பணத்தைத் திருடி ஏழைகளுக்கு உதவி: டெல்லியின் ‘ராபின் ஹூட்’ கதை!
பணத்தை திருடி, சுகாதார மையங்கள், ஏழைகள் என பல்வேறு தரப்பினருக்கும் உதவிய பீகாரைச் சேர்ந்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர். இந்த வழக்கு பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் குறிப்பாக டெல்லி, பஞ்சாப் என பல திருட்டு வழக்குகளில் சிக்கியவர் பீகாரைச் சேர்ந்த முகமது இர்ஃபான். இவர் தான் திருடிய பணத்தை, தனக்குப் பிடித்த விலையுயர்ந்த கார்க்களை வாங்குவதற்காகவும், மற்றவர்களுக்கு உதவும் வகையிலும் பயன்படுத்தியுள்ளார்.
பலநாள் திருடன் ஒருநாள் அகப்படுவான் என்ற பழமொழிக்கேற்பட டெல்லியில் பாலம் ஒன்றில் நின்று கொண்டிருக்கும் போது காவல்துறையால் கையும் களவுமாக கைது செய்யப்பட்டுள்ளார் இர்ஃபான்.
திருடிவிட்டு வீட்டிற்கு திரும்பிய பிறகு, ஏழைகள் மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடை அளித்ததுள்ளார். மேலும் திருடிய பணத்தைக் கொண்டு சுகாதார முகாம்களையும் இர்பான் அமைத்துள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் பீகாரிகள் உள்ள தனது சொந்த மாவட்டமான சீதாமாரியில் ஜில்லா பரிஷத் தேர்தலில் போட்டியிடும் திட்டத்துடன் இருந்தார். தேர்தலில் போட்டியிட்டு வளர்ந்து அரசியல்வாதியாகி விட்டால், வழக்குகளை எளிதாக எதிர்கொண்டுவிடலாம் என்று திட்டம் திட்டியிருந்தார். ஆனால் அதற்குள் காவல்துறை கைது செய்துவிட்டது. இருப்பினும் தனது திட்டத்தில் அவர் உறுதியாக இருக்கிறார்.
தனது நலப்பணிகளுக்காக, ’ராபின்ஹுட்’ என்ற அடைமொழியை பெற்றுள்ளார் இவர். எப்படி சிக்கினார் என்பது குறித்து டெல்லி குற்றப்பிரிவு டிசிபி மோனிகா பரத்வாஜ் கூறுகையில்,
“டெல்லியில் உள்ள நாரைனா மேம்பாலம் அருகே நின்றுகொண்டிருந்த போது, காவல்துறையால் அடையாளம் காணப்பட்டு கைது செய்யபட்டார் என தெரிவித்தார். அவரிடமிருந்து ஜாகுவார் மற்றும் இரண்டு விலையுயர்ந்த நிசான் கார்களை மீட்டெடுத்ததாகவும் காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.”
இர்ஃபானை பொறுத்தவரை. அவர் தலைமையிலான கும்பல், பூட்டப்பட்டுள்ள ஆடம்பரமான வீடுகளை மட்டுமே குறி வைத்து திருடி வந்துள்ளது. இருப்பவர்கள் வீட்டிலிருந்து திருடி இல்லாதவர்களுக்கு கொடுத்தோம் என்றும் அவர் விசாரணையில் கூறியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதேபோல வீடுகளுக்குள் புகுந்தவர்கள், பணம், நகைகளை திருடிவிட்டு, மற்றவர்களுக்கு தொந்தரவு கொடுக்காமல் வெளியேறிவிடுவார்களாம்…
தொகுப்பு: மலையரசு