கொரோனா நோயாளிகளைக் காப்பாற்றும் ‘இந்தியாவின் ஆக்சிஜன் மனிதர்கள்’
சொந்த முயற்சியால் மக்களை ரட்சிக்கும் இருவர்!
இந்தியாவில் கொரோனா பாதிப்பு உச்சம் அடைந்துள்ள நிலையில், பல மாநிலங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவி வருகிறது. அதிலும் கொரோனா அதிகமாக பாதித்து வரும் குஜராத், மகாராஷ்ட்ரா போன்ற மாநிலங்களில் அனைத்து மருத்துவமனைகளிலும் ஏற்பட்டுள்ள ஆக்ஸிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இதனால் நோயாளிகள் அவதிப்படுவதும், உயிரிழப்புகள் அதிகமாகாவதும் நிகழ்ந்து வருகிறது. ஆக்சிஜன் உற்பத்தியை அதிகப்படுத்த நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தி இருக்கிறார். இதற்காக பல கட்ட ஆலோசனைகளை நடத்தியும் வருகிறார்.
ஆக்சிஜன் பற்றாக்குறையை போக்க வெளிநாடுகள், பல்வேறு தனியார் பெரு நிறுவனங்கள் முன்வந்துள்ளதை போன்று சில தனிநபர்களும் தங்களால் முடிந்தவரை ஆக்சிஜன் சிலிண்டரை நோயாளிகளுக்கு வழங்கி, உயிர்களைக் காப்பாற்றி வருகின்றனர்.
அவர்களில் முக்கியமானவர்கள் மும்பையைச் சேர்ந்த ஷாஹனாவாஸ் என்ற இளைஞர், மற்றும் பீகார் மாநிலம் பாட்னாவைச் சேர்ந்த கவுரவ் ராய் என்ற இருவர்.
மும்பையின் மலாட் நகரில் வசிப்பவர் இளைஞர் ஷாஹனாவாஸ். இவரின் நண்பரின் மனைவி கடந்த ஆண்டு கொரோனா பாதிக்கப்பட்டு, மூச்சுத்திணறல் ஏற்பட, ஆக்சிஜன் கிடைக்காமல் உயிரிழந்துவிட்டார். இந்த சம்பவத்துக்கு பின்,
ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக யாரும் உயிரிழக்கக் கூடாது என்பதற்காக ரூ.22 லட்சம் மதிப்புள்ள தனது எஸ்யூவி காரைவிற்று அதில் கிடைத்த பணத்தில் 160 சிலிண்டர்களை வாங்கி இருக்கிறார்.
பின் தன் நண்பர்கள் மூலம் குழு ஒன்றையும் அமைத்த ஷாஹனாவாஸ், கூடவே ஹெல்ப்லைன் நம்பர் ஒன்றை வெளியிட்டு அதன்மூலம் ஆக்சிஜன் சிலிண்டர் கேட்பவர்களுக்கு உதவி வருகிறார். எவரேனும், தொலைபேசியில் அழைத்தால் போதும், அவர்களுக்கு ஆக்சிஜன் சிலிண்டர்களை அவர்களின் இடத்துக்கே சென்று வழங்கி வருகிறார்.
இப்படி கடந்த ஆண்டில் இருந்து தற்போது வரை சுமார் 4000 பேர் உயிர் பிழைக்க, ஷாஹனாவாஸ் காரணமாக இருந்துள்ளார்.
இவரைப்போலவே பீகார் தலைநகர் பாட்னாவைச் சேர்ந்த கவுரவ் ராய். கடந்த 2019ல் பக்கவாதம் காரணமாக இவர் முடங்கிப்போக ஒருகட்டத்தில் ஆற்றில் குறித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். ஆனால் சில நிமிடங்களில் மனம் மாற வீடு திரும்பியிருக்கிறார். அதன்பின் சிகிச்சையில் குணமானவர், மீண்டும் ஒரு துயரத்தில் சிக்கி இருந்துள்ளார். அது கொரோனா பாதிப்பு என்னும் கொடூரம்.
கடந்த ஆண்டு ஏற்பட்ட முதல் அலையில் இவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருந்துள்ளது. அதன்படி பாட்னாவின் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சென்றபோது இவருக்கு படுக்கை வசதி கிடைக்கவில்லை. கூடவே ஆக்சிஜன் வசதியும் இல்லை.
இதனால் மருத்துவமனையின் படிக்கட்டுக்கு கீழே இருந்து சிகிச்சை எடுத்துவந்தவர் மூச்சுத்திணறல் அதிகமாக ஆக்சிஜன் சிலிண்டர் இல்லாமல் வெகுவாக அவதிப்பட்டுள்ளார். கிட்டத்தட்ட மரணத்தின் விளிம்பு வரை சென்ற அவரை அவரின் மனைவி கடைசி நேரத்தில் ஆக்சிஜன் சிலிண்டர் ஏற்பாடு செய்து கொண்டுவர அதன்பிறகே உயிர் தப்பியுள்ளார்.
இந்த தருணத்தில் இருந்து, தான் அனுபவித்த கஷ்டத்தை யாரும் அனுபவிக்கக்கூடாது என எண்ணி, தன் வீட்டின் ஒரு பகுதியிலேயே, சிறிய அளவில் ஆக்சிஜன் வங்கியை உருவாக்கியவர், அதனை கொண்டு உதவி தேவைப்படுபவர்களுக்கு கொடுத்து வருகிறார்.
10 ஆக்சிஜன் சிலிண்டருடன் தொடங்கப்பட்ட இவரின் உற்பத்தி வங்கி தற்போது 200 ஆக்சிஜன் சிலிண்டர்கள் உற்பத்தி செய்யும் அளவுக்கு மாறியுள்ளது. ஆக்சிஜன் தேவைப்படுபவர்களுக்கு தனது காரில் கொண்டுபோய் சிலிண்டரை வழங்கி, அவர்களுக்கு அதை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதையும் சொல்லிக்கொடுத்து வருகிறார்.
பின்னர் சம்பந்தப்பட்ட நோயாளி குணமான பின்னரே, ஆக்சிஜன் சிலிண்டர்களை அவர்களிடம் இருந்து திருப்பி வாங்குகிறார். இதற்காக அவர் ஒரு பைசாகூட நோயாளிகளிடம் இருந்து வசூலிப்பதில்லை. ஷாஹனாவாஸ் மும்பையில் மட்டும் உதவி வருகிறார் என்றாலும் கவுரவ் ராயோ பீகார் முழுவதும் சென்று உதவிகளை வழங்கி வருகிறார். இதுவரை கவுரவ் 900 பேரை காப்பாற்றியிருக்கிறார்.
இப்போது சொல்லுங்கள் இவர்கள் இந்தியாவின் ஆக்சிஜன் மனிதர்கள் தானே..!