‘2025-ம் ஆண்டில் ரூ.700 கோடி முதலீடு' - ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனம் அறிவிப்பு!
நிதி திரட்டல் மூலம் வசதிகளை மேம்படுத்த திட்டம்!
சுற்றுச்சூழலை காக்கும் பொருட்டு மின்சார வாகனங்களை ஊக்குவிக்க மத்திய அரசு முடிவெடுத்து, அதனடிப்படையில் மின்சார வாகன உற்பத்தி நிறுவனங்களுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளது. இதனால் நிறைய நிறுவனங்கள் இந்தியாவில் மின்சார வாகன முதலீட்டில் ஈடுபட்டுள்ளன.
ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் இந்த மாத இறுதியில் தனது உற்பத்தியை தொடங்கும் என அறிவித்துள்ளது. இதற்கிடையே, ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனம்,
2025 ஆம் ஆண்டில் ரூ.700 கோடியை முதலீடு செய்யவும், அதன் வர்த்தக விரிவாக்கத்தை புதுப்பிக்க, ஒரு புதிய உற்பத்தி அலகு அமைப்பது உட்பட, அதற்காக 220 கோடி ரூபாய் திரட்டப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளது.
லூதியானாவில் உள்ள தற்போதைய ஆலையில் உற்பத்தியை 75,000 யூனிட்டுகளிலிருந்து ஆண்டுக்கு 3 லட்சம் யூனிட்டாக உயர்த்துவதோடு, 10 லட்சம் யூனிட் விற்பனைக்கு இலக்கு வைத்துள்ளது. 10 லட்சம் யூனிட் திறன் கொண்ட புதிய உற்பத்தி வசதியை 2025-26 ஆண்டுக்குள் அமைக்கவும் திட்டமிட்டுள்ளது.
மேலும், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு (ஆர் அன்ட் டி), மார்க்கெட்டிங், டீலர் நெட்வொர்க் விரிவாக்கம், அதன் விநியோகச் சங்கிலி, சேவை நெட்வொர்க் மற்றும் சார்ஜிங் நிலையங்களை விரிவுபடுத்தவும் திட்டமிட்டுள்ளது அந்த நிறுவனம்.
இது தொடர்பாக பேசியுள்ள, ஹீரோ எலெக்ட்ரிக் நிர்வாக இயக்குனர் நவீன் முஞ்சல்,
“எங்கள் திறனை 75,000 யூனிட்டுகளிலிருந்து சுமார் மூன்று லட்சம் யூனிட்டுகளாக விரிவுபடுத்துகிறோம். இதை நாங்கள் கட்டமைக்கும்போது, அடுத்த வசதியையும் நாங்கள் திட்டமிட்டுள்ளோம், இது ஆண்டுக்கு ஒரு மில்லியன் யூனிட்டுகளாக இருக்கும். இது விரைவில் நிகழும். அடுத்த இரண்டு ஆண்டுகளில், 2025 வரை, சுமார் 700 கோடி ரூபாய் முதலீடு செய்வோம், என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.”
உற்பத்தி நிலையம் முதல் ஆர் அன்ட் டி, தொழில்நுட்பம், தயாரிப்பு மேம்பாடு, சந்தைப்படுத்தல், டீலர் விரிவாக்கம், விநியோகச் சங்கிலி மற்றும் சேவை நெட்வொர்க் என சார்ஜிங் நிலையங்களைத் தவிர, ஒவ்வொரு துறையிலும் நாங்கள் வசதிகளை விரிவுபடுத்தி வருகிறோம். இதற்கான நிதியை திரட்டி இருக்கிறோம்.
திரட்டப்பட்ட புதிய நிதி விரிவாக்கத்திற்கான உடனடித் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக இருக்கும். என்றாலும் இன்னொரு பெரிய நிதி திரட்டல் செய்ய வேண்டியிருக்கும். இது மிகப் பெரியதாக இருக்கும். ஒருவேளை அடுத்த ஆண்டு உற்பத்தி மற்றும் சந்தையின் அடிப்படையில் விரிவாக்கத்திற்காக்க நிதித் திரட்டல் இருக்கும், என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
தகவல் : பிடிஐ | தமிழில்: மலையரசு