்டுள்ளார்களா?
கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து பெரும்பாலான இந்தியர்கள் அறிந்திருந்தாலும், 34% பேர் இதற்கு சிகிச்சை இல்லை என்பதை அறிந்திருக்கவில்லை என்றும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றி 85 சதவீத இந்தியர்கள் அறிந்துள்ளனர் என்றாலும், இந்த வைரஸ் தொடர்பான அதிக விவரங்களை அறியாமல் இருக்கின்றனர் என்றும், இந்த வைரஸ் தாக்குதலுக்கு சிகிச்சை இல்லை என்பதால், இன்னமும் விழிப்புணர்வு தேவை என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது.
சீனாவில் பாதிப்பை ஏற்படுத்தி, உலக நாடுகளுக்கும் பரவி வரும் கொரோனா வைரஸ் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் வூஹன் நகரில் துவங்கிய இந்த வைரஸ், ஐரோப்பா மற்றும் அமெரிக்காவுக்கும் பரவியுள்ளது. சீனாவில் 78,824 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நோய்க்கு இதுவரை 2,788 பேர் பலியாகியுள்ளனர்.
இந்த வைரஸ் வெகு வேகமாக பரவி வருவதாகவும், தொற்று நோய் அபாயம் கொண்டிருப்பதாகவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இந்நிலையில், இந்த வைரஸ் தொடர்பாக இந்தியர்கள் மத்தியில் எந்த அளவு விழிப்புணர்வு இருக்கிறது என்பதை அறிய ஸ்மார்ட் டெக் சார்ந்த மருத்துவ நல நிறுவனமான GOQii ஆய்வு நடத்தியது.
நாடு முழுவதும் 10,000 பேர் மத்தியில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், பெரும்பாலான இந்தியர்கள் இந்த வைரஸ் பாதிப்பு குறித்து அறிந்திருந்தாலும், வைரஸ் குறித்து அதிக விவரங்கள் அறியாதவர்களாக இருக்கின்றனர் என தெரிய வந்துள்ளது. மேலும், 35 சதவீதம் பேர் இந்த வைரசுக்கு சிகிச்சை இல்லை என்பதை அறிந்திருக்கவில்லை.
ஆய்வில் தெரிய வந்த மற்ற முக்கிய அம்சங்கள் வருமாறு:
- வைரஸ் பாதிப்பு குறித்து பலரும் அறிந்திருந்தாலும், பாதிப்பின் தீவிரம் குறித்து விவரங்களை அறிந்திருக்கவில்லை. 35 சதவீதம் பேர் இந்த வைரஸ் தாக்குதலுக்கு சிகிச்சை இல்லை என்பதை அறியவில்லை. 34 சதவீதம் பேர் இந்த வைரஸ் சீனாவில் ஆயுவுக்கூடத்தில் பயோ இஞ்சினியரிங் முறையில் உருவாக்கப்பட்டதாக நினைக்கின்றனர்.
- 43 சதவீதம் பேர் இந்த வைரஸ் வவ்வாள்களில் இருந்து பரவியது என அறிந்துள்ளனர். 8.51 சதவீதம் பேர் வைரஸ் எப்படி வந்தது என அறியவில்லை.
- வைரஸ் தாக்குதல் தொடர்பான தகவல்கள் செய்திகளில் வெளியாகி இருந்தாலும், 14 சதவீதம் பேர் உடல் அரிப்பு ஒரு அறிகுறி என்றும், 6 சதவீதம் பேர் பல்வலி ஒரு அறிகுறி என்றும் நினைத்துக்கொண்டிருக்கின்றனர்.
- 85 சதவீதம் பேர் கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து அறிந்துள்ளனர் மற்றும் இந்தியாவில் இதன் பாதிப்பு நிலவரம் குறித்த தகவல்களையும் கவனித்து வருகின்றனர். 7 சதவீதம் பேர் இந்தியாவில் பாதிப்பு வராது என தெரிவித்துள்ளனர்.
- 77.62% பேர் தங்கள் கைகளை கழுவும் வழக்கம் கொண்டுள்ளனர். 63.59% பேர் கிருமி நாசினி பயன்படுத்துகின்றனர். 52.49% பேர் முகமுடி அணிந்துள்ளனர். 67.32% பேர், வைரஸ் பாதித்த நாடுகளுக்குசென்று வந்தவர்களை தவிர்த்து வருகின்றனர். 55.60% பேர் பயணங்களை தவிர்த்து வருகின்றனர். எனினும், 6.94% பேர் எவ்வித முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கின்றனர்.
- 38.19% பேர் மற்ற நாடுகளுக்குப் பயணம் செய்ய விரும்பவில்லை என கூறியுள்ளனர். 26.64% பேர் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு செல்ல மாட்டோம் என்று கூறியுள்ளனர். 6.57% பேர் பயண ஏற்பாடுகளை ரத்து செய்துள்ளனர்.
- பாதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு விமான நிலையங்களில் பரிசோதனை செய்யப்பட வேண்டும் என பலரும் தெரிவித்துள்ளனர். வைரஸ் தாக்குதல் தொடர்பான விழிப்புணர்வு பிரச்சாரத்தை அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.
- உலகம் முழுவதும் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 47% பேர் இந்தியாவில் வர்த்தகம் பாதிக்காது என தெரிவித்துள்ளனர். 53% பேர் ஏற்கனவே விற்பனை பாதித்துள்ளதாக கூறியுள்ளனர்.
வைரஸ் தாக்குதலை தடுக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கான பரிந்துரைகள் சில:
- நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த வேண்டும்.
- தினமும் ஒன்றிரண்டு பூண்டுகளை சாப்பிடவும்.
- புகைப்பதை முழுவதும் தவிர்க்கவும்.
- தவறாமல் உடற்பயிற்சி செய்யவும்.
- போதுமான தண்ணீர் குடிக்கவும்.
- சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரையை தவிர்க்கவும்.
- 6 முதல் 8 மணி நேரம் தூங்கவும்.
தொகுப்பு: சைபர்சிம்மன்